கத்தி படத்தில் விஜய் மீடியாக்களிடம் பேசும் அந்த 4 நிமிட வசனக் காட்சி ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.
ஆனால் அதிலிருக்கும் உள் அரசியலை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. 2-ஜி வழக்கு பற்றி பேசும்போது அதுவரையிலும் மீடியாக்களை பார்த்து பேசும் விஜய், இப்போது சட்டென திரையை பார்த்து திரும்பி அதாவது கேமிராவுக்கு நேரடியாக முகத்தைக் காண்பித்து “வெறும் காத்தை வைச்சே 2-ஜி திட்டத்துல ஊழல் செஞ்ச நாடு இது…” என்றார்.
ஊழல் என்கிற பட்சத்தில் இது பாராட்டுக்குரிய வசனம்தான். தைரியமாக வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த 2-ஜி வழக்கு இப்போதும் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இன்னமும் தீர்ப்பு வந்தபாடில்லை. ஆனால் அதற்குள்ளாக அதில் ஊழல் நடந்திருக்கிறது என்று ஆணித்தரமாகச் சொல்வது போல இருக்கும் வசனம் சட்டென்று பலரது மனதையும் நெருடியிருக்கிறது.
இப்போது மதுரை நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கு பதிவாகியுள்ளதாம்.
மதுரை என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர், வக்கீல் ராமசுப்பிரமணியன். இவர் மதுரை மாவட்ட 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கத்தி படத்திற்கு எதிராக ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், கடந்த 27-ம் தேதியன்று மதுரையில் ஒரு தியேட்டரில் நடிகர் விஜய் நடித்த ‘கத்தி’ திரைப்படம் பார்த்தேன். அந்த படத்தில் டெல்லி சிறப்பு கோர்ட்டில் நடந்து வரும், 2 ஜி வழக்கை சுட்டிக்காட்டி வசனம் பேசப்படுகிறது. நிலுவையில் உள்ள அந்த வழக்கை பற்றி அவர் “2-ஜி-ன்னா என்னானு தெரியுமா? வெறும் காத்த மட்டும் வச்சு கோடி கோடியா கொள்ளையடிச்சவங்க உள்ள ஊருடா…” என்று இந்தியாவைப் பற்றியும் நாட்டை ஆட்சி செய்தவர்களை பற்றியும் இந்த திரைப்படத்தில் கேவலமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கை பற்றி பிரபல ஊடகமான திரைப்படத்தில் பிரபலமான நடிகர் விஜய் பேசியுள்ளார். இது தற்போதைய அரசின் ஆதாயத்தை தேட வேண்டும் என்ற எண்ணத்தில் பேசியது. நீதித்துறையை அவமதிக்கும் செயல். உலக அரங்கில் இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் செயல். இந்தியா ஊழல் நிறைந்த நாடு என்று சித்தரித்து இந்த திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டதாக தெரிய வருகிறது.
திரைப்படத்தை எடுத்தவர்கள், சட்டம் படித்த நீதிபதி போலவும், தாங்களே 2-ஜி வழக்கில் தீர்ப்பு வழங்கிவிட்டதை போலவும் பேசியவிதம் சட்டத்தை மதித்து நடக்கும் அனைவருக்கும் மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது.
எனவே அந்த திரைப்பட நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், லைகா புரொடக்சன்ஸ் தலைமை நிர்வாகி, திரையரங்கு நிர்வாகி ஆகியோரை இந்திய தண்டனை சட்டம் 500-ன்படி தண்டிக்க வேண்டும்..” என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று மாஜிஸ்திரேட்டு மாரீசுவரி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அவர், சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுவிட்டு விசாரணையை அடுத்த மாதம் 11-ந்தேதிக்குஒத்தி வைத்தார்.
இதில் ஒரு சுவையான விஷயம்.. ஊழல் என்பதால் நாட்டில் இருக்கும் ஊழல்களையெல்லாம் பட்டியலிட்ட விஜய், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு பற்றி மூச்சுகூட விடவில்லை என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்..!
ஊழல் பற்றி செய்தியிலும் செலக்டிவ் அம்னீஷியாவா..?