‘பூமராங்’ படத்திற்காக 5 மணி நேரம் மேக்கப் போடும் அதர்வா..! 

‘பூமராங்’ படத்திற்காக 5 மணி நேரம் மேக்கப் போடும் அதர்வா..! 

நடிகர் அதர்வாவின் நடிப்பில் இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கி வரும் புதிய திரைப்படம் ‘பூமராங்’.

இந்தப் படத்தில் அதர்வாவுடன் மேகா ஆகாஷ், உபன் பட்டேல், சுஹாசினி மணிரத்னம், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடிக்கின்றனர்.

கலை இயக்கம் – சிவா யாதவ், இசை – ரதன், ஒளிப்பதிவு – பிரசன்னா எஸ்.குமார், படத் தொகுப்பு – ஆர்.கே.செல்வா, தயாரிப்பு – மசாலா பிக்ஸ் நிறுவனம், எழுத்து, இயக்கம், தயாரிப்பு – ஆர்.கண்ணன்.

இந்த படத்தில் மூன்று வெவ்வேறுவிதமான தோற்றங்களில் நடிக்கிறார் அதர்வா. அதற்காக பல மணி நேரம் கஷ்டப்பட்டு ப்ரோஸ்தடிக் மேக்கப் செய்து கொண்டிருக்கிறார் அதர்வா.

இந்த மேக்கப்பை அதர்வாவுக்கு செய்தவர்கள் பாலிவுட்டின் பிரபலமான மேக்கப் கலைஞர்களான ப்ரீத்திஷீல் சிங் மற்றும் மார்க் ட்ராய் டிஸோசா.

இவர்கள் ‘பத்மாவத்’, நவாசுதீன் சித்திக் நடித்த ‘மாம்’, அமிதாப்பச்சன், ரிஷி கபூர் நடித்த ‘102 நாட் அவுட்’ ஆகிய படங்களில் தங்களது சிறப்பான ப்ரோஸ்தடிக் மேக்கப்பால் பெயர் பெற்றவர்கள்.

இதைப் பற்றி இயக்குநர் ஆர்.கண்ணன் பேசும்போது, “இந்தக் கதையும், அதர்வாவின் கதாபாத்திரமும் உருவானபோது அதற்கு மூன்று வெவ்வேறு தோற்றங்கள் தேவைப்பட்டது.

எனவே மேக்கப் துறையில் வல்லுனர்களான தேசிய விருது பெற்ற கலைஞர்கள் ப்ரீத்தி ஷீல் சிங், மார்க் ட்ராய் டிஸோசாவை அணுகினோம். படத்திற்கு தேவையான தோற்றங்களை இறுதி செய்ய மும்பைக்கு சென்றோம்.  

ஆனால், அதர்வாவின் பிஸியான ஷூட்டிங்கினால் அவர்களை இங்கு வரவழைக்க வேண்டி இருந்தது. சென்னையில் இரண்டு நாட்கள் தங்கி 12 மணி நேரம் உழைத்து எங்களுக்கு தேவையான தோற்றத்தை உருவாக்கி கொடுத்தார்கள். அதர்வாவின் கண்கள், மூக்கு தவிர அவரின் வாய் உட்பட சின்ன சின்ன அளவுகளை தனித்துவமான முறையில் அளவெடுத்து சென்றனர்.

atharva-2.jpg

மேக்கப் போடும்போது துவக்கத்தில் ஒரு வகையான மாவை அதர்வாவின் மீது பூசி விடுவார்கள். அதர்வா ஐந்து மணி நேரம் சிலை போல அசையாமல் இருப்பார். அந்த நிலையில் மூச்சுவிடுவது மிகவும் சிரமமான விஷயம், மூச்சு விடுவதற்கு ஒரு சிறு குழாய் அவர் மூக்கில் பொருத்தப்பட்டது. 

அதை தொடர்ந்து ப்ரோஸ்தடிக் கேஸ்ட் செய்ய 30 நாட்கள் தேவைப்பட்டது, அதன் பிறகுதான் தொடர் படப்பிடிப்புக்கு செல்ல முடியும். அதர்வாவோ ‘இதற்கு நடுவில் நேரங்களில் என்ன நடந்தது என்றே எனக்கு தெரியவில்லை, ஆனால் இந்த மாதிரி விஷயங்களை முதன்முறையாக செய்வதால் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று என்னிடம் சொன்னார். 

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான எல்லையை தொடும் முனைப்போடு உழைக்கும் அதர்வாவுக்கு, ‘பூமராங்’ படமும் அப்படி அமையும்…” என்று உறுதியோடு சொல்கிறார் இயக்குநர் ஆர்.கண்ணன்.

Our Score