full screen background image

பாம் – சினிமா விமர்சனம்

பாம் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை Gembrio Pictures நிறுவனத்தின் சார்பாக சுதா சுகுமார், சுகுமார் பாலகிருஷ்ணன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளார்கள்.

படத்தில் அர்ஜூன்தாஸ், சிவாத்மிகா ராஜசேகர், காளி வெங்கட், நாசர், அபிராமி, சிங்கம்புலி, பால சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இயக்கம்விஷால் வெங்கட், கதை, திரைக்கதை  – மணிகண்டன் மாதவன், அபிஷேக் சபரிகிரிஷன், விஷால் வெங்கட், ஒளிப்பதிவுராஜ்குமார், படத் தொகுப்புஜி.கே.பிரசன்னா, வசனம்மகிழனன், கூடுதல் வசனம்மணிகண்டன் மாதவன், அபிஷேக் சபரிகிரிஷன், கலை இயக்கம்மனோஜ் குமார், உடை வடிவமைப்புபிரியா ஹரி, பிரியா ஹரன், நடன இயக்கம்அப்ஸர், சண்டை இயக்கம்மான்ஸ்டர் முகேஷ், பத்திரிக்கை தொடர்புடீம் எய்ம்.

ஜாதியை தமிழ்நாட்டில் இருந்து ஒழித்து விட வேண்டுமானால் அதற்கு சமயமும், கடவுளர்களும் துணை இருந்தால் போதும் என்கின்ற ஒரு கருத்தை முன் வைத்து வந்திருக்கும் படம் இது.

முன்னொரு காலத்தில் காளகம்மாய்பட்டி என்ற கிராமம் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது. அந்தக் கிராமத்தில் இருந்து அனைவருமே ஒரே சாமியை கும்பிடும் ஒரு இனத்தவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அந்தக் காளகம்மாய்பட்டி ஊர் இரண்டாக பிரிய வேண்டிய நிலைமை.

அந்த நேரத்தில் காளப்பட்டியாக ஒரு பகுதி மக்களும், கம்மாபட்டியாக இன்னொரு பகுதி மக்களுமாக பிரிந்து நின்று கொண்டார்கள். அவருடைய வம்சாவளியினர்தான் இப்போதுவரையிலும் ஒருவர் மாற்றி ஒருவர், நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்று சொல்லிக் கொண்டு காலத்தை ஓட்டி வருகிறார்கள்.

இவர்களில் காளப்பட்டியைச் சேர்ந்த அர்ஜுன் தாஸும், கம்மா பட்டியைச் சேர்ந்த காளி வெங்கட்டும் மிக நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள்.

காளி வெங்கட் எப்பொழுதும் குடிகாரர். இரவு நேரங்களில் முடித்துவிட்டு ஏதோ ஒரு இடத்தில் விழுந்து கிடப்பார். அவரை அர்ஜுன் தாஸ் தூக்கிக் கொண்டு வந்து காளி வெங்கட்டின் வீட்டில் இறக்கி விடுவார், காளி வெங்கட்டின் தங்கையான சிவாத்மிகா அர்ஜுன் தாசை காதலித்து வருகிறார்.

இந்த நேரத்தில் ஒரு நாள் காளி வெங்கட் திடீரென்று இறந்து போகிறார். அவர் இறந்துவிட்டார் என்பதை ஊர்ஜிதம் செய்யவே மக்கள் மாறி மாறி பேசுகிறார்கள். ஆனால் அவருடைய இறப்புக்குப் பின் அவருடைய உடல் தானாகவே சிலிர்க்கும் போதும், அபான வாயுவை வெளியேற்றும்படியும் செய்து கொண்டே இருக்க காளி வெங்கட்டை திடீரென்று கடவுளாக்குகிறார்கள் கம்மாபட்டியைச் சேர்ந்தவர்கள்.

காளப்பட்டியைச் சேர்ந்தவர்களும் அவர் எங்கள் தெரு பக்கம் வந்துதான் விழுந்திருந்தார். அதனால் நாங்கள்தான் அவரை கும்பிடுவோம் என்று சொல்லி சண்டைக்கு வர ஒரு பிணத்தை வைத்துக் கொண்டு இரு தரப்பும் போரிடுகிறார்கள்.

இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இரண்டு ஊர்களையும் ஒன்றாக்கிவிடலாம், சமாதானமாக்கிவிடலாம், ஒற்றுமையாக்கிவிடலாம் என்று திட்டம் தீட்டுகிறார் அர்ஜுன் தாஸ். அதற்கு ஏற்ப அவர் சில பல வேலைகளை சில்லுண்டி வேலைகளை செய்து கொண்டே இருக்கிறார்.

இதன் பின்பு என்ன ஆனது..? காளி வெங்கட்டின் இறப்பு உண்மைதானா?… அந்த ஊர் மக்கள் ஒற்றுமை ஆனார்களா, இல்லையா?… என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற அழகான படத்தை இயக்கிய இயக்குநர் விஷால் வெங்கட்டுதான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார்

நாயகன் அர்ஜுன் தாஸுக்கு இந்த கேரக்டர் செட் ஆகவே இல்லை என்பது வருத்தமான ஒரு விஷயம். அவருடைய ஸ்பெஷாலிட்டியான அவருடைய மந்திர குரலும் இந்தப் படத்தில் அடக்கி வாசிக்கப்பட்டுள்ளது. ரொம்பவும் காதல், ரொமான்ஸ் இல்லாமல் வெறுமனே பார்த்து பேசிக்கொண்டே தங்களுடைய காதலை வளர்க்கிறார்கள். அதிலும் அர்ஜுன் தாஸ் பேசும் பல வசனங்கள் நமக்கு புரியாத வகையில் பதிவு செய்யப்பட்டிருப்பது ஏன் என்று தெரியவில்லை.

அர்ஜுன் தாஸ் சாமி வந்தது போல சாமியாடி ஒரு இடத்தில் திரைக்கதையில் காமெடி செய்து வைத்திருக்கிறார். அதே போல் சிறிசில இடங்களில் காமெடி வரும் அளவுக்கு கொஞ்சம் வசனங்களை பேசி இருக்கிறார்.

படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்திருக்கும் காளி வெங்கட்டை நிச்சயமாக இந்தப் படத்துக்காக பாராட்ட வேண்டும். பிணமாக நடிப்பது என்பது ரொம்ப, ரொம்ப கஷ்டமான விஷயம், கேமரா நம்மை காட்டும் பொழுது மூச்சு விடாமல் இருக்க பழகிக் கொள்ள வேண்டும் அதனால்தான் செத்த பிணமாக நடிப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம் என்பார்கள். அந்தக் கஷ்டத்தை இந்த படத்தில் அனுபவித்திருக்கிறார் நடிகர் காளி வெங்கட்.

குடித்துவிட்டு அவர் பேசுகின்ற பல பேச்சுக்களும் ஒரு குடிகாரனின் உண்மையான நடிப்பை இந்த படத்தில் நமக்கு காட்டி இருக்கிறார் காளி வெங்கட் இதற்காகவே அவருக்கு நமது பாராட்டுக்கள்.

சிவாத்மிகா கேமராவுக்கேற்ற முகம். ஒரு சோகத்தை மனதில் தாங்கிக் கொண்டு அலையும் ஒரு இளம் பெண்ணின் கதாபாத்திரம் என்பதால் அதிகமாக இவரை ரசிக்க முடியவில்லை. கிராமத்துப் பெண் என்கின்ற ஒரு கேரக்டருக்கு மிகவும் கச்சிதமாக பொருந்தி போயிருக்கும் சிவாத்மிகாவை அடுத்தடுத்த படங்களில் எதிர்கொள்ளலாம்.

காளப்பட்டியின் நாட்டாமையாக நடித்திருக்கும் சிங்கம் புலிக்கு கம்பீரம் வரவே இல்லை. ஆனால் காமெடி மட்டும் வந்திருக்கிறது. அதனாலேயே இந்தக் கேரக்டர் இவருக்கும் ஒத்து வரவில்லை.

மாவட்ட கலெக்டராக நடித்திருக்கும் அபிராமி ஒரு கெத்தான கலெக்டராக படத்தில் தோன்றியிருக்கிறார். ஆனால் அழுத்தமான காட்சிகள் அவருக்கு கொடுக்கப்படாததால், அவரும் ஏனோதானோ என்று வந்து சென்று இருப்பது போலத்தான் நமக்கு தோன்றுகிறது.

கில்லாடி அரசியல்வாதியாக நடித்திருக்கும் நாசர், பூசாரியாக நடித்திருப்பவர் மற்றும் சாதி வெறியர்களால் பாதிக்கப்பட்ட சிறுவன்.. இவர்களும் இந்தப் படத்தில் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் ஒரு கிராமத்து அழகை எவ்வளவு அழகாக காட்ட முடியுமோ அவ்வளவு அழகாக செய்து இருக்கிறார். படத்தின் பிற்பாதியில் காளி வெங்கட்டை வைத்து பூஜை செய்கின்ற இரவு நேர காட்சிகளில் நம்மை அசத்தி இருக்கிறார்.

இமானின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் என்றாலும் ஏனோ மனதைத் தொடவே இல்லை. அதைவிட அதிகமாக ஒலித்த பின்னணி இசை சுத்தமாக ஒர்க் அவுட் ஆகவில்லை என்றே சொல்லலாம்.

படத்தில் நிறைய நடிகர்கள் நடித்திருந்தாலும் ஒரு கோர்வையான திரைக்கதை இல்லாததால் அவர்களை நம்மால் ரசிக்க முடியவில்லை. ஊர் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற நினைத்து அவர்கள் செய்கின்ற சில செயல்கள் நமக்கு ரசிப்பாக இருந்தாலும் கொஞ்சம் குழப்பத்தையும் சேர்த்து தருகிறது.

முதலில் ஒரு பிணம் அபான வாயுவை வெளியேற்றுமா என்ற கேள்விக்கு விடை தெரிய வேண்டும். இன்னொரு பக்கம் ஒரு பிணத்தை சாமியாக்கி எந்த ஊரில் எந்த ஜாதியினர் கும்பிடுவார்கள்.. கொண்டாடுவார்கள் என்பது நமக்கு தெரியவில்லை. ஒரு பிணத்தை வைத்துக்கொண்டு ஊர் திருவிழாவாக அதை நடத்திக் காட்ட முடியுமா என்பது சந்தேகமாக இருக்கிறது.

எல்லாவற்றையும் தாண்டி இந்த அபான வாயுவை வெளியேற்றும் காட்சி அடிக்கடி வந்து கொண்டே இருப்பது எரிச்சலைத்தான் தந்திருக்கிறது. படத்தின் தலைப்பு அதற்காகத்தான் வைத்திருக்கிறார்கள் என்றால் இந்த படம் நிச்சயமாக உவ்வே ரகம் என்றுதான் சொல்ல வேண்டும்.

சாதி பிரச்சனை ஒழி வேண்டுமானால் இருவருக்கும் பொதுவான கடவுள்கள் இருந்தாக வேண்டும். பொதுவான ஒரு கடவுள் இருந்தாலே அந்த இடத்தில் பிரிவினை இருக்காது என்பதைத்தான் இயக்குனர் சொல்ல வந்திருக்கிறார். ஆனால் அதை சொல்வதற்காக அவர் எடுத்துக் கொண்ட திரைக்கதை ரொம்பவும் குழப்பி அடித்திருக்கிறது.

இருந்தாலும் இயக்குநரின் அந்த எண்ணத்தை பாராட்டும் அதே நேரம், இந்தப் படத்தில் செய்த தவறுகளை இனி அடுத்தடுத்த படங்களில் செய்யாமல் வெற்றி பெற வேண்டும் என்று இயக்குநர் விஷால் வெங்கட்டை நாம் வாழ்த்துகிறோம்.

RATING : 3 / 5

Our Score