சென்ற வாரம் ‘அண்ணாத்த’ படமும் ‘எனிமி’ படமும் வெளியானதால் இந்த வாரம் வேறு புதிய பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் வெளியாக வாய்ப்பில்லை.
இந்த வாரமும் இதே இரண்டு படங்களும்தான் தியேட்டரில் ஓடும். ஆனால் இதுவும் இந்த வாரத்தோடு முடிந்துவிடும் அபாயம் இருப்பதால் அடுத்த வாரம் வெளியாகவிருக்கும் படங்களை இப்போதே உறுதி செய்துவிட்டார்கள்.
‘அண்ணாத்த’ படத்தை மிக அதிகம் பேர் குறுகிய காலமான 4 நாட்களிலேயே பார்த்து முடித்துவிட்டதால் இனி அந்தப் படத்திற்கு ரிப்பீட் ஆடியன்ஸோ, குடும்பத்தோடு வந்து பார்க்கும் புதிய பார்வையாளர்களோ வரப் போவதில்லை. இப்போதே பல தியேட்டர்களில் கூட்டம் பாதியாக குறைந்திருக்கிறது. அதோடு தமிழகம் முழுவதும் பரவலாக நிகழ்ந்து வரும் கன மழையும் கூட்டம் குறைவுக்கு ஒரு காரணமாகியிருக்கிறது.
இந்த நிலைமையில் அடுத்த வாரம் அதாவது நம்பர் 19-ம் தேதியன்று அருண் விஜய் நடித்திருக்கும் ‘பார்டர்’ படமும், சந்தானம் நடித்திருக்கும் ‘சபாபதி’ படமும் வெளியாகப் போவதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘குற்றம் 23’ படத்தை அடுத்து அருண் விஜய்யும், இயக்குநர் அறிவழகனும் மீண்டும் இணைந்து பணியாற்றியுள்ள படம் ‘பார்டர்’. இப்படத்தில் நடிகைகள் ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்து இருக்கிறார்கள். விஜய ராகவேந்திரா தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
இப்படத்துக்கு போட்டியாக சந்தானம் நடித்துள்ள ‘சபாபதி’ திரைப்படம் களமிறங்க உள்ளது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீனிவாசராவ் இயக்கி உள்ளார். இந்த படத்தில் சந்தானத்துடன் எம்.எஸ்.பாஸ்கர், சாயாஜி ஷிண்டே, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்த இரண்டு படங்களைத் தவிர வேறு படங்களும் அன்றைக்கு வெளியாக வாய்ப்பிருப்பதாகவே தெரிகிறது.