2002-ம் ஆண்டு தமிழில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘சார்லி சாப்ளின்’.
இந்தப் படத்தில் நடிகர் பிரபுதேவா, நடிகர் பிரபு, காயத்ரி ரகுராம், அபிராமி, மோனல், லிவிங்ஸ்டன், விந்தியா, சின்னி ஜெயந்த் உட்பட பெரிய நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்தனர். படம் முழுவதும் நிரம்பியிருந்த நகைச்சுவையினால் படம் பெரிதும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தை இயக்குநர் ஷக்தி சிதம்பரம் இயக்கியிருந்தார்.
தமிழில் மட்டுமில்லாமல் இந்தியாவின் பல மொழிகளிலும் இத்திரைப்படம் மொழி மாற்றம் செய்யப்பட்டு அனைத்து மொழிகளிலும் அமோக வெற்றியைப் பெற்றது.
இந்தியில் சல்மான்கான் நடிப்பில் ‘நோ எண்ட்ரி’, தெலுங்கில் ‘பெல்லம் ஊர் எல்தே’ மலையாளத்தில் ஜெயராம், பாவனா நடிப்பில் ‘ஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ்’, கன்னடத்தில் ரமேஷ் அரவிந்த் நடிப்பில் ‘அல்லா புல்லா சுல்லா’ மற்றும் போஜ்பூரி, ஒரியா, மராத்தி ஆகிய இந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப்பட்டு மாபெரும் வசூல் சாதனையை ஏற்படுத்தியது.
இப்போது இதே படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகிறது. இந்தப் படத்தை தமிழில் தொடர்ந்து பல படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் முன்னணி பட நிறுவனமான தயாரிப்பாளர் டி.சிவாவின் அம்மா கிரியேசன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
‘சார்லி சாப்ளின்’ முதல் பாகத்தில் நாயகனாக நடித்த பிரபுதேவாவே இந்த இரண்டாம் பாகத்திலும் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நிக்கி கல்ராணி, அதா ஷர்மா இருவரும் நடிக்கிறார்கள். பிரபல இந்தி நடிகையான அதா ஷர்மா தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது. மற்ற நட்சத்திரங்கள் பற்றி பின்னர் அறிவிக்க உள்ளனர்.
‘சார்லி சாப்ளின்’ முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் ஷக்தி சிதம்பரமே, இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.
ஒளிப்பதிவு – செளந்தர்ராஜன், இசை – அம்ரீஷ், பாடல்கள் – யுகபாரதி, ஷக்தி சிதம்பரம். கலை – ஆர்.கே.விஜய் முருகன், நடனம் – ஜானி, படத் தொகுப்பு –பென்னி, வசனம் – கிரேஸி மோகன், தயாரிப்பு – T.சிவா, எழுத்து, இயக்கம் – ஷக்தி சிதம்பரம்.
இயக்குநர் ஷக்தி சிதம்பரம் படம் என்றாலே காமெடி கொஞ்சம் தூக்கலாக இருக்கும். அத்துடன் கமர்ஷியலும் சரிசமமாக கலக்கப்பட்டிருக்கும். “இந்தப் படமும் அப்படியே இருக்கும்” என்கிறார் இயக்குநர்.
படம் பற்றி இயக்குநர் ஷக்தி சிதம்பரம் பேசம்போது, “பிரபு தேவா -நிக்கி கல்ராணி இருவருக்கும் திருப்பதியில் திருமணம் நடக்க இருக்கிறது. அதற்காக பிரபுதேவா குடும்பமும் நிக்கி கல்ராணி குடும்பமும் திருப்பதிக்கு போகும் போதும், அங்கு போய் சேர்ந்த பிறகும் நடக்கும் சம்பவங்களின் கலகலப்பான தொகுப்பே இந்த ‘சார்லி சாப்ளின்-2’ திரைப்படம். ‘திருப்பதிக்கு போனால் திருப்பம் வரும்’ என்பார்கள். அது என்ன திருப்பம் என்பதுதான் படத்தின் சஸ்பென்ஸ்..” என்றார்.
“உலக சினிமாவின் காமெடி மேதையான சார்லி சாப்ளினின் 125-வது பிறந்த நாள் விழா இந்த வருடம் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இந்தப் படம் உருவாகுவது அவருக்கு மரியாதை செலுத்தும்விதமாக இருக்கும்…” என்கிறார் தயாரிப்பாளா் T.சிவா.
தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது.









