பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிப்பில் தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்து பரவலான பாராட்டுகளும், வரவேற்பும் கிடைத்து ஓடிக்கொண்டிருக்கும் ‘பைசன்’ படத்தின் வெற்றியைப் படக் குழுவினர் சென்னையில் கொண்டாடினார்கள்.
இந்த நிகழ்வில் இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், “பைசன் படம் நான் தொடர்ந்து வேலை செய்வதற்கான பலத்தை கொடுத்துள்ளது. எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும், முரண் வந்தாலும் என்னை திருப்பிவிடலாம், என்னுடைய கதை சொல்லலை மாற்றிவிடலாம் என்று யாரும் நினைக்க வேண்டாம். அது எனது ரத்தத்திலேயே கிடையாது. நான் அதை விட்டு விலகுவதற்கான வாய்ப்பும் என்னிடம் இல்லை.
நான் சந்திக்கும் பிரச்சனைகள், மனிதர்கள் அவர்கள் சொல்லும் கதைகளை எல்லாம் கேட்டால் நீங்கள் வேறு எந்த படமும் எடுக்க முடியாது. என்னுடைய ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்கும் இடையில் இந்த சமூகம் எப்படி இருக்கிறது? அவர்கள் எப்படி வாழ்கிறார்கள்? நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதாகவே இருக்கும்.
நான் நிலையானவனாக இருக்க விரும்புகிறேன். ஏன் இது போன்ற படங்களை எடுக்கிறீர்கள் என்ற கேள்விகளை பத்திரிகையாளர்கள் என்னிடம் தவிர்த்துவிடுங்கள். அது என்னை மட்டுமல்லாமல், எனது வேலையையும் மிகவும் பாதிக்கிறது. குறிப்பாக, எனது சிந்தனையை பாதிக்கிறது.
மாரி செல்வராஜ் எடுப்பது சாதி படமா? என்று கேட்டால் அது உங்களின் மொழி. மாரி செல்வராஜ் எடுப்பது சாதிய எதிர்ப்பு படம். அதை தொடர்ந்து எடுப்பேன். இதை நான் திமிரில் சொல்லவில்லை, உணர்வுப்பூர்வமாக சொல்கிறேன். நான் கலையை நம்புகிறவன். எனது வாழ்க்கையை கலையாக மாற்றுகிறேன். எனது கலைக்கு வெறி, ஆற்றாமை, கண்ணீர், கேள்வி, காதல் என அனைத்தும் உள்ளது” என்றார்.









