தயாரிப்பாளரும், இயக்குநருமான கலைஞானம் ஷோபாவை நாயகியாக வைத்து ஒரு படத்தை இயக்கித் தரும்படி பாலு மகேந்திராவிடம் கேட்கச் சென்றபோது, இயக்குநர் பாலு மகேந்திரா ஒரு செக்ஸ் கலந்த கதையைச் சொல்லி இதைத் தயாரியுங்கள் என்று கலைஞானத்திடம் கேட்டிருக்கிறார். கலைஞானம் அதை மறுத்துவிட்டாராம்.
இந்தக் கதையை கலைஞானம் சமீபத்திய ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
“1979-களில் ஷோபா நல்ல நடிகையாக தமிழ்ச் சினிமாவில் இருந்தார். அவர் நடித்த ‘நிழல் நிஜமாகிறது’, ‘பசி’, ‘முள்ளும் மலரும்’ ஆகிய படங்களில் அவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்திருந்தது. எனக்கும் ஷோபாவை மிகவும் பிடித்துவிட்டது.
எப்போதும் சோகமான முகம். அழுது வடியும் முகம். ஆனால் களையான முகம். இது நாயகிக்கேற்ற முகவெட்டு என்பதால் அவரை நாயகியாக வைத்து ஒரு படத்தைத் தயாரிக்க முடிவு செய்தேன்.
ஷோபாவைப் பற்றி விசாரித்தபோது அவர் தற்போது இயக்குநர் பாலு மகேந்திராவின் மேற்பார்வையில் இருப்பதாகச் சொன்னார்கள். ‘ஓகே.. அப்படீன்னா அந்த பாலு மகேந்திராவையே அந்தப் படத்தை இயக்கச் சொல்லிருவோம்’ என்னும் நினைப்புடன் பாலு மகேந்திராவைப் பார்க்க அவரது வீட்டுக்குச் சென்றேன்.
நான் சென்ற நேரம் வீட்டு வாசலின் காம்பவுண்ட் சுவரில் கை வைத்தபடியே வானத்தைப் பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார் ஷோபா. அவரைப் பார்த்தபடியே உள்ளே படியேறினேன்.
உள்ளே ஷோபாவின் அம்மாவுக்கும், பாலு மகேந்திராவுக்கும் இடையில் பயங்கர சண்டை. கடும் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. அந்தச் சண்டை முடிந்து அந்தம்மா வீட்டுக்குள் இருக்கும் ஒரு அறைக்குள் போனவுடன் நான் ஹாலில் காலடி எடு்த்து வைத்தேன்.
பாலு மகேந்திராவிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினேன். “உங்களை எனக்குத் தெரியுமே.. சொல்லுங்க ஸார்…” என்றார். “நம்ம ஷோபாவை வைச்சு ஒரு படத்தை நீங்கதான் இயக்கித் தரணும்…” என்றேன். “ஓ.. பண்ணிரலாமே…” என்றவர் “நான் ஒரு கதை சொல்றேன்.. கேக்குறீங்களா..?” என்றார்.
“சொல்லுங்க..” என்று நானும் ஆர்வமானேன். ஆனால், அவர் சொன்ன கதையில் செக்ஸ் நிறைய கலந்திருந்தது. அது எனக்கு ஒவ்வாததாக இருக்க.. “யோசிச்சு சொல்றேன் ஸார்…” என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.
அதன் பின்பு.. அவர் பெரிய இயக்குநர்.. கேமிராமேன்.. “கதை பிடிக்கலை”ன்னு சொன்னா நல்லாயிருக்காது. அதுனால அப்படியே விட்டிரலாம். மெளனம்தான் இந்த மாதிரி விஷயத்துல நல்லதுன்னு நினைச்சு விட்டுட்டேன்.
ஆனால், பாலு மகேந்திரா விடலை. தினமும் போன் செய்வார். நான் ஒரு முறை எடுத்து மாட்டிக் கொண்டேன். “நாளைக்கு வர்றேன் ஸார்” என்று சொல்லியே நாள் கடத்தினேன். ஒரு நாள் அவரே அதை உணர்ந்து கொண்டு போன் செய்வதை நிறுத்திவிட்டார்..” என்று நடந்த கதையைச் சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர் கலைஞானம்.