மலையாளத்தில் மம்மூட்டி, நயன்தாரா நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற திரைப்படம் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’.
பிரபல மலையாள இயக்குநர் சித்திக்கின் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் தற்போது ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ என்ற பெயரில் தமிழில் படமாக்கப்பட்டு வருகிறது. மம்மூட்டி நடித்த கேரக்டரில் அரவிந்த்சாமியும், நயன்தாரா நடித்த கேரக்டரில் அமலாபாலும் நடித்து வருகின்றனர்.
மேலும், நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ஆகியோரும் நடிக்கின்றனர். இவர்களுடன் ‘தெறி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனாவின் மகள் பேபி நைனிகா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் ஆஃப்தாப்ஷிவ் தசானி நடிக்கிறார். சிறப்புத் தோற்றத்தில் நிகிஷா பட்டேலும் நடிக்கிறார்.
இயக்கம் – சித்திக், இசை – அம்ரேஷ், வசனம் – ரமேஷ் கண்ணா, ஒளிப்பதிவு – விஜய் உலகநாதன், படத் தொகுப்பு – கே.ஆர்.கௌரிசங்கர், புரொடக்ஷன் டிசைனர் – மணி சுசித்ரா, கலை இயக்கம் – ஜோசப் நெல்லிகன், சண்டை பயிற்சி – பெப்சி விஜயன், நடனம் – பிருந்தா, தயாரிப்பு – எம்.ஹர்சினி.
தற்போது சென்னையில் இறுதிகட்ட படபிடிப்பு நடந்து வரும் நிலையில், படத்தின் ஒரு பாடல் காட்சி மாலத் தீவில் படமாக்கப்படவுள்ளது. இதற்காக படக் குழுவினர் வருகின்ற 27-ஆம் தேதி மாலத்தீவிற்கு செல்கின்றனர்.
இந்த படப்பிடிப்போடு மொத்தப் படமும் முடிவடைவதால் விரைவில் படம் வெளியாகவுள்ளது.