இந்தி சினிமாக்களின் அமோக வெற்றி இந்தியாவெங்கும் சினிமா துறையை வளம் கொழிக்கச் செய்து கொண்டிருக்கிறது. புதிது, புதிதாக தயாரிப்பாளர்கள் வரிந்து கட்டிக் கொண்டு வருகிறார்கள்.
இந்திய சினிமா ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ‘பேங் பேங்’ படம் கடந்த வியாழனன்று உலகமெங்கும் வெளியாகி, இதுவரைக்கும் இல்லாத சாதனைகளை படைத்து கொண்டிருக்கிறது. இந்தப் படம் இப்போது தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிரித்திக் ரோஷனும், கேத்ரினா கைஃபும் இணைந்து நடித்திருக்கும் இந்தப் படம் வெளியான ஐந்தே நாட்களில் நிகர வசூலாக 109.49 கோடி ரூபாயை(மொத்த வசூல் 156.41 கோடியாம்) வசூலித்திருக்கிறது. கடந்த திங்கள்கிழமைவரையிலும் இந்தியாவில் மட்டும் 15.36 கோடி(மொத்த வசூல் 21.94 கோடி) வசூலித்திருக்கிறதாம்.
அதே நேரம் வெளிநாடுகளிலும் இப்படம் மிகப் பெரிய வசூல் சாதனை செய்து 45.10 கோடியை குவித்திருக்கிறது. இதையெல்லாம் சேர்த்தால் மொத்த வசூல் தொகை 201.51 கோடிகள் என்கிறது ‘பேங் பேங்’ படக் குழு.
இதுவரையிலும் இருந்த சாதனையான முதல் வாரத்திலேயே 100 கோடி என்பதையெல்லாம் தகர்த்து 200 கோடியைத் தாண்டிவிட்டது ‘பேங் பேங்’ வசூல்.
மேலும். ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தயாரித்த இந்திய படங்களில் ‘பேங் பேங்’ அதிக வசூல் சாதனை புரிந்து, பாலிவுட் படங்களில் ‘டாப் 5’-ல் இடம் பெற்றிருப்பது பெருமைக்குரியதுதான்.
இந்தியா முழுவதிலும் இருக்கும் மால்களில் இருக்கும் தியேட்டர்களில் கூடும் கூட்டம்தான் இந்திய வசூலுக்கு மிக முக்கிய காரணம்.. தியேட்டர் கட்டணம் மிக அதிகமாக இருந்தாலும் தமிழகம் தவிர மற்ற இடங்களில் என்ன விலை வைத்தாலும் ஒரு கூட்டம் தியேட்டர்களுக்கு ஓடி வருகிறதாம்.. இந்த நிலை தொடர்ந்தால் வசூல் கணக்கில் பாலிவுட்டை பாலிவுட்டால் மட்டுமே மிஞ்ச முடியும்..!