full screen background image

BLACK – சினிமா விமர்சனம்

BLACK – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை பொட்டன்ஷியல் ஸ்டூடியோவின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு இணைந்து தயாரித்துள்ளனர்.

படத்தில் ஜீவா, பிரியா பவானி சங்கர், சாரா, விவேக் பிரசன்னா, ஸ்வயம்சித்தா, ஆரண்யா, யோக்ஜெபீ மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – கே.ஜி.பாலசுப்ரமணி, ஒளிப்பதிவு – கோகுல் பினாய், இசை – சி.எஸ்.சாம், படத்தொகுப்பு – பிலோமின்ராஜ்.

‘COHERENCE’ என்ற ஹாலிவுட் படத்தின் அதிகாரப்பூர்வமான தமிழ் ரீமேக்குதான் இந்த ‘பிளாக்’ திரைப்படம்.

ஜீவாவும், பிரியா பவானி சங்கரும் காதல் தம்பதிகள். தங்களுக்கு திடீரென்று கிடைத்த 5 நாட்கள் விடுமுறையை கழிப்பதற்காக சென்னைக்கு அருகில் வாங்கி வைத்திருக்கும் வில்லா வீட்டுக்கு ஒரு நாள் மாலையில் வருகிறார்கள்.

அந்தக் குடியிருப்பில் அப்போதைக்கு இவர்களைத் தவிர வேறு யாருமே இல்லை. மற்றைய வீடுகளெல்லாம் காலியாகத்தான் உள்ளன. திடீரென்று வீட்டில் மின்சாரம் நின்றுபோக, ஜெனரேட்டரை ஆன் செய்வதற்காக ஜீவாவும், பிரியா பவானி சங்கரும் செல்கின்றனர்.

பின்னர் வீடு திரும்பியவுடன் எதிர்பாராத பல அமானுஷ்யமான விஷயங்கள் தொடர்ந்து நடக்கின்றன. எதிர் வீட்டில் விளக்குகள் எரிய யாரோ அந்த வீட்டில் இருப்பதுபோல தெரிகிறது.

ஜீவாவும், பிரியாவும் அங்கே சென்று பார்க்க அந்த வீட்டுக்குள் இருக்கும் செட்டப்புகள் அனைத்தும் தங்களது வீட்டில் இருப்பதுபோலவே காண்கிறார்கள். அதோடு அந்த வீட்டில் இன்னொரு ஜீவாவும், பிரியா பவானியும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். நம்ப முடியாத அதிர்ச்சியில் வீட்டுக்கு ஓடி வரும் ஜீவாவும், பிரியாவும் தாங்கள் பார்த்த்து பேயாக இருக்குமோ என்றெண்ணி பயப்படுகிறார்கள்.

இதைத் தொடர்ந்து அவர்களது வீட்டில் நடக்கும் பல அசம்பாவிதங்களால் பாதிக்கப்பட்டு, பயந்துபோய் அங்கேயிருந்து தப்பிக்கவும் நினைக்கிறார்கள். ஆனால் அவர்களால் காரில் ஏறியும் அந்தக் குடியிருப்புக்கு வெளியில் செல்ல முடியவில்லை. திரும்பத் திரும்ப அந்தக் குடியிருப்புக்குள்ளேயே காரில் சுற்றுகிறார்கள்.

தங்களைச் சுற்றி ஏதோ மர்மமான சம்பவங்கள் நடக்கிறது என்பதை உணரும் அவர்கள் அங்கேயிருந்து தப்பிக்க முயல்கிறார்கள். தப்பித்தார்களா.. இல்லையா.. அவர்களைச் சுற்றிய மர்மத்தின் பின்னணி என்ன என்பதை திகில், மர்மம், திரில்லர் என அனைத்துவிதமான உணர்வுகளோடு அறிவியலையும் சேர்த்து சொல்வதுதான் இந்த ‘பிளாக்’ திரைப்படம்.

தம்பதிகளாக படம் நெடுகிலும் ஓடியாடி நடித்திருக்கும் ஜீவாவும், பிரியா பவானியும் படம் முழுவதையும் தாங்களே சுமந்திருக்கிறார்கள். இவர்கள் இருவர் மட்டும்தானா என்ற கேள்வியே நமக்குள் எழாத வண்ணம் தங்களது எல்லை மீறாத நடிப்பினால் நம்மைக் கட்டிப் போட்டுள்ளார்கள்.

அவர்களைச் சுற்றி நடக்கும் அத்தனை குழப்பங்களுக்கும் தங்களது பதற்றம் கலந்த நடிப்பினாலும், உடல் மொழியாலும் நம்மையும் சேர்த்துப் படபடக்க வைத்திருக்கிறார்கள்.  

இவர்களின் இந்த படபடப்பை நமக்குக் கடத்தும் பொறுப்பை ஏற்றுள்ள ஒளிப்பதிவாளர் கோகுல் பெனாய் அதைக் கச்சிதமாய் செய்திருக்கிறார். எங்கும் இருட்டு, சில இடங்களில் கும்மிருட்டு, பல இடங்களில் லைட்டிங் என்று பல ஒளிக் கோர்வைகளையும் ஒரே பிரேமுக்குள் கொண்டு வந்து கொடுத்து நம்மையும் பதற்றத்திலேயே கடைசிவரைக்கும் வைத்திருக்க உதவியிருக்கிறார்.

இசையமைப்பாளர் சாமின் பின்னணி இசை படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய பலம். இது போன்ற திரில்லர் படங்களின் ஸ்பெஷலிஸ்ட்டான சாம்  தன்னுடைய பின்னணி இசையின் மூலமாக ஜீவா, பிரியாவைவிடவும் நம்மைத்தான் அதிகம் பயமுறுத்தியிருக்கிறார். என்ன நடக்கப் போகிறது.. ஏன் நடக்கிறது. அடுத்தது என்ன..   என்றெல்லாம் நம்மை யோசிக்க வைத்திருக்கிறது பின்னணி இசை..!

திரும்பத் திரும்ப நடந்த விஷயங்களே காண்பிக்கப்படுவதால் குழப்பத்தைக் கூட்டியிருக்கும் இந்தத் திரைக்கதையில் தெளிவுபடுத்த வேண்டிய விஷயங்களை சொல்லாமல் விட்டதனால் படத் தொகுப்பாளர் பிலோமின்ராஜ் மட்டுமே வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவராகிறார். மொத்தக் குழப்பமும் எடிட்டரால் வந்த விளைவுதான்..!

நிச்சயமாக இந்த ‘பிளாக்’ திரைப்படம் தமிழ் சினிமாவுக்கு ஒரு வித்தியாசமான முயற்சிதான். இரண்டே இரண்டு கதாபாத்திரங்களை மட்டும் வைத்துக் கொண்டு 2 மணி நேர திரைக்கதையில் நம்மை தலை சுற்ற வைத்திருக்கிறார் இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணி.

எதிர் வீட்டில் இருக்கும் ஜீவா – பிரியா பவானி சங்கர் தம்பதிகளைக் காட்டிய பின்பு ஒரு கட்டத்தில் இவர்களில் யார் நிஜம்.. யார் போலி என்று நமக்குப் பெரும் குழப்பம் ஏற்பட்டுவிடுகிறது. இந்தக் குழப்பத்துக்குக் கடைசிவரையிலும் விளக்கம் சொல்லாமலேயே இயக்குநர் படத்தை முடித்துவிட்டதால் படத்தில் என்னதான் நடந்தது என்று புரியாமலேயே எழுந்து வர வேண்டியதாகிவிட்டது..!

விண்வெளித் தளம், பிளாக் ஹோல், சூப்பர் மூன், டைம் லூப், குவாண்ட்டம் தியரி, பிஸிக்ஸ் என்று சகல அறிவியல் பாடங்களையும் இணைத்து வைத்து இயக்குநர் இதில் திரைக்கதை எழுதியிருந்தாலும், சாதாரண பாமர ரசிகனுக்கும் புரியும்வகையில் மிக எளிமையான முறையில் இந்தப் படத்தை வடிவமைத்திருந்தால் நிச்சயமாக இந்தப் படம் சூப்பர் ஹிட்டாகியிருக்கும்.!

RATING : 3 / 5

Our Score