full screen background image

சந்தானம் ராஜா வேடத்தில் நடிக்கும் ‘பிஸ்கோத்’ திரைப்படம்..!

சந்தானம் ராஜா வேடத்தில் நடிக்கும் ‘பிஸ்கோத்’ திரைப்படம்..!

இயக்குநர் ஆர்.கண்ணனின் மசாலா பிக்ஸ் நிறுவனமும், MKRP புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘பிஸ்கோத்’.

இந்தப் படத்தில் சந்தானம் நாயகனாக மூன்று வேடங்களில் நடிக்கிறார். சந்தானத்திற்கு ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி மற்றும் சுவாதி முப்பாலா இருவரும்  நடிக்கிறார்கள்.

மேலும், ஆனந்த்ராஜ், சௌகார் ஜானகி, ‘மொட்ட’ ராஜேந்திரன், சிவசங்கர், ‘லொள்ளு சபா’ மனோகர் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.

இப்படத்தில் ‘சௌகார்’ ஜானகி சந்தானத்தின் பாட்டியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது அவருக்கு 400-வது படம்.

இசை – ரதன், ஒளிப்பதிவு – சண்முகசுந்தரம், படத் தொகுப்பு – ஆர்.கே.செல்வா, கலை இயக்கம் – ராஜ்குமார், சண்டை இயக்கம் – ஹரி, நடன இயக்கம் – சதீஷ், மக்கள் தொடர்பு – ஜான்சன், தயாரிப்பு மேற்பார்வை – ராஜா ஸ்ரீதர், தயாரிப்பு – ஆர்.கண்ணன், எழுத்து, இயக்கம் – ஆர்.கண்ணன்.

ஏற்கெனவே இயக்குநர் கண்ணனின் இயக்கத்தில் ‘ஜெயம் கொண்டான்’ மற்றும் ‘கண்டேன் காதலை’ ஆகிய படங்களில் நகைச்சுவை வேடத்தில் சந்தானம் நடித்திருந்தார். ஆனால், சந்தானத்தை கதாநாயகனாக வைத்து கண்ணன் படம் இயக்குவது இதுவே முதல் முறை.

பிஸ்கட் கம்பெனியில் சாதாரணமாக பணியாற்றுபவன் எப்படி உயர் பதவிக்கு செல்கிறான் என்பதே இப்படத்தின் கதை.

இப்படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கிறார். அதில் ஒன்று ‘சகலகலாவல்லவன்’ கமல் போன்ற வேடம். இதே வேடத்தில் 1985-ம் வருடத்து பாணியில் ஒரு சண்டைக் காட்சியும் இருக்கிறது. அதேபோல், ஐதராபாத்தில் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் உள்ளதுபோல் அரண்மனை தளம் அமைத்து இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது.

இந்த ‘பிஸ்கோத்’ படம் பற்றி இயக்குநர் ஆர்.கண்ணன் பேசும்போது, “இந்தப் படத்தில் ஒரு பிஸ்கட் ஃபேக்டரி முக்கியமான கதாப்பாத்திரம்போல் வருகிறது. அதனால்தான் படத்துக்குப் ‘பிஸ்கோத்’ என்று பெயர் வைத்தோம்.  

சந்தானத்தின் வேறு சில பரிமாணங்களை இதில் வெளிப்படுத்தியிருக்கிறோம். இதில் ‘ராஜசிம்மா’ என்கிற பெயரில் சந்தானம் ஒரு அரசராக நடித்திருக்கிறார். சந்தானத்தின் பாட்டியாக சௌகார் ஜானகி நடித்துள்ளார்.

இந்த ராஜா காலக்கட்ட காட்சிகள் 30 நிமிடங்கள் வரும். இதற்காக அந்தக் காலத்து ஆதாரங்களை எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு கலை இயக்குநர் ராஜ்குமார் அரங்கம் அமைத்தார். இதற்கான உடைகளுக்காக மிகவும் சிரமப்பட்டு உடை அலங்கார நிபுணர் பிரியா உடைகளை வடிவமைத்துக்கொடுத்தார். இதற்கான காட்சிகளில் துணை நடிகர்கள் 500 பேர் நடித்தார்கள் அவ்வளவு பேருக்கும் உடைகள் தயாரிக்கப்பட்டன.

காட்சிகள் பெயிண்டிங்கில் போல் வந்துள்ளன. அந்தக் கால பெயிண்டிங் போன்றவற்றை வைத்து ஓவியங்கள் போல் ஒளி அமைப்பு செய்து ’96’ படத்தின் ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்து பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

படத்தில் பதினெட்டாம் நூற்றாண்டுக் காலக்கட்டத்தில் வரும் காட்சிகளுக்குத்தான் இப்படி ராஜபார்ட் வேடமும் அரங்கங்களும் அமைக்கப்பட்டன. இன்னொரு பகுதியாக எண்பதுகளில் இடம் பெறும் காட்சிகள் வரும். மூன்றாவது பகுதியாக சம காலத்து காட்சிகள் அதாவது இக்கால 2020-ம் ஆண்டிற்கான காட்சிகள் அமைந்திருக்கும்.

இந்த படத்திற்காக சந்தானம் கொடுத்த ஒத்துழைப்பு சாதாரணமானதல்ல. இப்படத்தில் இடம்பெறும் களரிச் சண்டைக் காட்சிகளுக்காக ஸ்டண்ட் ஹரி தினேஷிடம் களரி கற்றுக் கொண்டார். அதன் பிறகுதான் நடித்தார்.

அந்தக் காலத்தில் சௌகார்ஜானகி ‘தில்லு முல்லு’ படத்தில் நடித்த நகைச்சுவைக் காட்சிகளைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன். அவர் இந்தப் படத்தில் சந்தானத்தின் பாட்டியாக வருகிறார். நகைச்சுவையில் கலக்கி இருக்கிறார்.

இம்மூன்று காலகட்டத்துக்கும் என்ன தொடர்பு என்பது படம் பார்த்தால் புரியும். மொத்தத்தில் முழுக்க முழுக்க சிரிக்க வைக்கும் படமாக இது இருக்கும்.

சந்தானம் ரசிகர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பிடித்த படமாக ‘பிஸ்கோத்’   இருக்கும். வடிவேலுவுக்கு எப்படி ‘இம்சை அரசன் ‘அமைந்ததோ அப்படி சந்தானத்துக்கு ‘பிஸ்கோத்’ படம் அமையும். அது போல் பேசப்படும் படமாகவும் இருக்கும்.

கொரோனா முடக்கத்துக்குப் பிறகு அனைவருக்கும் ஒரு மன அழுத்தம் இருக்கிறது. அந்த அழுத்தங்களில் இருந்து விடுதலை பெற வைக்கும்  வகையில் பெரிய மன நிம்மதி அளிக்கும்படியான  கலகலப்பான காமெடி படமாக ‘பிஸ்கோத்’ இருக்கும்…” என்றார்.

ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் இந்தப் படத்தை வெளியிடுகிறார்.

Our Score