full screen background image

பொம்மை – சினிமா விமர்சனம்

பொம்மை – சினிமா விமர்சனம்

ஏஞ்சல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் V.மருது பாண்டியன், Dr.ஜாஸ்மின் சந்தோஷ், Dr.தீபா, T.துரை ஆகியோர் தயாரித்துள்ள திரைப்படம் ‘பொம்மை’.

இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும், பிரியா பவானி சங்கரும் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். மேலும், இந்தப் படத்தில் சாந்தினி, ‘டவுட்’ செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இசை – யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு – ரிச்சர்ட் எம்.நாதன், படத் தொகுப்பு – ஆண்டனி, கலை இயக்கம் – K.கதிர், பாடல்கள் – கார்க்கி, நடன இயக்கம் – ராஜு சுந்தரம், பிருந்தா, சண்டை இயக்கம் – கனல் கண்ணன், வசனம் – M.R.பொன் பார்த்திபன், உடைகள் வடிவமைப்பு – சுபஶ்ரீ கார்த்திக், பூர்த்தி ப்ரவீன், புகைப்படங்கள் – ராமசுப்பு, நிர்வாகத் தயாரிப்பாளர் – நிர்மல் கண்ணன், ஒப்பனை – மாரி, மக்கள் தொடர்பு – ஜான்சன், சதிஷ் (AIM), தயாரிப்பு ஆலோசகர் – T.R.ரமேஷ். எழுத்து, இயக்கம் – ராதா மோகன். இத்திரைப்படம் இயக்குநர் ராதா மோகன் இயக்கியிருக்கும் 11-வது திரைப்படமாகும்.

எஸ்.ஜே.சூர்யா, ராதாமோகன், யுவன்சங்கர் ராஜா என வித்தியாசமான கூட்டணி என்பதால் இயல்பாகவே பொம்மை படம் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்தக் கூட்டணி அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா?

கதை?

எஸ்.ஜே.சூர்யா சின்ன வயதில் அம்மா மீது பெரும் பாசம் கொண்டவராக இருக்கிறார். தாய் மடியில் தலை வைத்து வாழும் சிறுவனான அவருக்கு இடிவிழுந்தாற்போல் ஒரு இழப்பு வருகிறது. எதிர்பாராதவிதமாக அவரது அம்மா இறந்துவிடுகிறார்.

அதன் பின் எதிர் வீட்டுச் சிறுமியான பிரியா பவானி சங்கர் மீது பெரும் நேசம் கொள்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இருவரும் இடைவிடாத அன்போடு பழகி வருகிறார்கள். இந்நிலையில் ஒரு திருவிழாவில் பிரியா பவானி சங்கர் தொலைந்து விடுகிறார். அந்த இழப்பை எஸ்.ஜே.சூர்யாவால் தாங்கவே முடியவில்லை.

அதன் பின்னர் மன ரீதியாக மிகவும் பாதிக்கப்படுகிறார் சூர்யா. அந்தப் பாதிப்பில் இருந்து வெளியில் வர மருத்துவ சிகிச்சையெல்லாம் எடுத்து வருகிறார்.

சில வருடங்கள் சென்ற பின் பொம்மை செய்யும் கலைஞனாக எஸ்.ஜே.சூர்யா மாறுகிறார். அவர் செய்த பொம்மை ஒன்றில் பிரியா பவானி சங்கரின் சாயலை காண்கிறார். அந்த பொம்மையில் இருந்து பிரியா பவானி சங்கர் உயிர் பெற்று வந்து இவரிடம் பேசுகிறார். சிரிக்கிறார். ஒரு கட்டத்தில் தன்னை வீட்டுக்கும் அழைத்துச் செல்லும்படி சொல்கிறார்.

எஸ்.ஜே.சூர்யா அந்தப் பொம்மையை வீட்டுக்கு எடுத்துச் செல்வதற்கு தயாராகும் நிலையில், அந்தப் பொம்மை ஒரு ஜவுளிக் கடைக்கு விற்கப்படுகிறது. விற்றவரை கொலை செய்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அந்தக் கொலையை போலீஸ் விசாரிக்கிறது.

எஸ்.ஜே.சூர்யா பிரியா பவானி சங்கர் சாயல் உள்ள பொம்மை இருக்கும் ஜவுளிக் கடையில் வேலைக்குச் சேர்கிறார். அங்கிருந்து அவர் பொம்மையை வீட்டுக்கு கொண்டு வரும் முயற்சி என்னானது?  பிரியா பவானி சங்கர் உண்மையிலே இறந்துவிட்டாரா? அவர் பொம்மை ரூபத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு மட்டும் காட்சி கொடுப்பது ஏன்? அது எஸ்.ஜே.சூர்யாவின் பிரம்மை என்பதாக காட்டப்பட்டாலும் நிஜத்தில் பிரியாபவானி சங்கருக்கு என்ன ஆச்சு? இப்படி பல கேள்விகளுக்கு பதிலளித்தும்,  அளிக்காமலும் நம்மை சோதித்து அனுப்பவதே இப்படத்தின் கதையும் முடிவும்..!

ஒரு ரூபாய்க்கு நடிக்க வேண்டிய இடத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு நடித்து நம்மை ரொம்பவே சோதிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. ஒவ்வொரு காட்சியிலும் ஓவர் ஆக்சனால் ரசிகனை டயர்ட் ஆகச் செய்கிறார். பொம்மைக்குப் பதில் பிரியா பவானி சங்கர் என்பது போல பிரியா பவானி சங்கரும் வந்து போகிறார். அவரது நடிப்பில் எந்த உயிர்ப்பும் இல்லை. மேலும் படு செயற்கைத்தனமான அவரது வசன மாடுலேசன்களும் எடுபடவே இல்லை. சாந்தினி தமிழரசன் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்துள்ளார். மேலும் படத்தில் போலீஸ் டீம் உள்பட யாரும் கதைக்கு உதவவே இல்லை. காஸ்டிங் ஏரியா படத்தில் ரொம்பவே சொதப்பியுள்ளது.

இப்படத்திற்கு நியாயமாகப் பார்த்தால் இளையராஜா இசை என்றே சொல்ல வேண்டும். படமெங்கும் இசை ஞானி இசையமைத்த, “தெய்வீக ராகம்” என்ற பாடல்தான் ஒலிக்கிறது. குறிப்பாக பல இடங்களில் அந்தப் பாடலின் ஹம்மீங்-ஐ வைத்தே ஒப்பேத்தியுள்ளனர். யுவன்சங்கர் ராஜாவின் பேக் கிரவுண்ட் மியூசிக் மற்றும் பாடல்கள் இரண்டுமே எடுபடவில்லை. எதை மனதில் வைத்து இப்படத்தின் இசை உலகத் தரம் என்று எஸ்.ஜே.சூர்யா சொன்னாரென தெரியவில்லை..!?

ஒளிப்பதிவு நைட் எபெக்ட் காட்சிகளில் தனித்துத் தெரிகிறது. இருந்தும் ரெய்ன் எபெக்ட் ஷாட்களில் கவனக்குறைவாக இருந்துள்ளார் ஒளிப்பதிவாளர். ஒரு இடத்தில் மழை பெய்கிறது. பக்கத்தில் உள்ள இடம் வெறுமையாக இருக்கிறது. அதுபோல் ஆர்ட் டிபார்ண்ட்மெண்டும் இன்னும் கூடுதல் உழைப்பைக் கொடுத்திருக்கலாம்.

இந்தப் படத்திற்கு பெரும் வில்லனாக அமைந்திருப்பது படத்தின் திரைக்கதைதான். இது எஸ்.ஜே சூர்யாவின் காதல் பிரச்சனையைப் பேசுகிற படமா? அல்லது பேண்டஸி படமா? பேய்ப் படமா? இன்வெஸ்டிகேஷன் படமா? என படம் பார்ப்பவர்களை படு குழப்பத்தில் ஆழ்த்துகிறது படம். 

இது எஸ்.ஜே.சூர்யாவின் வயதுக்கேற்ற படமாகவும் இல்லாமல் திறமைக்கேற்ற படமாகவும் இல்லாமல் வந்துள்ளது. ராதாமோகன் இயக்கத்தில் எப்போதும் ஒரு எமோஷ்னல் மேஜிக் இருக்கும். மேலும் லாஜிக் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு ஓரளவு பதிலும் இருக்கும். இந்தப் பொம்மை படத்தில் அப்படி எதுவுமே  இல்லை.

கோவில் திருவிழாக்களில் குவித்துப் போட்டிருக்கும் பொம்மைகள் அளவிற்கு லாஜிக் கேள்விகள் இருக்கின்றன. அதற்கெல்லாம் பதில் கேட்டால் இன்னொரு பாகம் எடுக்க வேண்டிய வரும். போதும்.. இதுக்கே பாடி தாங்கலை..! ஆளை விடுங்க சாமிகளோவ்..!!!

RATING : 2 / 5

Our Score