ஒரு திரைப்பட இயக்குநர் மீது போலீஸில் மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு வெளியான படம் ‘ஈகோ’. இப்படத்தின் FMS ஓவர்சீஸ் உரிமை, அதாவது வெளிநாடுகளில் வெளியீடு செய்யும் உரிமையை FCS கிரியேஷன்ஸ் வாங்கியிருந்தது.
அதுவும் முதலில் உரிமை பெற்ற வேந்தர் மூவிஸ் நிறுவனத்திலிருந்து விநாயகம் என்பவர் உரிமை வாங்கியிருந்தார். அவரிடமிருந்து சங்கரநாராயணன் என்பவர் வாங்கியிருந்தார். அவரிடமிருந்துதான் FCS கிரியேஷன்ஸ் பெற்றிருந்தது.
‘வீரசேகரன்’, ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’, ‘பாக்கணும்போல இருக்கு’, ‘தொட்டால் தொடரும்’ ஆகிய படங்களின் தயாரிப்பு நிறுவனமான FCS கிரியேசன்ஸ் சார்பில் அதிகாரப்பூர்வமாக, சேதுராமன் என்பவர் இந்த FMS ஓவர்சீஸ் உரிமையைப் பெற்றிருந்தார்.
மலேசியாவில் படத்தை வெளியிட மலேசியாவின் ஆஸ்ட்ரோ டிவியை FCS Creations சார்பில் அணுகியிருக்கின்றனர். அதே நேரத்தில் இன்னொருவரும் தங்களிடம் ‘ஈகோ’ பட உரிமை இருப்பதாக அங்கே சென்றிருக்கிறார். இருவரில் யாரிடம் இருக்கும் படம் அதிகாரப்பூர்வமானது என்று தெரியாமல் குழம்பிய ஆஸ்ட்ரோ டிவி நிர்வாகம் FCS Creations நிர்வாகத்திடம் இது பற்றிச் சொல்லி விபரம் கேட்டுள்ளது.
தாங்கள் உரிமை பெற்றுள்ளதாக ஆஸ்ட்ரோ டிவி நிர்வாகத்திடம் கூறிய அந்த நபர், படத்தின் இயக்குநர் சக்திவேல் கொடுத்ததாக ஒரு கடிதத்தை மட்டுமே ஆதாரமாகக் காட்டியிருக்கிறார். அது ஒரு சாதாரண லெட்டர் பேட் கடிதம் மட்டுமே. அதில் தயாரிப்பாளர் கையெழுத்து மட்டுமே இருந்தது. எவ்வித சட்டப்பூர்வமான நடைமுறைகளும் பின்பற்றப்படவில்லை. இது குறித்து விளக்கம் கேட்பதற்காக சக்திவேலைத் தேடியபோது போன் ஸ்விட்ச் ஆப். தயாரிப்பாளரும் அப்படியே… ஆள் அகப்படவில்லை.
வேந்தர் மூவிஸில் கேட்டபோது, “நாங்கள் சட்டப்பூர்வமாகவே… முறைப்படியே முதலில் விநாயகம் என்பவரிடம் உரிமையை விற்பனை செய்துள்ளோம்..” என்றார்கள்.
பொறுத்துப் பார்த்த சேதுராமன் ஆர்.5 விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ‘ஈகோ’ படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சக்திவேல் மீது மோசடி, ஏமாற்றுதல் 420 மற்றும் 506-1 பிரிவுகளில் புகார் செய்துள்ளார்.
போலீஸ் நிலையத்தில் முறைப்படியான விசாரணை துவங்காததால் தயாரிப்பாளர் சேதுராமன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார். பின்னர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி இப்போது ஆர்.5 விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருகம்பாக்கம் போலீசார் தலைமறைவாக இருக்கும் ‘ஈகோ’ படத்தின் இயக்குநர் சக்திவேலைத் தேடி வருகிறார்களாம்.