அரசியலில் நுழைந்தால் வீட்டுக்கு வருவதற்கே நேரமிருக்காது என்பார்கள். ஏனெனில் இது மக்கள் பணி என்றும் சொல்வார்கள். ஆனால் பீகார் மாநிலத்தில் ஆளும் அரசில் இளைஞர் நலத்துறை மந்திரியாக இருக்கும் வினய் பிகாரி இயக்குநர் ஹரி இயக்கத்தில், விஷால், ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘பூஜை’ படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்கவே போகிறாராம்..! அவ்வளவு வெட்டி ஆபீஸர் போலிருக்கிறது..!
‘பூஜை’ படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு இப்போது பீகாரில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக அனுமதி பெறுவதற்காக அமைச்சர் வினய் பிகாரியை தொடர்பு கொண்டிருக்கிறது ‘பூஜை’ படக் குழு.
சினிமா.. தமிழ்ச் சினிமா என்றவுடன் ஆர்வமான அமைச்சர் தனது மக்கள் நலப் பணிகளையெல்லாம் தூக்கி ஓரமாகப் போட்டுவிட்டு.. “உங்களுடைய படத்தின் படப்பிடிப்புக்கு நான் கியாரண்டி.. ஆனா ஒரு கண்டிஷன்.. இந்தப் படத்துல நான் ஒரு கேரக்டர் செய்யணும்..” என்று சொல்லியிருக்கிறார்.
போனவர்கள் முழிக்க.. “பயப்படாதீங்க.. நான் ரொம்ப டேக்கெல்லாம் வாங்க மாட்டேன்.. நான் பல போஜ்பூரி படங்கள்ல நடிச்சிருக்கேன்.. ஏன் ஒரு படத்தையே இயக்கிய அனுபவமும் எனக்குண்டு.. என்ன சொல்றீங்க..?” என்று கிடுக்கிப்படி போட்டிருக்கிறார்.
நமக்கு நம்ம வேலைதான முக்கியம்..? அவரென்ன ஹீரோ கேரக்டரா கேக்குறார்..? ஏதோ ஒரு கேரக்டர்தானே..? பீகாரில் தேவையான கேரக்டர்களில் ஒன்றை அந்த அமைச்சருக்கே கொடுத்து இப்போது சகல செளபாக்கியங்களுடன் பூஜை டீம் தனது ஷூட்டிங்கை நடத்தி வருகிறதாம்..!
இதில் யாருக்கு அதிர்ஷ்டம் என்பது படம் வெளிவந்த பின்பு தெரியும்..!