வாந்தியும், பேதியும் தனக்கு வந்தால்தான் தெரியுமென்பார்கள்.. அதை போல சினிமாவை வெளியில் இருந்து விமர்சித்துவிட்டு பின்பு அதே சினிமாவுக்குள் கால் பதித்து தடம் நடந்தால் எதிர்ப்படும் கேள்விகள் முன்பு வீசிய விமர்சனங்களாகவே இருக்கும். அதையும் இன்முகத்துடன் எதிர்கொள்ளத்தான் வேண்டும்.. இயக்குநர் கேபிள் சங்கருக்கும் இந்தச் சங்கடம் சமீபத்தில் நேர்ந்தது..!
அவர் இயக்கிய ‘தொட்டால் தொடரும்’ படத்தின் பிரஸ் மீட்டில் அவர் இதுவரையிலும் இணையத்தில் எழுதி வந்த விமர்சனங்களை முன் வைத்து சராமரியாக கேள்விகள் எழுப்பப்பட்டன.. அனைத்திற்கும் அமைதியாக, பொறுப்பாக பதிலளித்தார் கேபிள் சங்கர்.
“நான் பல படங்களை விமர்சனம் செய்து இருக்கிறேன். பாராட்டியும் இருக்கிறேன். நான் எழுதிய நல்லவைகளை விட்டு விட்டு, செய்த விமர்சனங்களை மட்டுமே நினைவில் வைத்திருக்கிறார்கள். நான் வெறும் விமர்சகன் என்று மட்டும் என்று சொல்லி விடவேண்டாம். சினிமாவில் 15 ஆண்டுகளாக இருக்கிறேன். பட விநியோகம், தியேட்டர் நிர்வாகம், திரைக்கதை, வசனம் எழுதுவது.. படத்தின் புரொடெக்சன் வேலை.. நாவல், சிறுகதை என எல்லாவற்றிலும் எனக்கு அனுபவம் உண்டு. அந்த அடிப்படையில்தான் இப்போது இந்தப் படத்தை இயக்கியிருக்கிறேன். எனது படத்திற்கும் விமர்சனம் நிச்சயம் வரும். அதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் இந்தப் படத்தில் விமர்சிக்கவே முடியாதபடி பல விஷயங்கள் இருப்பதால், என் படம் நிச்சயம் பேசப்படும்னு நம்புறேன். “என்றார்.
இணையத்தள விமர்சகர்கள் பலரும் திரையனுபவமே இல்லாமல், வெறுமனே காட்சி அனுபவத்தின் அடிப்படையிலேயே விமர்சிப்பதால் அவர்களுக்கென்ன தகுதியிருக்கிறது என்ற கேள்வி சமீப காலமாகவே திரையுலகில் எழுந்து வருகிறது. அதற்கு பதில் சொல்லும்விதமாக கேபிள் சங்கரின் இந்தத் ‘தொட்டால் தொடரும்’ இருக்கவேண்டும் என்று வாழ்த்துகிறோம்..!