full screen background image

பிஸ்கோத் – சினிமா விமர்சனம்

பிஸ்கோத் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை இயக்குநர் ஆர்.கண்ணனின் மசாலா பிக்ஸ் நிறுவனமும், MKRP புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருத்துள்ளன.

ந்தப் படத்தில் சந்தானம் நாயகனாக மூன்று வேடங்களில் நடித்திருக்கிறார். சந்தானத்திற்கு ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி மற்றும் சுவாதி முப்பாலா இருவரும்  நடித்துள்ளனர்.

மேலும், ஆடுகளம்’ நரேன், ஆனந்த்ராஜ், சௌகார் ஜானகி, ‘மொட்ட’ ராஜேந்திரன், சிவசங்கர், ‘லொள்ளு சபா’ மனோகர் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.

இப்படத்தில் ‘சௌகார்’ ஜானகி சந்தானத்தின் பாட்டியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது அவருக்கு 400-வது படம்.

இசை – ரதன், ஒளிப்பதிவு – சண்முகசுந்தரம், படத் தொகுப்பு – ஆர்.கே.செல்வா, கலை இயக்கம் – ராஜ்குமார், சண்டை இயக்கம் – ஹரி, நடன இயக்கம் – சதீஷ், மக்கள் தொடர்பு – ஜான்சன், தயாரிப்பு மேற்பார்வை – ராஜா ஸ்ரீதர், தயாரிப்பு – ஆர்.கண்ணன், எழுத்து, இயக்கம் – ஆர்.கண்ணன்.

ஏற்கெனவே இயக்குநர் கண்ணனின் இயக்கத்தில் ‘ஜெயம் கொண்டான்’ மற்றும் ‘கண்டேன் காதலை’ ஆகிய படங்களில் நகைச்சுவை வேடத்தில் சந்தானம் நடித்திருந்தார். ஆனால், சந்தானத்தை கதாநாயகனாக வைத்து கண்ணன் படம் இயக்குவது இதுவே முதல் முறை.

ஆடம் சாண்ட்லர்ஸ் நடிப்பில் 2008-ம் ஆண்டில் வெளியான ஹாலிவுட் படமான பெட் டைம் ஸ்டோரிஸ்’ படத்தின் கதையும் இந்தப் படத்தின் கதையும் ஒன்றுதான். முறைப்படி அனுமதி வாங்கினார்களா என்று தெரியவில்லை.

இந்தப் படத்தில் ஒரு பிஸ்கட் ஃபேக்டரி முக்கியமான கதாப்பாத்திரம்போல் வருகிறது. அதனால்தான் படத்துக்குப் ‘பிஸ்கோத்’ என்று பெயர் வைத்திருக்கிறார்களாம்.  

ஒரு பிஸ்கட் கம்பெனியில் சாதாரண ஊழியனாகப் பணியாற்றுபவன் எப்படி உயர் பதவிக்கு செல்கிறான் என்பதே இப்படத்தின் கதை.

ஆடுகளம்’ நரேன், தனது நண்பர் ஆனந்த்ராஜூடன் இணைந்து ஒரு பிஸ்கெட் கம்பெனியை நடத்தி வருகிறார். மனைவியை இழந்தவர். 6 வயதுப் பையன் மட்டுமே.

“புதிய வடிவத்தில் பிஸ்கட்டுகளை வெளியிட்டால் மட்டுமே இனிமேல் கம்பெனி தாங்கும்…” என்று பையனே ஐடியா கொடுக்கிறான். அதைச் செயல்படுத்துகிறார் நரேன். கம்பெனி வளர்கிறது. இவர்களும் வளர்கிறார்கள். திடீரென்று நரேன் மாரடைப்பால் காலமாக.. அப்போதிலிருந்து நரேனின் மகனான சந்தானம் ஆனந்த்ராஜால் வளர்க்கப்படுகிறார்.. மகனாக அல்ல.. வேலையாளாக..

தனது அப்பா துவக்கிய அதே நிறுவனத்தில் ஒரு சூப்பர்வைஸராக கவுரவம் பார்க்காமல் வேலை பார்த்து வருகிறார் சந்தானம். ஆனந்த்ராஜின் மகள் மீது சந்தானத்திற்கு கொஞ்சம் காதலும் உண்டு.

அதே ஊரில் இருக்கும் ஒரு முதியோர் இல்லத்திற்கு ரெகுலர் விசிட்டர் சந்தானம். அங்கேயிருக்கும் பெரியவர்களுக்கு வேண்டியதையெல்லாம் செய்து கொடுக்கிறார். ஒரு நாள் அந்த ஹோமை கவனித்துக் கொள்ளும் சிஸ்டர் வெளியூருக்குப் போக, நள்ளிரவில் பாதுகாப்புக்காக அங்கே தங்குவதற்காக வருகிறார் சந்தானம்.

வந்த இடத்தில் புதிய வரவாக செளகார் ஜானகியை பார்க்கிறார். செளகார் ஜானகி அமைதியாக யாரிடமும் பேசாமல் இருக்கிறார். ஊமையோ என்று நினைக்கும்போது சந்தானத்திடம் மட்டும் பேசுகிறார் செளகார்.

அவர் சொல்லும் ஒரு கதை மறுநாள் அப்படியே சந்தானத்தின் வாழ்க்கையில் நடக்கிறது. இது பூர்வ ஜென்ம கதையாகவும் சந்தானத்திற்குத் தெரிய வருகிறது. அதனால் பாட்டி மீது மிகுந்த பாசத்தைக் கொட்டுகிறார் சந்தானம்.

இந்த நேரத்தில் பிஸ்கட் கம்பெனிக்காக 500 கோடி ரூபாயில் மிகப் பெரிய பேக்டரியை கட்ட முடிவெடுக்கிறார் ஆனந்த்ராஜ். அதற்காக அவர் தேர்வு செய்த இடம் அந்த முதியோர் இல்லம்.

அந்த முதியோர் இல்லத்தைக் காலி செய்ய வைக்கும் பொறுப்பும் சந்தானத்திடமே வருகிறது. அவர் இப்போது என்ன செய்கிறார்..? செய்யப் போகிறார்..? கடைசியில் முதியோர் இல்லம் இடிக்கப்பட்டதா..? பிஸ்கட் கம்பெனியின் புதிய பேக்டரி கட்டப்பட்டதா..? இதெல்லாம்தான் கடைசி சில நிமிடங்களில் சொல்லப்படும் கதை.

இப்படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்திருக்கிறார். அதில் ஒன்று ‘சகலகலாவல்லவன்’ கமல் போன்ற வேடம். இதே வேடத்தில் 1985-ம் வருடத்து பாணியில் ஒரு சண்டைக் காட்சியும் இருக்கிறது. அதேபோல், 18-ம் நூற்றாண்டுகளில் நடந்ததுபோல் பாகுபலி’ டைப்பில் ஒரு ராஜா காலத்து கதையும் இருக்கிறது.

சந்தானம் டயலாக் பேப்பரை கையில் வாங்கிப் படித்துக் காண்பித்ததையே ஷூட் செய்துவிட்டார்கள் போலும். அவ்வளவு செயற்கையாக இருக்கிறது சந்தானத்தின் டயலாக் டெலிவரி. ஒரு காட்சியில்கூட சிரிப்பு வரவில்லை. நடிப்பாவது வந்ததா என்றால் அதுவும் இல்லை.

நடிப்புக்கே ஸ்கோப் இல்லாத அளவுக்கு திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் கண்ணன். இதற்காக சந்தானத்தைக் குற்றம் குறை சொல்லி புண்ணியமில்லை. காப்பியடித்ததைக்கூட ஒழுங்காக செய்யவில்லையென்றால் எப்படிங்க ஸார்..?

நன்றாக நடித்திருப்பது தாரா அலிஷாதான். அழகான முகத்தில் காதல், கோபம், அன்பு, பாசம் எல்லாவற்றையும் காண்பித்திருக்கிறார். அவர் இருக்கின்ற காட்சிகளில் ஸ்கிரீனே அழகாகத் தெரிந்தது. இன்னொரு ஹீரோயினாக ஸ்வாதி முப்பாலாவும் நடித்திருக்கிறார். ஆனால் முகவெட்டை ரசிக்க முடியவில்லை. எப்படி தேர்வு செய்தார்களோ.. தெரியவில்லை.

ஆனந்த்ராஜின் கேரக்டர் ஸ்கெட்ச் குழப்புகிறது. உண்மையில் சந்தானத்திடம்தான் அவர் வேலை பார்க்க வேண்டும். ஆனால், அவரோ சந்தானத்தை வேலை வாங்குகிறார். ஆனாலும் காமெடி செய்கிறார். இதனைப் பார்த்து சந்தானமும் அமைதியாக இருக்கிறார். அந்த பிஸ்கட் நிறுவனத்தில் தனக்கும் பங்கு இருக்கிறது என்பதையே அவர் நினைவில் கொள்ளவில்லை. இது என்ன மாதிரியான திரைக்கதை.. கேரக்டர் ஸ்கெட்ச் என்பதும் தெரியவில்லை.

இடையில் வரும் ‘ராஜ சிம்மா’ கதையில்கூட பாதி வசனங்கள் லோக்கல் பாஷையிலும், மீதி ராஜா காலத்து வசனமாகவும் இருப்பதால் இதையெல்லாம் நம்புவதா, வேண்டாமா என்கிற குழப்பம்தான் நமக்குள் மிஞ்சுகிறது.

அந்த ‘பாகுபலியை’ இமிடேட் செய்து வைத்திருக்கும் காட்சியைப் பார்த்துதான் ‘ஓ… இது காமெடி படம் போலிருக்கு’ என்று நினைக்க வேண்டியிருக்கிறது.

இதேபோல் கிரேக்க சாம்ராஜ்யத்தையும் தொட்டுவிட்டு அங்கேயும் சந்தானத்தை ராஜாவாக்கி அலங்கோலப்படுத்தியிருக்கிறார்கள். எதுவும் மனதில் ஒட்டவில்லை.

சந்தானத்தின் கைத்தடிகளாக வரும் ‘மொட்டை’ ராஜேந்திரனும், மனோகரும் அறுத்துத் தள்ளியிருக்கிறார்கள். இன்னொரு ஆறுதல் ‘ஆடுகளம்’ நரேன். தான் இருந்த காட்சிகளிலெல்லாம் தன்னுடைய குரலாலும், நடிப்பாலும் கொஞ்சமேனும் ரசிக்க வைக்கிறார். அவ்வளவுதான்.

ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரத்தில் ஒளிப்பதிவில் குறையில்லை. அவருக்குக் கொடுக்கப்பட்ட வசதிகளை வைத்து அழகாக படமெடுத்திருக்கிறார்.

இசையும், பாடல்களும் அதிகமாகக் கவரவில்லை. எடுக்கப்பட்ட பாடல் காட்சிகளைக்கூட முழுமையாகப் படத்தில் வைக்கவில்லை.

வெறும் 106 நிமிடங்களே இருக்கும் இத்திரைப்படம் உண்மையில் 150 நிமிடங்களாக இருந்திருக்க வேண்டும். நிறைய காட்சிகளை எடுத்து கட் செய்து எறிந்திருப்பதால் திரைக்கதையில் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமல் பல காட்சிகள் அந்தரத்தில் தொங்குகிறது. இதனாலேயே முழுமையாக இந்தப் படத்துடன் ஒன்றிணைய முடியவில்லை.

வெறுமனே சந்தானத்தின் கால்ஷீட் மட்டும் கிடைக்கப் பெற்றவுடன் அவசரம், அவசரமாக இதை உருவாக்கியிருக்கிறார் போலும். அந்த அவசரத்தில் சந்தானத்தின் மார்க்கெட்டிற்கும், கண்ணனின் படைப்புத் திறனுக்கும் வேட்டு விழுந்திருக்கிறது.

பிஸ்கட் என்றால் இனிக்க வேண்டும். ஆனால், இது இனிக்கவேயில்லை..!

Our Score