full screen background image

“பட்ஜெட் 3 மடங்கு அதிகமாகிவிட்டது” – ‘விடுதலை’ படம் பற்றி இயக்குநர் வெற்றிமாறன் பேச்சு

“பட்ஜெட் 3 மடங்கு அதிகமாகிவிட்டது” – ‘விடுதலை’ படம் பற்றி இயக்குநர் வெற்றிமாறன் பேச்சு

ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எல்ரெட் குமாரின் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, விஜய்சேதுபதி, பவானிஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘விடுதலை’.

இசைஞானி இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. ‘இசை ஞானி’ இளையராஜாவின் பாடல்களோடு விழா தொடங்கியது.

இந்த விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது, “இந்த ‘விடுதலை’ படத்தின் தொடக்கமே ராஜா சார்தான். 45 நிமிடங்கள் படத்தை அவரிடம் காண்பித்தேன். அந்தக் காட்சிகளைப் பார்த்துவிட்டு ராஜா சார் இசையமைத்த பாடல்தான் படம் நெடுக ஒலிக்கும் ‘காட்டு மல்லி’ பாடல்.

இந்தப் பாடலுக்கு இசைமைக்கும்போதே, “இந்தப் பாடலை நானே எழுதுகிறேன்” என்று சொல்லிதான் எழுதினார். பின்னணி இசையையும் கேட்டேன். என் மனதில் ஒரு உணர்வு இருக்கிறது என்று அதை அவரிடம் விவரித்தேன். அதை அவர் உள்வாங்கி பாடலாக்கி ஒலியாக அதை எனக்கு மீண்டும் கொடுத்தபோது மீண்டும் அந்த உணர்வுதான் எனக்கு கிடைத்தது. அது மிகப் பெரிய அனுபவமாக இருந்தது.

ராஜா சாரின் மியூசிக்கல் மைண்ட் எப்படி வேலை செய்கிறது என்பதை அருகில் இருந்து பார்ப்பது எனக்கு கிடைத்த மிகப் பெரிய பரிசு என்று சொல்வேன். அவர் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள் எனக்கு மிகப் பெரிய கற்றல். நாங்கள் எல்லோருமே உங்கள் பாடல்களை கேட்டு வளர்ந்தவர்கள்தான். அந்த சந்தோஷத்தோடு உங்களை இசையை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம்.

இந்தப் படம் எல்லா வகையிலும் எல்லாருக்கும்  சவாலானதாக இருந்தது. இந்தப் படத்தில் வேலை பார்த்த என்னுடைய அணி, தொழில் நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் என அனைவருக்குமே நன்றி அனைவரும் மிக கடினமான உழைப்பை கொடுத்துள்ளனர். இந்த கதையை கொடுத்த ஜெயமோகன் சாருக்கு நன்றி. எந்த ஏரியாவில் கேட்டாலும் அவரிடம் ஏற்கனவே ஒரு கதை இருக்கும். அந்த அளவுக்கு எழுதி குவித்து இருக்கிறார்.

நான் அடிக்கடி கோபப்படுவேன். கோபம் என்பது என்னுடைய இயலாமைதான். அந்த நேரத்தில் அந்த கோபம் எல்லாம் என்னுடைய உதவி இயக்குநர்கள் மேல்தான் திரும்பும். இந்த சமயத்தில் அவர்களுக்கு நன்றியோடு சேர்த்து மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தப் படத்துக்கு முதலில் நான்கு கோடி ரூபாய்தான் பட்ஜெட் என்று தயாரிப்பாளர் எல்ரெட் குமாரிடம் சொல்லியிருந்தேன். ஆனால், இப்போது அதையும் தாண்டி மூன்று மடங்குவரை போய்விட்டது. அதை எல்லாம் கேட்காது, இந்தப் படத்தின் மீது அவர் ஒரு பார்வையும் நம்பிக்கையும் வைத்திருந்தார். அதுதான் முக்கியமானது.

சூரியை வைத்து ஒரு எளிய படம் எடுத்துக்கலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவர் உள்ளே வந்த பிறகு இன்னும் படம் பெரிதானது. சேதுவை வைத்து கிட்டத்தட்ட 65 நாட்கள் படம் பிடித்தோம். முதல் பாகத்தில் அவருடைய காட்சிகள் குறைவாக இருந்தாலும், அவரைப் பற்றித்தான் அதிகமாகப் பேசி இருப்போம். இரண்டாம் பாகத்தில் படம் முழுக்க வருகிறார் விஜய் சேதுபதி.

சில அரசியல் சிந்தனைகளை எல்லாம் படமாக்குவதற்கு விஜய் சேதுபதி போன்ற நடிகர்கள் இருப்பது மிகவும் நம்பிக்கை கொடுத்தது. 25 பக்க காட்சிகளை எல்லாம் இரண்டு மணி நேரத்தில் எடுத்து இருக்கிறோம். வசதியாக இருந்து பழகிய நடிகர்களுக்கு ‘விடுதலை’ போன்ற படத்தில் நடிப்பது மிகவும் சிரமமானது.

கௌதம் மேனன் நடிக்க உள்ளே வந்ததைவிட ராஜீவ் மேனன் நடிக்க ஒத்துக் கொண்டதுதான் ஆச்சரியமாக இருந்தது. அவரும் எளிதாக இந்த கதையில் ஒன்றிப் போனார். இந்த கதை என்னுடைய விருப்பம்தான். அதற்கு ஒத்துழைத்து வந்த அனைவருக்கும் நன்றி. என்னுடைய உழைப்பையும், வெற்றியையும் என்னுடைய குரு பாலு மகேந்திராவுக்கும் என்னுடைய அசிஸ்டன்ட்ஸ்க்கும் சமர்ப்பிக்கிறேன்” என்றார்.

Our Score