லெமன் லீப் கிரியேசன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் R.கணேஷ்மூர்த்தி, G.சவுந்தர்யா மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளரும், இயக்குநருமான பா.இரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘புளூ ஸ்டார்’.
இந்தப் படத்தில் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு, பிரித்வி, திவ்யா துரைசாமி, லிசி ஆண்டனி, அருண் பாலாஜி, மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தமிழ் அழகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். செல்வா படத் தொகுப்பு செய்ய, ரகு கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
இயக்குநர் பா.இரஞ்சித்தின் உதவி இயக்குநரான ஜெய்குமார் இயக்கியிருக்கும் இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை இயக்குநர் ஜெய்குமார் மற்றும் எழுத்தாளர் தமிழ் பிரபா இருவரும் இணைந்து எழுதியிருக்கிறார்கள்.
இந்தப் படத்தை சக்தி பிலிம் பேக்டரி வெளியிட்டுள்ளது.
இந்திய இளைஞர்கள் வாழ்வில் நீங்காத இடம் பிடித்துள்ள கிரிக்கெட் விளையாட்டு மற்றும் அதைச் சுற்றி நடக்கும் நட்பு, காதல் என்று முழுக்க, முழுக்க ஜனரஞ்சகமான படமாக உருவாகியிருக்கிறது இந்த ‘புளூ ஸ்டார்’ திரைப்படம்.
அரக்கோணத்தில் காலனி பகுதியில் வசிப்பவர் ரஞ்சித் என்ற அசோக்செல்வன். இவரது அம்மா லிஸி ஆண்டனி. தீவிர கிறித்துவர். எல்லாமும் இயேவாலேயே நடக்கிறது என்று நினைப்பவர். இவரது கணவர் குமரவேல். அசோக்செல்வனின் உடன் பிறந்த தம்பி பிருத்விராஜன்.
அசோக்செல்வன் அரக்கோணம் ஐடிஐயில் படித்து வருகிறார். உடன் படித்து வரும் கீர்த்தி பாண்டியனுடன் காதல். இந்தக் காதலைவிடவும் கிரிக்கெட் மீது பயங்கர வெறி. பிருத்விராஜனும் கிரிக்கெட் பிளேயர்தான். இவர்கள் காலனி இளைஞர்களைக் கொண்ட ஒரு கிரிக்கெட் டீமை வைத்திருக்கிறார்கள்.
அதே ஊரில் மேல் ஜாதியைச் சேர்ந்தவர் சாந்தனு. இவரும் ஒரு கிரிக்கெட் பிளேயர். இவருடைய நண்பர்களைக் கொண்ட ஒரு கிரிக்கெட் டீமை இவரும் வைத்திருக்கிறார். தனது மாமாவின் வட்டி தொழிலுக்கு உதவி செய்து வருகிறார் சாந்தனு.
அந்த ஊர் கிரிக்கெட் மைதானத்தில் யார் கிரிக்கெட் விளையாடுவது என்பதில் ஒரு நாள் துவங்கும் சண்டை அடிதடியாகிறது. அந்த ஊர் திருவிழாவின்போது இரு அணியினருக்கும் இடையில் கிரிக்கெட் போட்டி வைக்கிறார்கள்.
இதில் தனது அணி ஜெயித்தாக வேண்டும் என்று நினைக்கும் சாந்தனு, லீக் போட்டியில் ஆடும் வீரர்களுக்கு காசு கொடுத்து அழைத்து வந்து விளையாட வைத்து ஜெயிக்கிறார். அடுத்த நாள் லீக் கிளப்புக்கு சென்ற சாந்தனுவுக்கும், அந்த லீக் அணியின் கோச்சுக்கும் இடையில் சண்டையாக அடிதடியாகிறது.
இடையில் தடுக்கச் செல்லும் அசோக்செல்வனையும், சாந்தனுவையும் போலீஸ் கைது செய்கிறது. இந்தக் கைது விவகாரத்தினால் ஜாதியை மீறிய நட்பினால் அசோக்செல்வனுடன் இணக்கமாகுகிறார் சாந்தனு.
தொடர்ந்து லீக் கிளப்பில் நடக்கும் கிரிக்கெட் போட்டியில் விளையாடி ஜெயிக்க வேண்டுமென்றால் காலனி டீமும், சாந்தனு டீமும் ஒன்றாக கலந்து ஒற்றுமையாக விளையாடினால் மட்டுமே ஜெயிக்க முடியும் என்று பகவதி பெருமாள் ஐடியா சொல்கிறார்.
அவருடைய ஐடியாபடியே சாந்தனு டீமும், காலனி டீமும் ஒன்றாக கலந்து விளையாடி லீக் கிளப் கோப்பையை வெல்ல முடிவெடுக்கிறார்கள் அசோக்செல்வனும், சாந்தனுவும். தாங்கள் நினைத்ததை சாதித்தார்களா.. இல்லையா என்பதுதான் இந்த புளூ ஸ்டார் படத்தின் சுவையான திரைக்கதை.
அசோக்செல்வனுக்கு இது நிச்சயமாக வேறான படம்தான். இதுவரையிலும் சாக்லேட் பாயாகவும், சிட்டி பையனாகவுமே வலம் வந்து கொண்டிருந்தவரை காலனி பையனாக மாற்றிக் காட்டியிருப்பதால் வேறு ஒரு வகையான நடிப்பை இதில் காட்டியிருக்கிறார்.
தனது அம்மாவின் பெயர் சொல்லி அழைத்து, மரியாதைக் குறைவாகப் பேசிவிட்டுப் போகும் சாந்தனுவின் மீது எழும் கோபம்.. இதைத் தனது காதலியிடம் சொல்லிக் கண் கலங்குமிடத்தில் சாதிய பேயின் வீச்சு எந்த அளவுக்கு பாதிக்கப்பட்ட இளைஞர்களைப் பாதிக்கிறது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.
காதலியுடனான காதல் பேச்சும், மோதலும், காதலியின் உற்சாகமூட்டும் வார்த்தைகளால் உந்தப்பட்டு கிரிக்கெட்டில் அவர் பெறும் வெற்றியும், கோபம் வருமிடத்தில் அதை அடக்காமல் வெளிப்படுத்தியவிதத்திலும் அசோக்செல்வன் முற்றிலும் புதியவராகத் தெரிகிறார்.
கீர்த்தி பாண்டியன் வழக்கமான ஹீரோயின்போல் இல்லாமல் அந்தப் பகுதியைச் சேர்ந்த சாதாரண ஒரு பெண்ணாகத் தோற்றமளிக்கிறார். எளிமையான அவரது தோற்றமும், பேச்சும் காதலைவிடவும் காதலனின் உயர்வுக்கு வழி காட்டும் குருவின் பேச்சாகவே இருப்பதால் இவர்களின் காதலால் நமக்குள் எந்த கெமிஸ்ட்ரியும் தோன்றவில்லை. ஆனால் இவர்கள் இருவரும் இந்தப் படத்தினால் காதலித்துத் திருமணம் செய்து கொண்டது ஆச்சரியத்தைத் தருகிறது..! எந்தக் காட்சியில் நடித்ததற்குப் பிறகு இருவரும் காதலிக்கத் துவங்கினார்கள் என்பதை விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்..!
மேல் சாதிக்கார பையனாக சாந்தனுவும், புரியாத வகையில் காதல் செய்யும் பையனாக பிருத்வி ராஜனும் கதைக்குப் பெரிதும் உதவியிருக்கிறார்கள். சாந்தனுவின் திமிர் நடிப்பைவிடவும், பிற்பாதியில் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்திருக்கும் காட்சிகளே சிறப்பு.
பிருத்விராஜனின் அப்பாவித்தனமான காதலன் கேரக்டரில் அவர் எழுதியிருக்கும் கவிதைகளுக்கு தியேட்டரே கை தட்டுகிறது. அவசரத்தனமாக அண்ணனுடன் சண்டையிட்டவர் பின்பு உண்மை தெரிந்து வழிவதைப் பார்த்து நமக்கே சிரிப்பு வருகிறது.
இந்த சிரிப்புக்குத் தூபம் போடுவதைப் போல மிக அழகாக, அழுத்தமாக தனது காதலி நடிப்பைப் பதிவு செய்திருக்கிறார் திவ்யா துரைசாமி. ஒரு பக்க மூக்குத்தியில் பிராமண பெண் தோற்றத்தில் தெரிவதால் இந்தக் காதலும் சாதி கடந்ததாகவே பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் என்று நினைக்கிறோம்.
எதற்கெடுத்தாலும் “கர்த்தர்கிட்ட ஜெபம் பண்ணப் போறேன். அப்புறம் அவ்வளவுதான்…” என்று மிரட்டல் விடுக்கும் அம்மாவாக லிஸி ஆண்டனியும், வீட்டுக்கு அடங்கிய அப்பாவாக குமரவேலுவும் தங்களது நடிப்பை வலுவாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.
முழுக்க, முழுக்க அரக்கோணத்தைச் சுற்றியுள்ள பகுதிகளியே படமாக்கப்பட்டுள்ளது. தமிழ் அழகனின் ஒளிப்பதிவில் கலரில் குறையில்லை. காட்சிகளில் வேகமுண்டு. அதிலும் குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டை படம் பிடித்திருப்பதில் கேமிராவை மிக அழகாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். எடுத்த காட்சிகளை நமக்குள் ஒரு பீலிங்கை உருவாக்கும் அளவுக்கு கச்சிதமாக நறுக்கிக் கொடுத்து படத்துக்கு பூஸ்ட் கொடுத்திருக்கிறார் படத் தொகுப்பாளர்.
அரக்கோணம் என்றாலும் சம்பந்தப்பட்ட இடங்கள், வீடு, மைதானம், ஜெபக்கூடம் என்று அனைத்தையும் பார்த்துப் பார்த்து கலை இயக்குநர் செட் செய்திருக்கிறார் பாராட்டுக்கள்.
கோவிந்த் வசந்தாவின் பாடல்கள் காதல், நட்பு, வீரம், கிரிக்கெட் என்று பலதையும் கலந்து கட்டிக் கொடுத்திருக்கிறது. ஆனால் ஒரு முறைதான் என்பதோடு பாடல்கள் தொலைவிலேயே நின்றுவிட்டது வருத்தமான விஷயம்.
‘நீலம்’ என்பதே தாழ்த்தப்பட்ட மக்களின் பிரியத்துக்குரிய கலராக பேசப்பட்டு வருகிறது. ‘நீலம் புரொடெக்சன்ஸ்’ என்று அதன் பெயரிலேயே ஒரு பட நிறுவனத்தை நடத்தி வரும் இயக்குநர் பா.ரஞ்சித், தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினைகளை மையமாக வைத்தே படங்களை தயாரித்தும், இயக்கியும் வருகிறார்.
அந்த வகையில் இந்த ‘நீல நிற’த்தை பிரபலப்படுத்துவதில் திரையுலகத்தில் தான்தான் ஸ்டார் என்பதை மற்றைய தாழ்த்தப்பட்ட பிரபலங்களுக்குக் காட்ட வேண்டும் என்பதற்காகவே ‘புளூ ஸ்டார்’ என்ற கிரிக்கெட் அணியை முன்னிறுத்தி இந்தப் படத்திற்குப் பெயர் வைத்திருக்கிறார்கள் போலும்..!
ஆனால் படத்திற்கு நிச்சயமாக ‘அரக்கோணம் ரயில்’ என்றோ ‘ரயில் பயணம்’ என்றோதான் பெயர் வைத்திருக்க வேண்டும். அந்த அளவுக்கு படம் நெடுகிலும் நிமிடத்திற்கு ஒரு முறை ரயில்கள் சென்று கொண்டிருப்பதையே காட்டியிருக்கிறார்கள்.
பா.ரஞ்சித்தின் வழக்கமான படம் போலவே சாதியப் பிரிவினை, பாகுபாடு, அம்பேத்கர் சிலை, அம்பேத்கர் திடல், பேச்சு வழக்கு, தன் அம்மா வயதாகியிருந்தாலும் காலனி மக்கள் என்பதால் மேல் சாதி இளைஞன் பெயர் சொல்லி அழைப்பது, சாதியப் பிடிப்பைக் கட்டிக் காத்து வரும் அரசியல்வியாதிகள்.. சாதிக்காக உறவுகளையே தூக்கியெறிய துணியும் வெறி.. சந்தடிசாக்கில் இந்திய கிரிக்கெட் அணியில் இருக்கும் சாதிய பாகுபாட்டையும் குத்திக் காட்டியிருப்பதையும் வைத்துப் பார்த்தால் இந்தப் படமும் சாதியத்தை எதிர்க்கும் படமாகவே அமைந்துவிட்டது..!
தயாரிப்பாளர் பா.ரஞ்சித்திற்கும், அறிமுக இயக்குநர் ஜெய்குமாருக்கும், அவரது குழுவினருக்கும் நமது வாழ்த்துகள். பாராட்டுக்கள்..!
RATING : 4 / 5