திரைப்பட தணிக்கை வாரியம் சினிமாக்களை ‘யு’, ‘ஏ’, ‘யு/ஏ’ என்று மூன்றுவிதமாக சர்டிபிகேட் கொடுத்து வெளியிட அனுமதி கொடுத்தாலும், இந்த சர்டிபிகேட்டுகளை வழங்குவதில் ஊழலும், லஞ்சமும் விளையாடுவதாக சமீப காலமாக புகார்கள் வந்து கொண்டேயிருந்தன.
ஏனெனில் கடந்த சில ஆண்டுகளில் மோசமான காட்சியமைப்புகளை கொண்ட சில படங்களுக்கு யு சர்டிபிகேட் கிடைத்திருக்கிறது.. உதாரணம் ‘கந்தசாமி’, ‘நடுநசி நாய்கள்’. பல நல்ல படங்களுக்கு ‘ஏ’ சர்டிபிகேட் கிடைத்துள்ளது.
ஒரேயொரு வசனத்திற்காக ‘ஏ’ சர்டிபிகேட் வாங்கிய படங்களெல்லாம் உண்டு. முந்தைய ஆண்டுகளில் இந்த ‘யு’, ‘யு/ஏ’ சர்டிபிகேட் படங்களுக்கு கேளிக்கை வரிவிலக்கு கிடைத்ததால் இந்த சர்டிபிகேட்டை வாங்க தயாரிப்பாளர்கள் முனைந்து வேலை பார்த்தார்கள். இப்போதுதான் தணிக்கை வாரியம் சார்பில் படத்தை பார்க்கும் உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் பழக்கமும் அறிமுகமானது.. இது இப்படியே கடந்த 10 ஆண்டுகளில் பெருகி லஞ்சம் இல்லாமல் சென்சார் சர்டிபிகேட்டே இல்லை என்கிற நிலைமைக்கு வந்து நின்றது.
சினிமா தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் இது நன்கு தெரிந்தும் எப்படியோ சர்டிபிகேட் கைக்கு கிடைத்தால் போதும் என்று நினைத்து இந்த லஞ்சத்தை அவர்களும் ஊக்குவித்தார்கள்.. இரண்டாண்டுகளுக்கு முன்பாக சென்னை சென்சார் போர்டு தலைவர் ஒரு படத்திற்கு லஞ்சம் கேட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு இப்போதும் நடந்து வருகிறது.
இப்போது மத்திய மத்திய திரைப்பட தணிக்கை வாரிய தலைமை செயல் அதிகாரியே லஞ்சம் கேட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
‘மோர் தாகி கே பிகாவ்’ என்ற சத்தீஷ்கார் மாநில மொழிப் படம், தணிக்கைக்காக ராகேஷ் குமாரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்படம், ஆகஸ்டு 15–ந் தேதி வெளியாவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டதால், அதற்கு அவசரமாக தணிக்கை சான்றிதழ் பெற படத் தயாரிப்பாளர் விரும்பியிருக்கிறார்.
அவருடைய அவசரத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த நினைத்த ராகேஷ் குமார் 70 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் சர்டிபிகேட் தருகிறேன் என்று பேரம் பேசியிருக்கிறார். இதனை ஸ்ரீபதி மிஸ்ரா என்ற ஏஜெண்டு மூலமாக கொடுக்கும்படியும் சொல்லியிருக்கிறார். இது பற்றி தணிக்கை வாரியத்தின் மற்றொரு ஏஜெண்டு சி.பி.ஐ.யில் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து, சி.பி.ஐ. அதிகாரிகள், சம்பந்தப்பட்டவர்களை பொறி வைத்து பிடிக்க திட்டமிட்டனர். அதன்படி, கடந்த 14–ந் தேதி ராகேஷ் குமார் சார்பில் ஏஜெண்டு ஸ்ரீபதி மிஸ்ரா, தணிக்கை வாரியத்தின் ஆலோசனை குழு உறுப்பினர் சர்வேஷ் ஜெய்ஸ்வால் ஆகியோர் ரூ.70 ஆயிரம் ரூபாய் லஞ்சப் பணத்தை வாங்கியபோது, இருவரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கையும், களவுமாக கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து தணிக்கை வாரிய தலைமை செயல் அதிகாரி ராகேஷ் குமாரின் வீட்டில் சோதனை நடத்தினர். அவரிடம் துருவித் துருவி விசாரணை நடத்தினர். அதில், அவர் லஞ்சம் கேட்டதற்கு ஆதாரம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, மும்பையில், மத்திய திரைப்பட தணிக்கை வாரிய தலைமை செயல் அதிகாரி ராகேஷ் குமாரை நேற்று மாலை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தான் லஞ்சம் வாங்கி சர்டிபிகேட் கொடுத்த படங்களையும், தயாரிப்பாளர்களின் பெயர்களை அவர் சி.பி.ஐ.யிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதில் ஒரு சுவையான விஷயம்.. இந்த ராகேஷ்குமார் கடந்த ஜனவரி மாதம்தான் இந்த மத்திய திரைப்பட தணிக்கை வாரியா தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கு முன்பு இவர் இந்திய ரெயில்வேயின் மத்திய பணியாளர் அதிகாரியாக வேலை பார்த்திருக்கிறார்.
இவருக்கும் திரைப்படத் துறைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா..? ஒரு துறையை மேம்படுத்த வேண்டுமெனில் அத்துறை சம்பந்தப்பட்டவர்களைத்தான் தலைமைப் பதவிக்கு உட்கார வைக்க வேண்டும்.. வெறுமனே உயர் பதவியில் இருக்கிறார்களே என்று துறை மாற்றி அமர வைத்தால் வருபவர்கள் இதைத்தான் செய்வார்கள்..!