சமீபத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கும் ‘பெங்களூர் டேய்ஸ்’ என்ற மலையாளப் படத்தின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உரிமையை பி.வி.பி.சினிமா நிறுவனமும், பிரபல தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர், விநியோகஸ்தரான தில் ராஜுவும் இணைந்து பெற்றிருக்கிறார்கள்.
இன்றைய இளைய சமூகத்திற்கேற்றாற்போல்.. அவர்களுடைய நிஜ வாழ்க்கையில் நடக்கின்ற சம்பவங்களை போல திரையில் புதிய அனுபவத்தைக் கொடுத்திருக்கும் பெங்களூர் டேய்ஸ் படத்திற்கு தினம் தினம் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மலையாள மொழி புரியாவிட்டாலும் சப் டைட்டிலை வைத்தே படத்தை ரசித்துக் கொண்டிருக்கும் தென்னக மொழி சினிமா ரசிகர்கள்..!
துல்கர் சல்மான், பஹத் பாசில், நிவின் பாலி, நஸ்ரியா நஸீம் என்று இன்றைய இளைய நட்சத்திரக் கூட்டம்தான் படத்தில் நடித்திருக்கிறார்கள். அஞ்சலி மேனன் என்ற இள வயது பெண் இயக்குநர் கதை எழுதி இயக்கியிருக்கிறார். அன்வர் ரஷீத் தயாரித்திருக்கிறார்.
பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்தாலே அந்தப் படத்தை வாங்க போட்டோ போட்டி வரும்வேளையில் இந்தப் படத்தை விட்டுவிடுவார்களா என்ன..? பி.வி.பி. சினிமாவும், தில் ராஜுவும் ரீமேக் உரிமையை வாங்கி தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் இந்தப் படத்தினை தயாரிக்கவுள்ளார்கள்..
‘சந்தோஷ் சுப்ரமணியம்’ படத்தின் மூலமான தெலுங்கு ‘பொம்மரிலு’ படத்தை இயக்கிய பாஸ்கரன் தமிழ், தெலுங்கு இரண்டு மொழி படங்களையும் இயக்கவுள்ளாராம்..!ஹீரோக்கள், ஹீரோயின்களை தேடும் படலம் தற்போது மும்முரமாக நடந்து வருகிறதாம்..!
தமிழ்ப் படத்தின் தலைப்பு ‘பெங்களூர் டேய்ஸாக’ இருக்குமா அல்லது ‘சென்னை டேய்ஸாக’ மாறுமா என்பதுதான் தெரியவில்லை..!