‘எட்டுத்திக்கும் மத யானை’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் இமயம் பாரதிராஜா பேசியதில் இருந்து சில பகுதிகள் இங்கே :
“……….ஒரே மாதிரி மேடை… ஒரே மாதிரி பேச்சு.. வாழ்த்து… என்று இருப்பதால் இசை நிகழ்ச்சிகளை தவிர்க்க முடிவெடுத்திருந்தேன். இதை பல இடங்களில் குறிப்பிட்டு சொல்லியும் வருகிறேன். ஆனால், இந்தப் படத்தின் இயக்குநர் தங்கசாமியோடு சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்ததால் என் முடிவை தூக்கி வைத்து விட்டு வந்திருக்கிறேன். அதற்கு காரணம் அவனுடைய தன்னம்பிக்கை. இந்தப் படத்திற்காக எட்டுத் திசையிலும் முட்டி மோதி முழு தன்னம்பிக்கையோடு உழைத்திருக்கிறான். படத்தின் தலைப்பு அவனுக்கு நிச்சயம் பொருந்தும்.
‘ராட்டினம்’ படம் வெளியானபோது இது என்ன டைட்டில் இப்படியெல்லாம் டைட்டில் வைத்திருக்கிறார்களே என்று நினைத்தேன்..! நான் மலேஷியா சென்றிருந்தபோது எனது மகள் ‘ராட்டினம்’ படத்தை பார்க்க வற்புறுத்தினார். படம் பார்த்தேன். இந்தப் படத்தின் கிளைமேக்ஸை அப்படி சொல்வதற்கு தனி துணிச்சல் வேண்டும். எனக்கு பெரிய ஷாக்! உடனே தங்கசாமியை அழைத்து பாராட்ட வேண்டுமென்று நினத்தேன். முடியவில்லை. கொஞ்சம் தாமதமாகத்தான் வாழ்த்தினேன். நடுத்தர வர்க்கத்தை, யதார்த்தமாக இயல்பாக சொல்யிருக்கிறார். அற்புதமான படைப்பு.
தங்கசாமியிடம் பத்து நிமிடங்கள் பேசினேன். அப்போது அவர் மிகப் பெரிய தன்னம்பிக்கை உள்ளவர் என்பதை அறிந்தேன். சினிமா இயக்குனர் ஆன பின்பு சில பேர் தங்களுடைய பெயரை ஸ்டைலாக மாற்றிக் கொள்வார்கள். தங்கசாமி, மாற்றிக் கொள்ளவில்லை. ஆளும் அப்படியேதான் இருக்கிறார். பெயரும் அப்படியேதான் இருக்கிறது.
பாடல்களை பார்த்தேன்.. நன்றாக இருந்தது. இப்படமும், ‘ராட்டினம்’ போல பேசப்படும். இசையமைப்பாளர் மனுரமேசன் நாகரீக இளைஞராக இருந்தாலும் பாடல்களில் கிராமத்து வாசனை இருக்கிறது. பாக்கியராஜை ஹீரோவாக வைத்து ‘புதிய வார்ப்புகள்’ இயக்கினேன். இப்படி ஒருவனை வைத்து ஒரு படமா என்றும், திமிரோடு இந்த வேலையில் இறங்குறேன் என்றும் கூறினார்கள். அப்போதைய பல ஜாம்பவான்கள் என்னிடம் எதுக்கு இந்த வேலை என்றும் கேட்டார்கள். என் மீது எனக்கு இருந்த தன்னம்பிக்கைதான் அதற்கு காரணம். நம்மிக்கையை மட்டுமே வைத்து ஜெயித்தவன் நான். இந்தப் படத்தின் இயக்குநர் தங்கசாமிக்கும் அந்த தன்னம்பிக்கை அதிகம் இருக்கிறது. அவருடைய குழுவினர் அனைவரும் நல்ல உழைப்பை சிந்தியிருக்கிறார்கள். நிச்சயம் வெற்றி பெறுவார்கள்.
இங்கே இருக்கும் எல்லா கலைஞர்களுக்குமான ஒரு விஷயம். பாடல் காட்சி வரும்போது முழுக்க கேமராமேன்களின் ஆளுமையே அதிகமாக இருக்கிறது. அதனால் கவிஞர்களுடைய வரிகள் முக்கியத்துவமானதாக ஆகாமல் தடைபடுகிறது. வரிகள் ஒன்றாக இருக்கிறது, வடிவம் வேறாக இருக்கிறது. இரண்டையும் சேர்ந்து லிப் மூவ்மெண்ட் கொடுத்து ஒரு நடிகன் பாடும்போதுதான் முகபாவனையோடு அந்த நடிகனை பார்க்க நன்றாக இருக்கும். காட்சியும் சிறப்பாக அமையும். சுந்தரி சேலை கட்டி சுந்தரி வந்தாள்…’ அப்படிங்கற பாடல் காட்சியை பார்த்தால் சுவிட்சர்லாந்துல மாடர்ன் டிரஸ்ஸோட ஹீரோயின் ஆடுவாங்க. எங்கே போச்சு சுங்கடி சேலை..?
வடிவம் ஒண்ணா இருக்கும், வரிகள் வேறா இருக்கும். எழுத்தாளர்கள்தான் இயக்குனர்களிடம் வலியுறுத்தி இது பற்றி கேட்க வேண்டும். கேமராமேன்களின் ஆளுமையை கொஞ்சம் குறைத்துக்கொண்டு பாடலை எழுதும் கவிஞர்களுக்கு மரியாதை கொடுங்கள்.
இன்றைய இளைஞர்களிடம் வித்தியாசமான கதைக் களம், நவீன தொழில் நுட்பம் இருக்கிறது. இதேபோல் பாடல் காட்சிகளிலும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்…’’