கேப்டன் விஜயகாந்த் மீண்டும் அரிதாரம் பூச கிளம்பியிருக்கிறார். ‘தமிழன் என்று சொல்’ என்கிற புதிய தமிழ்ப் படத்தில் தனது இளைய மகன் சண்முகப்பாண்டியனோடு இணைந்து நடிக்கிறார்.
இந்த புதிய படத்தின் பூஜை நிகழ்ச்சி இன்று காலை வடபழனி ஆர்.கே.வி.தியேட்டரில் நடைபெற்றது.
இதில் விஜயகாந்த் பேசும்போது, “அரசியல்ன்னு வந்தாச்சு. இனிமேல் நடிக்கக் கூடாதுன்னு இருந்தேன்.. அப்போதுதான் இந்த இயக்குநர் வந்து கதை சொன்னார். கதையை எனது மனைவியும் பெரிய மகன் விஜய பிரபாகரனும் கேட்டனர். கேட்டுவிட்டு ஆச்சரியப்பட்டு போய் என்னிடம் “நீங்க இதுல நடிக்கணும்..” என்று சொன்னார்கள். அரை மணி நேரம் யோசிச்சேன்.
‘கட்சி, போராட்டம்ன்னு அப்பா வெளில போகணுமே’ன்னு சொன்னேன். ‘ஏன் போறீங்க?’ன்னு கேக்குறான் பெரிய மகன். ‘அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. நீங்கதான் இதை பண்றீங்க.. பண்றீங்க’ன்னு அடிச்சு சொல்லிட்டான். ‘ஏம்ப்பா தமிழ்நாட்ல வேற நடிகர்களே இல்லையா?’ன்னு கேட்டேன். “இல்ல ஸார்.. நீங்கதான் பண்ணணும்’ன்னு டைரக்டரும் சொன்னாரு..
அப்புறம் அவர்கிட்ட கதையைக் கேட்டேன். கதைல ஒரு வெறி இருந்து்ச்சு.. அதுலேயும் சண்முகப்பாண்டியனும் நடிக்கிறான் என்பதையும்தாண்டி தமிழ் மொழி பற்றிய படம்.. மொழியின் பெருமையைச் சொல்கிற படம் என்பதால்தான் இதில் நடிக்க ஒத்துக் கொண்டேன்.
இது தமிழ் மொழிப் படம். நல்ல கதை இருக்கிறது. எனக்கும் நடிக்கணும்னு ஒரு வெறி இருக்குது. அதனாலேயும் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
இந்தத் ‘தமிழன் என்று சொல்’ கதை இதுவரைக்கும் யாருக்காவது தெரியுமா..? தெரியலை. அதை தெரிய வைக்கிறதுக்காகவே இந்தப் படத்துல நடிக்கிறேன். நான் 35 வருஷமா இந்த சினிமால இருக்கேன். இங்க இப்போ என்ன நடக்குதுன்னு எல்லாமே எனக்குத் தெரியும்.
இந்தப் படத்தோட தயாரிப்பாளர் புதியவர் இல்லை. எனக்கு 30 வருஷமா தெரிந்தவர்தான். இந்தப் படம் மிக எழுச்சியான, புதுமையான படம். தமிழ் மொழிக்காக எடுக்கப்படவுள்ள படம். யார், யாரோ சொல்றான் நான் தமிழன்னு.. யாருக்கும் தெரியலை.. தமிழனுக்காக இப்படியொரு படம் எடுக்கணும்னு.. நான் எடுக்குறேன்..
இது முற்றிலும் தமிழ் மொழியைப் பெருமைப்படுத்தும் படம். தமிழ் மொழி தொடர்பான வசனங்கள்தான் அதிகமாக இருக்கும். அதே சமயம் பன்ச் வசனங்களும் கண்டிப்பாக இருக்கும். ஆனால் அரசியல் இருக்குமா என்று தெரியாது..” என்றார்.
தேர்தல் வரும் நேரத்தில் இந்தப் படம் திரைக்கு வரும் என்பது மட்டும் உறுதி..!