full screen background image

‘சதுரங்க வேட்டை’யை மிஞ்சும் அளவுக்கு நடித்திருக்கிறார் நட்டி நட்ராஜ்..!

‘சதுரங்க வேட்டை’யை மிஞ்சும் அளவுக்கு நடித்திருக்கிறார் நட்டி நட்ராஜ்..!

ஆர்.டி. இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட்  பட நிறுவனம் சார்பாக ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் மூவரும்  இணைத்து தயாரித்துள்ள படம் ‘போங்கு.’

இந்தப் படத்தில் ‘சதுரங்க வேட்டை’ படத்தில் நடித்த ‘நட்டி’ என்னும் நட்ராஜ் சுப்ரமணியன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக ருஹி சிங் நடித்துள்ளார்.  இவர் இந்தியில் ‘காலண்டர் கேர்ள்ஸ்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர். மற்றும் அதுல் குல்கர்னி, ‘முண்டாசுபட்டி’ ராம்தாஸ், அர்ஜுன், ஷரத் லோகித்தஷ்வா, ராஜன், மனிஷா, ‘பாவா’ லட்சுமணன், மயில்சாமி, சாம்ஸ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி, இசை – ஸ்ரீகாந்த் தேவா, பாடல்கள்  -கபிலன், தாமரை, மதன் கார்க்கி, எடிட்டிங் – கோபிகிருஷ்ணா, கலை – ராஜமோகன், சண்டை பயிற்சி – சுப்ரீம் சுந்தர், நடனம் – கல்யாண், பாப்பி, தயாரிப்பு மேற்பார்வை – ஏ.பி.ரவி, தயாரிப்பு – ராஜரத்தினம், ஸ்ரீதரன், எழுத்து, இயக்கம் – தாஜ்.

இந்தப் படம் வரும் ஜூன்-2-ம் தேதியன்று திரைக்கு வரவிருக்கிறது. இதையொட்டி சமீபத்தில் இந்தப் படத்திற்காக பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

IMG_2224

இந்தச் சந்திப்பில் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி பேசும்போது, “இதுவொரு நல்ல கமர்ஷியலான படம். என் கேமிராவுக்கும் நிறையவே வேலைகள் கொடுத்தார் இயக்குநர். இப்படி ஒரு வித்தியாசமான படம் கிடைப்பதற்கு ஒவ்வொரு கேமிராமேனும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். எனக்கு அது கிடைத்திருப்பதில் பெரிய சந்தோஷம். கூடவே, பாலிவுட்டே கொண்டாடும் என்னுடைய முன்னோடி, ஒளிப்பதிவாளர் நட்டி சாரை இந்தப் படத்தில் நான் ஒளிப்பதிவு செய்ததில் எனக்கு இன்னும் பெரிய சந்தோஷம்…” என்றார்.

taj

படம் பற்றி இயக்குநர் தாஜ் பேசும்போது, “எந்த ஒரு குற்றமும் புதிதாக உருவாவது இல்லை. எல்லா குற்றங்களும் காலம்காலமாக இங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்தந்த காலகட்டத்திற்கேற்ப மாதிரி அந்தக் குற்றம் நவீனமாக்கப்பட்டு புதிய பாணியில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

குற்றங்களுக்கான  ஆணி வேர் எது..? யார் செய்தது..?  என்று பார்த்தால் வெளியிலிருந்து யாரும் காரணமாக இருக்க மாட்டார்கள். சிறைக்குள்ளேயே இருந்து கொண்டு வெளியாட்களை ரிமோட் கண்ட்ரோல் மூலமாக இயக்கி அந்த குற்றத்தை நிகழ்த்தி இருப்பார்கள்.

அப்படித்தான் ஒரு ரோல்ஸ்ராய்ஸ் காரின்  திருட்டும் நடைபெறுகிறது. இந்தத் திருட்டு யாரால், எப்படி மேற்கொள்ளப்படுகிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

காஸ்ட்லியான கார் பற்றிய கதை என்பதால் செலவைப் பற்றிக் கவலைப்படாமல் சற்று காஸ்ட்லியாகவே செலவு செய்து படமாக்கி இருக்கிறோம். ஒரு புதிய இயக்குநருக்கு இவ்வளவு செலவு செய்து படமாக்க ஒத்துக்கொண்ட தாயாரிப்பாளர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுளேன்.

இது டிராவலிங் பற்றிய படமும்கூட. சாலைகளில் அதுவும் தேசிய நெடுஞ்சாலைகளில் எப்படி வாகனங்கள் பறக்குமோ அதேபோல் இந்தப் படத்தின் திரைக்கதையும் பரபரன்னு பறக்கும் ஹீரோ நட்டி நட்ராஜுக்கென்று தைத்த சட்டை போன்ற இந்த கேரக்டர் இவருக்கு அப்படியே பொருந்திவிட்டது. சரியாக சொல்லப் போனால் அவருடைய கேரியரில் ‘சதுரங்க வேட்டை’யை இந்தப் படத்தில் நிச்சயம் தாண்டிவிடுவார்…” என்றார்.

ஹீரோ நட்டி நட்ராஜ் பேசும்போது,  “இது கார் திருட்டு பற்றிய கதை. இயக்குநர் மிகச் சிறப்பாக கமர்ஷியலாக படத்தை உருவாக்கியிருக்கிறார். கார் திருட்டு என்றாலும் லோக்கர் கார்களெல்லாம் இல்லாமல் வெளிநாட்டு கார்களை வைத்து படமாக்கினோம். நாங்கள் கேட்டபோதெல்லாம் தயாரிப்பாளர் ரகு விலை உயர்ந்த விதம்விதமான கார்களை கொண்டு வந்து இறக்கினார். இதனால்தான் படத்தை இத்தனை கம்பீரமாக உருவாக்க முடிந்திருக்கிறது.

IMG_2230

வெளிநாட்டுக் கார்களை எப்படியெல்லாம் சுலபமாக திருட முடியும் என்பதை சம்மந்தப்பட்ட கார் கம்பெனி ஆட்களே விளக்கமாக சொன்னார்கள். அதை எல்லாம் காட்டினால் அவ்வளவுதான். நாங்களே போட்டுக் கொடுத்தது போலாகிவிடும். அதனை நாங்கள் செய்யவில்லை. ஆனால் கதைக்கு தேவைப்படும் அளவுக்கு கொஞ்சம் சின்னதா சொல்லியிருக்கிறோம்..” என்றார்.

வரும் ஜூன் இரண்டாம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப் படத்தை கே.ஆர்.பிலிம்ஸ் சார்பில் பிரபல விநியோகஸ்தர் சரவணன் வெளியிடுகிறார்.

Our Score