பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிப்பில் தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்து பரவலான பாராட்டுகளும், வரவேற்பும் கிடைத்து ஓடிக் கொண்டிருக்கும் ‘பைசன்’ படத்தின் வெற்றியைப் படக் குழுவினர் சென்னையில் கொண்டாடினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் அமீர் பேசுகையில், “திரும்ப திரும்ப மாரியிடம் நீங்கள் ஏன் இந்த மாதிரி படம் எடுக்கிறீர்கள்? என கேட்கிறார்கள், இந்த சமூகத்தில் பிரச்சனையை ஏற்படுத்த நினைக்கிறீர்கள் என சொல்கிறார்கள். இது எவ்வளவு அபத்தமாக இருக்கிறது.
கண்ணுக்கு தெரியாத சாமி, இல்லாத பேய் இது இரண்டு பற்றியும் எடுக்கப்படும் படங்கள் இங்கு வெற்றி பெறுகிறது. ஆனால் கண்ணுக்கு தெரியக் கூடிய சாதி, அது ஏற்படுத்திய தீமைகள், கொடுமைகள் குறித்து படம் எடுத்தால், கூடாது என்பதும், கேள்வியை முன் வைப்பதும் அபத்தமாக இருக்கிறது.
மாரி, இரஞ்சித் படங்கள் பொது வெளியில் அரசியல் சார்ந்தவர்கள் கருத்தும், எதிர்ப்பும் தெரிவிக்கிறார்கள் என்பது எனக்குப் புரிகிறது. ரொம்ப நாளாக அடித்தோம், அப்படியே அடிவாங்கிக் கொண்டே இருக்க வேண்டியது தானே, எங்கே இருந்து உங்களுக்கு இந்த தைரியம் என்ற கேள்வியாக இருக்கலாம். நடந்தது நடந்துவிட்டது அதை ஏன் வெளியே சொல்கிறாய்? என்ற எண்ணமாக இருக்கலாம். இதனை அரசியல் சார்ந்தவர்கள் அமைப்பு சார்ந்தவர்கள் சொல்லும் போது லாஜிக் இருப்பதாக பார்க்கிறேன்.
ஆனால் திரைத்துறையில் இருந்து வரும் எதிர்ப்பை அபத்தமாக பார்க்கிறேன். அதிலும் ஒரு இயக்குநர் இந்தப் படம் பற்றி பேசும்போது, ஒரு பாடல் பாடி காண்பிக்கிறார். மிக கேவலமாகவும், குரூரமாகவும் `பைசன் பைசன் பைசன், அது பாய்சன்’ என நாராசமான குரலில் பாடினார்.
நான் கேட்கிறேன் அவர் ஒரு கருத்து வைத்திருக்கிறார். அதை கலையின் மூலம் வெளிக் கொண்டு வருகிறார். உன்னிடம் நிஜமாகவே கருத்து இருந்தது என்றால் நீயும் அதை கலையின் மூலம் கொண்டு வர வேண்டியதுதானே..? அப்படித்தானே நீ சண்டையிட வேண்டும். அதற்கு உன்னிடம் திராணி இல்லை.. அந்தக் கலைவடிவத்தில் வெளிப்படுத்த முடியவில்லை என்றால், அவதூறு பரப்பாதே.. ஏன் எடுக்கிறார் எனக் கேட்காதே” என்றார்.
பசுபதி பேசுகையில், “இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் அமீர் பருத்திவீரன் படத்தில் சரவணன் நடித்த சித்தப்பு கதாபாத்திரத்தில் பசுபதிதான் நடிக்க வேண்டும் என நினைத்து வைத்திருந்தேன். ஆனால் அவரை என்னால் அப்போது நடிக்க வைக்க முடியவில்லை எனக் கூறி இருந்தார். இந்த விஷயத்தை குறிப்பிட்டு பேசிய பசுபதி “அமீர் சாருடன் நான் நிறைய பேசியதில்லை. படத்திலும் எனக்கும் அவருக்குமான காட்சிகள் இல்லை, எனவே அங்கும் பேச முடியவில்லை. ஆனால் அவருக்கு ஒரு பதில் சொல்ல வேண்டும் என நினைப்பேன் ஆனால் விட்டுவிடுவேன். இப்போது அதை சொல்ல வேண்டும் போல தோன்றுகிறது…” என்றார்.











