பாலுமகேந்திராவின் உடல் தகனம் செய்யப்பட்டது

பாலுமகேந்திராவின் உடல் தகனம் செய்யப்பட்டது

ஒரு படைப்பாளியின் மரணம் எவ்வளவு பெரியது என்பதை தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் இன்று நடத்திக் காட்டிய, கேமிரா கவிஞன் பாலுமகேந்திராவின் இறுதி நிகழ்ச்சி சுட்டிக் காட்டியது. 

அவருடைய உடல் வைக்கப்பட்டிருந்த சாலிகிராமம் பகுதியில் பெரும்பாலான கடைகள் இன்று காலையில் மட்டும் மூடப்பட்டிருந்தன. பல சுவரொட்டிகள் இயக்குநர் பாலுமகேந்திராவை வாழ்த்தி ஒட்டப்பட்டிருந்தன. 

முன்னதாக இன்று காலை அவருடைய துணைவி மெளனிகா வந்து அஞ்சலி செலுத்தினார்.  பழ.நெடுமாறன், ஜே.கே.ரித்தீஷ், சரத்பாபு, ஏ.எல்.அழகப்பன், இயக்குநர்கள் விஜய், பேரரசு, லஷ்மி ராமகிருஷ்ணன், யார் கண்ணன், எஸ்.பி.முத்துராமன், அட்லி, ஜேடி, ஜெர்ரி, நடிகர் வ.ஜ.செ.ஜெயபாலன், ஓவியர் புகழேந்தி, ஓவியர் வீரசந்தானம், தோழர் சு.தமிழ்ச்செல்வன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.. நடிகர் ரஜினி நேற்றைய தினம் இரவே வருவார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் வரவில்லை. அவருக்கு பதிலாக அவருடைய நண்பர் நட்ராஜும், ரசிகர் மன்றப் பொறுப்பாளர் சுதாகரும் மலர்வளையம் வைத்தனர். அங்கே நின்றிருந்த ரசிகர்கள் கூட்டம் பற்றி கேள்விப்பட்டவுடன் வருகையை ரஜினி ரத்து செய்துவிட்டதாகச் சொன்னார்கள்.

ஈழத்துக் கவிஞர் வ.ஜ.ச.ஜெயபாலன் எழுதிய இரங்கற்பாவை எழுத்தாளர் பவா.செல்லத்துரை பாலு மகேந்திராவின் காலடியில் நின்று வாசித்துக் காட்டினார். இதேபோல் வேறு ஒருவரும் தனது கவிதையை வாசித்துக் காட்டினார். 

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் இயக்குநர் பாலுமகேந்திராவின் இறுதிச் சடங்கை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு முன்னின்று நடத்தியது. காலை 11.45 மணிக்கு அவருடைய பூதவுடல், அலங்கரிக்கப்பட்ட லாரியில் ஏற்றப்பட்டு இறுதி யாத்திரை துவங்கியது. ஊர்வலத்தில் டைரக்டர்கள் பாரதிராஜா, மகேந்திரன், அமீர், சீமான், விக்ரமன், செல்வமணி, சசிகுமார், வசந்தபாலன், வி.சேகர், ஜனநாதன், கதிர், சமுத்திரக்கனி, சீனுராமசாமி, வெற்றிமாறன், ராம், கரு.பழனியப்பன், சரவண சுப்பையா, சுப்பிரமணியம் சிவா, ‘ஆச்சார்யா’ ரவி, மனோபாலா, நடிகர் கருணாஸ், கவிஞர் அறிவுமதி, எழுத்தாளர் பவா.செல்லத்துரை, சு.தமிழ்ச்செல்வன் உள்பட பலரும் நடந்து வந்தனர்.

சுடுகாட்டில் ஏற்கெனவே இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனுடன் எழுத்தாளர் சாரு நிவேதிதாவும் வந்து காத்துக் கொண்டிருந்தார்.  இயக்குநர் கே.பாக்யராஜ், மனோஜ்குமார், ஒளிப்பதிவாளர் ரவீந்தர், ஆர்.டி.ராஜசேகர், வேல்ராஜ் மற்றும் பல முன்னணி இயக்குநர்களும் தவறாமல் ஆஜராகியிருந்தனர். இருவர் மட்டுமே மிஸ்ஸிங். லிங்குசாமியும், ஏ.ஆர்.முருகதாஸும்தான்..

வடபழனியில் இருந்து போரூர் காரப்பாக்கம் வரையிலான தூரத்தை 2 மணி நேரம் கடந்து 1.45 மணிக்கு சுடுகாட்டை வந்தடைந்தது ஊர்வலம். சுடுகாட்டில் பெரும் திரளாக கூட்டம் கூடியிருந்ததால் பயங்கர நெரிசல் ஏற்பட்டது. ஈமக்கிரியை நடக்குமிடத்தில் அவருடைய உடல் ஓரிரு நிமிடங்கள் வைக்கப்பட்டு பின்பு தகன மேடைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

பாலுமகேந்திரா பிறப்பால் கிறித்தவர் என்பதால் சர்ச்சுக்கு கொண்டு சென்று திருப்பலி செலுத்தி கல்லறைக்குக் கொண்டு செல்லத்தான் முதலில் விரும்பினார்கள். ஆனால் பின்பு திடீரென்று மனம் மாறி தகனம் செய்ய முடிவெடுத்துவிட்டார்கள்.

கூட்டம் அதிகமாக இருக்கவே மிகுந்த கூச்சல், குழப்பத்துக்கிடையேதான் அவருடைய உடலை தகன மேடைக்குக் கொண்டு போக முடிந்தது.. சில பிரபலங்களை முன்கூட்டியே மேடையின் அருகில் அனுப்பிவிட்டு இரும்புக் கதவைப் பூட்டி வைத்தனர். அப்படியிருந்தும் இயக்குநரின் உடலைத் தூக்கிச் செல்லும்போது பெரும் கூட்டம் உள்ளே நுழைந்துவிட.. மிகுந்த பிரயத்தனப்பட்டு கூட்டத்தை அடக்கினர் நிர்வாகிகள்..!

தகனக் காரியங்களை முடித்துவிட்டு இயக்குநர் சுகா கதறி அழுதபடியே வெளியே வந்தார். இவர் மட்டுமல்ல.. உள்ளேயிருந்து வெளியே வந்தவர்கள் அனைவரின் கண்களிலும் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது..! நடிகை அர்ச்சனா கடந்த 2 நாட்களாக பாலுமகேந்திராவின் உடல் அருகே நின்று கொண்டு மாலையை வாங்கிப் போடும் வேலையைக்கூட செய்து கொண்டிருந்தவர்.. எல்லாம் முடிந்து போகும்போது பாலு பாலு என்று அரற்றியபடியே சென்றார். நடிகை ஈஸ்வரிராவ்தான் அவரைத் தாங்கிப் பிடித்து அழைத்துச் சென்றார்.. இயக்குநர் மகேந்திரனும் துக்கம் தாளாமல் அழுதபடியே வர அவரை இயக்குநர் சமுத்திரக்கனி தாங்கிப் பிடித்து அழைத்து வந்தார். 

பாலுமகேந்திராவின் சீடர்கள்.. அவருடைய நடிப்பு கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரும் வாய்விட்டு அழுதனர்.. இயக்குநர் பாரதிராஜா ரொம்பவே தளர்ந்து போய்விட்டார்.. "என் நண்பன் போயிட்டானேய்யா.. இனிமே எனக்கு யாருய்யா இருக்கா..? என்று புலம்பினார்.

இயக்குநர் பாலுமகேந்திராவி்ன் மரணம் தமிழ்த் திரையுலகில் உண்மையாகவே ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவருடைய மாணவர்களாக இல்லாத இயக்குநர்கள்கூட அவர் மீது வைத்திருந்த பாசம், நேசத்தில் ஓடி வந்து உருகியதெல்லாம் அவருடைய படைப்பின் மீதும், அவர் மீதும் அவர்கள் வைத்திருந்த மரியாதையினால்தான்..!

வளரும் கலைஞர்களுக்கு இந்த நிகழ்வு ஒரு பாடமாகவும் இருக்கட்டும்.. போனால் இப்படி ராஜமரியாதையோடு போக வேண்டும்.. அதுதான் ஒரு உண்மையான கலைஞனின் எதிர்பார்ப்பாக இருக்க வேண்டும் என்பதைத்தான் பாலுமகேந்திராவின் இந்த இறுதி நிகழ்வு சுட்டிக் காட்டியது.

அமரர் பாலுமகேந்திராவின் ஆன்மா சாந்தியாகட்டும்..!