கதைத் திருட்டு பஞ்சாயத்தில் ‘போகன்’ படமும் சிக்கியது..!

கதைத் திருட்டு பஞ்சாயத்தில் ‘போகன்’ படமும் சிக்கியது..!

தமிழ்த் திரையுலகில் மீண்டும் ஒரு கதைத் திருட்டு பேச்சு எழுந்துள்ளது.

ஜெயம் ரவி, ஹன்ஸிகா மோத்வானி நடித்த ‘ரோமியோ ஜூலியட்’ என்கிற சூப்பர்ஹிட் படத்தை எழுதி, இயக்கியவர் லட்சுமணன். இவர் இதையடுத்து இப்போது இயக்கி வரும் படம் போகன். இதிலும் ஜெயம் ரவியும், ஹன்ஸிகா மோத்வானியும்தான் நடிக்கிறார்கள். 

இந்தப் படத்தின் கதை தன்னுடையது என்று புகார் எழுப்பியிருக்கிறார் ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ஆண்டனி.

இது குறித்து தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திலும் புகார் அளித்திருக்கிறார் ஆண்டனி. அவர் அந்தச் சங்கத்தில் தனது கதையை பதிவு செய்து வைத்திருப்பதால் அவரது கதை பற்றிய விசாரணை, சங்கத்தில் நடைபெற்றுள்ளது. சங்க விசாரணையில் ‘போகன்’ கதை ஆண்டனி எழுதிய ‘அல்வா’ கதைதான் என்று எழுத்தாளர் சங்கத்தில் தீர்ப்பாகியுள்ளது.

ஆனால் இதனை லட்சுமண் தரப்பு மறுத்து வருகிறது. “போகன்’ திரைப்படம் ஒரு சில ஆங்கிலப் படங்களின் தழுவலில் உருவான கதை” என்கிறார் இயக்குநர் லட்சுமண்.

இந்த குற்றச்சாட்டுகள் பரவலாக திரையுலகில் வலம் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைக்கு முன்தினம் இயக்குநர் லட்சுமண் அனுப்பிய ஆட்களால் தான் தாக்கப்பட்டதாக ஆண்டனி புகார் கூறியுள்ளார்.

கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் தான் டூவீலரில் வந்து கொண்டிருந்தபோது இயக்குநர் லட்சுமண் அனுப்பிய நபர்கள் தன்னை அடையாளம் கண்டு தன்னைக் கடுமையாகத் தாக்கியதாகவும், இதனால் தனது கையில் பலத்த அடிபட்டுள்ளதாகவும் ஆண்டனி கடுமையான புகாரை தெரிவித்துள்ளார்.

கதை திருட்டு சர்ச்சை குறித்து ஆண்டனி கூறுகையில், “அல்வா’ என்ற கதையை மாதவன் நயன்தாராவை வைத்து இயக்க முடிவு செய்து வைத்திருந்தேன். இதனை முறைப்படி தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திலும் பதிவு செய்து வைத்திருக்கிறேன்.

director-antony

இந்த நேரத்தில் ‘போகன்’ படத்தின் கதையைப் பற்றிக் கேள்விப்பட்டபோது அது என்னுடைய ‘அல்வா’ கதை என்று எனக்குத் தெரிந்த்து. ‘அல்வா’ கதையின் டிஸ்கஷனின்போது என்னுடன் பணியாற்றிய உதவி இயக்குநர்கள் சிலர் லட்சுமணனிடம் பணியாற்றச் சென்றுள்ளார்கள். அவர்கள் மூலமாக அந்தக் கதை அவருக்குத் தெரிந்து அதை அவர் படமாக்கியிருக்கிறார் என்று எனக்குத் தெரிந்தது.

இதனால் நான் எழுத்தாளர் சங்கத்தில் புகார் செய்தேன். அவர்கள் விசாரித்து ‘போகன்’ கதை என்னுடையதுதான் என்று தீர்ப்பளித்தார்கள். ஆனால், அதற்குள்ளாக ‘போகன்’ படத்தின் படப்பிடிப்பே துவங்கிவிட்டது. இதனால் பிரச்சினையை பேசி முடிக்க அவர்கள் தரப்பு முதலிலேயே 25 லட்சம் ரூபாயை எனக்குக் கொடுக்க முன் வந்தார்கள். ஆனால் நான் அதை மறுத்துவிட்டேன்.

இந்தப் பிரச்சினையில் நான் மேலும், மேலும் பல திரைப்பட அமைப்புகளிடமும் புகார் செய்து வந்த்தால் என் மீது கொண்ட கோபத்தில் காரணமாய், சில மாதங்களுக்கு முன்பாகவே என்னைத் தாக்கினார்கள். அது பற்றி அப்போதே போலீஸில் புகார் செய்தேன். அந்த வழக்கும் நிலுவையில் உள்ளது.

இந்த நேரத்தில் நேற்று முன்தினமும் கோயம்பேடு அருகில் நான் டூவீலரில் வரும்போது சிலர் என்னை ‘இந்த விஷயத்தில் தலையிடாதே’ என்று சொல்லி தாக்கினார்கள். இதையடுத்து நான் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுக்கவுள்ளேன்..” என்றார்.

சொன்னதுபோலவே இன்று காலை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்த இயக்குநர் ஆண்டனி இயக்குனர் லட்சுமண் மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மீது புகார் அளித்துள்ளார்.

‘போகன்’ என்ற பெயரில் தற்போது தயாரிக்கப்பட்டிருக்கும் படத்தின் கதை தன்னுடைய ‘அல்வா’ கதைதான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் தீர்ப்பளிக்கப்பட்டதால் கோபம் அடைந்த ‘போகன்’ படத்தின் இயக்குநர் லட்சுமண் மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இருவரும் தன்னை ஆள் வைத்து தாக்கியதாக அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தொடர்ந்து தனக்கு பல அச்சுறுத்தல்கள் இருப்பதாகவும், தனது உயிருக்கு பாதுகாப்பு வேண்டியும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

Our Score