full screen background image

பல்டி – சினிமா விமர்சனம்

பல்டி – சினிமா விமர்சனம்

Produced by Santhosh T Kuruvilla & Binu George Alexander Banners : STK Frames & Binu George Alexander Productions, Produced by Santhosh T.Kuruvilla & Binu George Alexander,

Starring : Shane Nigam, Shanthnu Bhagyaraj, Preethi Asrani, Alphonse Puthren, Selvaraghavan & Others,

Written and Directed by Unni Sivalingam,  Music Composed by‪SaiAbhyankkar

Movie Credits: Written and Directed by Unni Sivalingam

Music & Original Score Composed by ‪SaiAbhyankkar DOP : Alex J Pulickal Editor : Shivkumar V.Panicker Creative Director : Vava Nujumudeen Co Producer : Sherin Rachel Santhosh Executive Producer : Sandeep Narayan Art : Ashik S Audiography : Vishnu Govind Additional Dialogues : T D Ramakrishnan Action Director : Action Sandhosh & Vicky Project Coordinator : Benny Kattapanna Production Controller : Kishor Purakkattiri Chief Associate Director : Sreelaal M Associate Directors : Sabarinath, Rahul Ramakrishnan, Samson Sebastian, Melbin Mathew (Post Production) Costumes : Melwy J Makeup : Jithesh Poyya DI : Color Planet Lyrics : Vinayak Sasikumar Stills : Sajith RM VFX : Accel Media, Foxdot Media Colourist : Srik Varier Glimpse Edit : Hari Devaki Distribution : Moonshot Entertainments Pvt Ltd Moonshot & STK Frames: COO : Arun C Thampi CFO : Jobeesh Antony Post Production Supervisor : Milind Siraj Title Designs : Rocket Science Publicity Designs : Viyaki, Antony Stephen PRO : Hains, Yuvaraj Visual Promotions : Snakeplant LLP Dubbing Director : RP Bala (RP Studios)

கோவை அருகே தமிழக கேரளத்து எல்லையில் அமர்ந்திருக்கும் ஒரு ஊர்தான் இந்தப் படத்தின் கதைக் களம்.

அந்த ஊரிலேயே வசித்து வரும் ஷேன் நிகமும், சாந்தனுவும் மிக நெருங்கிய நண்பர்கள். கபடி விளையாட்டு வீரர்கள் பஞ்சமி என்கின்ற கபடி குழுவில் இவர்கள்தான் முதன்மையானவர்கள்.

அதே ஊரில் கந்து வட்டிக்கு பணத்தை கொடுத்து வட்டி கட்ட முடியாதவர்கள், அசலை திருப்பிக் கொடுக்க முடியாதவர்கள் அனைவரையும் கேவலமாக அவமானப்படுத்தும் ஒரு சாடிஸ்ட் கேரக்டராக இருக்கிறார் இயக்குநர் செல்வராகவன்.

இவருக்கு அடுத்து அதே ஊரில் சோடா கம்பெனி பெயரில் பல சட்ட விரோத செயல்களையும் செய்து வருகிறார் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்.

இவர்கள் இருவருக்கும் மேலாக இவர்கள் இருவரும் செய்யும் தொழில்களிலும் தலையை நீட்டுவதுபோல பல்வேறு பிரச்சனைகளை சட்ட விரோத செயல்களை செய்து வரும் பூர்ணிமா இந்திரஜித் ஒரு பெண் ரவுடிக்கான அடையாளத்துடன் இருக்கிறார்.

இந்த நேரத்தில் தங்களுடைய அணியை தோற்கடித்தவர்கள் என்று பார்க்காமல் அவர்களை நம் பக்கம் இழுத்து நம்முடைய அணியில் வைத்து ஜெயிப்பதுதான் சிறந்த ராஜதந்திரம் என்று நினைக்கும் செல்வராகவன் சாந்தனுவையும், ஷேன் நிகத்தையும் பசப்பு வார்த்தைகளை சொல்லியும், பணத்தை விட்டு எறிந்தும் தன் பக்கம் இழுத்து கொள்கிறார்.

செல்வராகவனின் துணையோடு அவர் செய்யச் சொல்லும் சில அடாவடி செயலாக கடன் வாங்கியவர்களின் வீட்டில் இருந்து வண்டியைத் தூக்கி வருவது போன்ற சின்ன, சின்ன வேலைகளை செய்து அதிலும் பணம் பார்க்கிறார்கள் சாந்தனுவும், ஷேன் நிகமும்!

ஒரு கட்டத்தில் அதே செல்வராகவனிடம் கடன் வாங்கி, கடனை கட்ட முடியாமல் மிகப் பெரிய அவமானத்தை சந்திக்கிறார் ஷேன் நிகமின் காதலியான ப்ரீத்தி அஸ்ரானியின் அண்ணன்.

இந்த விஷயத்தில் தன்னுடைய காதலிக்கு உதவி செய்ய போய் செல்வராகவனின் உண்மையான முகத்தை தெரிந்து கொள்கிறார் ஷேன் நிகம்.

இப்போது இவர்கள் செல்வராகவனை ஒரு பக்கம் எதிர்க்க, இன்னொரு பக்கம் செல்வராகவனுக்காக வேலை செய்யப் போய் அல்போன்ஸ் புத்திரனின் எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொள்கிறார்கள்.

இப்பொழுது இவர்களை தீர்த்துக்கட்ட இரண்டு மாபியா கும்பலும் களத்தில் இறங்க இனிமேல் இந்த ஹீரோக்கள் என்ன செய்கிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் கதை, திரைக்கதை.

ஷேன் நிகம் மலையாளத்தில் வே பிரபலமான நடிகர். இது இவர் நடிக்கும் நேரடி தமிழ் படம். மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். தன்னுடைய காதலை வெளிப்படுத்த தைரியம் இல்லாமல் ப்ரீத்தியின் பின்னாலேயே அலைந்து கிளிந்து கடைசியாக நாகரீகமாக தன்னுடைய காதலை அவர் சொல்லுகின்ற இடத்தில் தன்னுடைய ரொமான்ஸ் நடிப்பை அழகாக காண்பித்திருக்கிறார் ஷேன் நிகம்!

கொஞ்சம் கொஞ்சமாக செல்வராகவனின் அடாவடிச் செயலுக்கு துணை போகும் ஷேன் நிகம் ஒரு கட்டத்தில் பொங்கி எழு மனோகரா டைப்பில் தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து அல்போன்ஸ் புத்திரனையும் இன்னொரு பக்கம் செல்வராகவனையும் சமாளிக்கும்விதமும், அந்த கோப ஆவேச நடிப்பில் நம்மைப் பெரிதும் கவர்கிறார் ஷேன் நிகம்.

இவருக்கு சற்றும் குறையாமல் பணத்தை மட்டுமே பெரிதாக நினைக்கும் ஒரு கதாபாத்திரத்தில் சாந்தனு மிக இயல்பாக நடித்திருக்கிறார். அவருக்கு என்ன வருமோ அது மட்டுமே திரையிலும் வெளி வந்திருக்கிறது. கடைசிவரையில் தன்னுடைய நண்பனுடன் போராடுகின்ற இடத்தில் பாராட்டுதலை பெறுகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ப்ரீத்தி அஸ்ராணி இடைவேளைக்கு பின்பு தன்னுடைய அழுத்தமான நடிப்பினால், அவருடைய கதாபாத்திரத்தை சிறப்பு செய்திருக்கிறார். அவருடைய கோபமும் செல்வராகவனிடம் பேசும் பேச்சுக்களும் அந்தக் கதாபாத்திரத்தை நாம் விரும்புவது போல இருக்கிறது.

பெண் தாதாவாக நடித்திருக்கும் பூர்ணிமா இந்திரஜித், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்று சொல்வதைபோல இவர்களை வைத்து வேறொரு கதை எழுதி அதில் தந்திரமாக எதிரிகளை தீர்த்துக்கட்டும் அந்த சாமர்த்தியத்தை மிக அழகாக தன் நடிப்பில் காண்பித்திருக்கிறார்.

பெண் தாதா என்பதாலேயே அவர்கள் அனைவரும் சிகரெட் பிடிப்பார்கள் ஸ்டைலாக பேசுவார்கள் வில்லத்தனத்தை முகத்திலேயே காட்டுவார்கள் என்றெல்லாம் கமர்சியல் படங்களுக்கே உரித்தான டெம்ப்லேட் ஸ்க்ரீன் பிளே அண்ட் கேரக்டர் ஸ்கெட்ச்சில் இவரை வடிவமைத்திருக்கிறார்கள்.

படத்தில் அனைவராலும் பாராட்டப்பட்டவர் இயக்குநர் செல்வராகவன்தான். முதல் சில காட்சிகளில் அவர் நிஜமாகவே ரொம்ப நல்லவரோ என்று நமக்கு நினைக்கத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு தன்னுடைய நல்லவன் என்ற கேரக்டர் ஸ்கெட்ச்சை கச்சிதமாக செய்திருக்கிறார் செல்வராகவன்.

பின்பு போக போக தன்னுடைய நடிப்பை ஹீரோக்கள் இருவரிடமும் காண்பித்துவிட அதன் பதிலடி அவர் சந்திக்கின்ற இடத்தில் அவருடைய நடிப்பும், ஆவேசமும் நம்மைப் பெரிதும் கவர்கிறது.

இன்னொரு மெயின் வில்லனாக நடித்திருக்கும் அல்போன்ஸ் புத்திரன் இந்தக் கதைக்கு எப்படி தேர்வு செய்யப்பட்டார் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது அல்போன்ஸ் புத்திரனுக்குள் எப்படி ஒரு நடிகன் இருப்பானா என்பது தெரியாத நிலையில் அவரை மிகச் சிறந்த வில்லனாக காண்பித்து பாராட்டை பெறுகிறார் இந்தப் படத்தின் இயக்குநர் உன்னி சிவலிங்கம்.

மேலும் ஷேன் நிகமின் அம்மாவாக நடித்தவர் மற்றும் ப்ரீத்தியின் அண்ணனாக நடித்தவர், செல்வராகவனால் பாதிக்கப்படுபவர்களாக நடித்தவர்கள் அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் அலெக்ஸ் ஜே.புலிக்கன் படம் முழுவதையும் ஒட்டு மொத்தமாக விரட்டலாக படம் ஆக்கி இருக்கிறார். அதிலும் கபடி விளையாட்டை எத்தனை கேமராக்கள் வைத்து சூட் செய்தார்கள் என்று தெரியவில்லை. அந்த கபடி மைதானம் மிகச் சிறந்த சண்டைக் களமாகவே நமக்கு தோன்றுகிறது அதேபோல் சண்டை காட்சிகளையும் எந்த ஒரு குறைபாடும் இல்லாமல் மிக அழகாக படமாக்கி இருக்கிறார் பாடல் காட்சிகளில் தொட்டும், தொடாமலுமாக ஷேன் நிகம் மற்றும் பிரீத்தா அஸ்ரானியின் காட்சிகளை திரையில் பார்க்கும்பொழுது நமக்கும் கொஞ்சம் பீலிங் வருகிறது.

புதிய இசையமைப்பாளரான சாய் அப்பயங்கரின் பாடல்கள் ஒருமுறை கேட்கலாம் என்ற அளவுக்குத்தான் இருக்கிறது. ஆனால் பின்னணி இசையில் தாதாக்கள் படத்திற்கு எந்த மாதிரியான பில்டப்பில் இசை இருக்க வேண்டுமா அதுபோலவே பின்னணி இசை அமைந்துள்ளது.

இவருக்கு அடுத்து பாராட்டை பெறுபவர் படத் தொகுப்பாளரான சிவகுமார் வி.பணிக்கர். அத்தனை காட்சிகளையும் தொகுத்து கட் செய்து படமாக்கி திரையில் இருக்கும் அந்த ஃபீலங்கை ரசிகர்களின் மனதில் மாற்றியிருக்கிறார்.

அதிலும் குறிப்பாக செல்வராகவன், அல்போன்ஸ் புத்திரன், பூர்ணிமாவை அறிமுகப்படுத்தும் காட்சிகளில் பின்னணி இசைதான் அவர்களை பெரும் தாதாவாக நமக்கு காட்டி இருக்கிறது.

சண்டைக் காட்சிகளையும், கபடி போட்டிகளையும் எப்படித்தான் அழகான ஒரு பரபரப்பான காட்சிகளாக மாற்றி அமைத்தாரோ தெரியவில்லை. நிச்சயமாக படத்தின் படத் தொகுப்பாளர் இந்தக் காட்சிகளுக்காகவே பாராட்டை பெறுகிறார்.

படத்தை எழுதி இயக்கி இருக்கும் இயக்குநர் உன்னி சிவலிங்கம் இந்தப் படத்தை தாதாக்கள் பட வரிசையில் உருவாக்கி இருக்கிறார். அந்த வகையில் இதற்கு முன் வெளிவந்த பல தாதாக்கள் திரைப்படத்தின் கதையின், திரைக்கதையும் கொஞ்சம் கொஞ்சம் இந்தப் படத்திலும் இடம் பெற்றிருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை.

படம் முழுவதையும் சஸ்பென்ஸ், திரில்லராகவும் அடிக்கடி நடக்கும் சண்டை காட்சிகளின் மூலமாக படத்தை ஆர்வம் கொண்டு பார்க்கும் வெறியையும் நமக்குள் கொடுத்திருக்கிறார்.

செல்வராகவனின் அலுவலகத்தில் நடக்கும் அந்தக் கொடூர காட்சிகள் கோரமாக இருந்தாலும் செல்வராகவனின் எப்படிப்பட்ட கொலையாளி என்பதை காட்டும்விதமாகவும் அந்தக் காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குநர். அந்தக் காட்சிகளே அவர்களை தாதாவாக நமக்குள் காட்டிவிட்டது.

இன்னமும் தமிழக, கேரள எல்லைப் பகுதிகளில் இருக்கும் ஊர்களிலும் கிராமங்களிலும் தமிழர்கள்தான் நிறைய பணத்தை வட்டிக்கு விட்டு சம்பாதிக்கும் தொழிலில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

அதில் ஏதோ ஒரு இடத்தில் அல்லது இரண்டு இடங்களில் நடைபெற்ற கொடூர சம்பவங்களை மனதில் வைத்து மொத்தமாக கந்துவட்டிக்காரர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்பது போலவே இயக்குநர் காட்டியிருக்கிறார்.

இன்னொரு முக்கியமான விஷயம். மலையாள சினிமாவில் எப்பொழுதுமே தமிழர்களை கொஞ்சம் தரம் தாழ்த்திதான் பேசுவார்கள். கேரக்டர் ஸ்கெட்ச்சையும் அப்படித்தான் வடிவமைத்து இருப்பார்கள். அதே வரிசையில் இந்தப் படமும் இடம் பெற்றுள்ளது.

படத்தின் முடிவில் தமிழனான சாந்தனு அந்த கொடூரமா கந்து வட்டி கும்பலில் ஒருவனாக இணைந்துவிடுவதுபோலவும் மலையாளியானா ஷேன் நிகம் நல்லதொரு மனிதனாக இடம் மாறி தன் காதலியுடன் அமைதியாக வாழ்வது போலவும் படத்தை முடித்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்தப் படமும் தமிழர்களை கொஞ்சம் கீழே தள்ளித்தான் விட்டிருக்கிறது.

பல மலையாள படங்களில் நடிக்கப் போகும் தமிழ் நடிகர்கள் எப்பொழுதுமே அதற்காக கொடுக்கப்படும் பணத்திற்காகவும், மலையாளத்தில் ஒரு படம் முடித்துவிட்டேன் என்று பெருமைக்காக சொல்லுவது போலவும் நடித்துவிட்டு வந்து விடுகிறார்கள்.

ஆனால் அதன் பின்னணியில் இருக்கும் உளவியல் பிரச்சனையை மாநிலம் கடந்த ஒரு கௌரவ பிரச்சனையை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள். இது ஒரு சினிமா. இதில் ஒரு கேரக்டர் ஸ்கெட்ச் வடிவமைப்பது இயக்குநர்தான். அதை ஒரு சினிமாவாக பாருங்கள் என்று மீண்டும் மீண்டும் நமக்கே கிளாஸ் எடுக்கிறார்கள். இந்த படமும் அதே தப்பை தவறாமல் செய்து வெளிவந்திருக்கிறது.

பத்திரிக்கையாளர் என்ற பார்வையில் இந்தப் படத்தில் காண்பிக்கப்பட்டு இருக்கும் அந்தத் தமிழ் மலையாளி பிரிவினையை நம் வன்மையாக கண்டிக்கிறோம் உண்மையாகவே வெறும் கபடி போட்டிதான் படத்தின் மையக் கருவாக கொண்டிருந்தால், படம் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்.

மேலும் படத்தில் ஷேன் நிகமும், சாந்தனுவும் இருக்கும் கபடி அணியின் பெயர் பஞ்சமி டீம் ஆகவும் மிகப் பெரிய கொடூர குற்றங்களை செய்து வரும் செல்வராகவனின் டீமிற்கு பொற்றாமரை என்ற பெயரை வைத்திருப்பதும் நிச்சயமாக அரசியல்தான். அந்த அரசியல் நமக்கு புரியாமல் இல்லை. புரிகிறது. ஆனால் நடிக்கப் போகும் கலைஞர்கள், குறிப்பாக தமிழ் கலைஞர்கள் இதையும் புரிந்து கொண்டால் நல்லது.

RATING : 3.5 / 5

Our Score