கடைசியாக நடந்த முள்ளிவாய்க்கால் போரின் அவலங்களை இன்னமும் உலக சமுதாயம் அசை போட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அந்த போர் முனையில் இலங்கை ராணுவம் நடத்திய அட்டூழியங்களை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் காட்சிப்படுத்தியது லண்டனை சேர்ந்த சேனல் 4 என்ற தொலைக்காட்சி.
அத்தொலைக்காட்சி ஒரு சமயத்தில் காட்டிய ஒரேயொரு புகைப்படம் உலகத் தமிழர்களையே பதைபதைக்க வைத்துவிட்டது..
நடந்தது போர். ஆனால் அதில் சம்பந்தமில்லாமல் ஒரு சிறுவனை சுட்டுக் கொன்றதற்கு ஆதாரமாக இருந்த அந்தப் புகைப்படத்தில் இருந்தது தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் கடைசி பிள்ளை பாலசந்திரன்.
இலங்கை ராணுவத்தின் பிடியில் இருக்கும்போது பிஸ்கட் சாப்பிடுவது போலவும், பின்பு நெஞ்சில் குண்டு பாய்ந்த நிலையில் இறந்து கிடப்பது போலவும் வெளியான புகைப்படங்கள் உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது..
அந்த பாலசந்திரனின் இறப்பையும், முள்ளிவாய்க்கால் போரின் கடைசி காலக்கட்டத்தையும் மையமாக வைத்து வேந்தர் மூவிஸின் எஸ்.மதன் ‘புலி பார்வை’ என்றொரு படத்தை தயாரித்திருக்கிறார். ‘ஸ்டார்’ மற்றும் ‘ரட்சகன்’ படங்களை இயக்கிய பிரவீன்காந்த் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை வடபழனி எஸ்.ஆர்.எம். தலையமைகத்தில் நடந்தது.. இந்தப் படத்தில் பாலசந்திரனாக நடித்த சத்யா என்ற 9-ம் வகுப்பு படிக்கும் சிறுவனை அதே கெட்டப்பில் சட்டை அணியாமல் துண்டு மட்டும் அணிந்த நிலையில் அழைத்து வந்து மேடையில் அமர வைத்திருந்தார்கள்.
இந்தப் படத்தின் ஷூட்டிங் கேரளாவில், இலங்கையின் சில பகுதிகளிலும் அனுமதி வாங்கியும், அனுமதி வாங்காமலும் எடுத்திருக்கிறார்களாம்..
இதற்கும் முன்பாக புத்திசாலித்தனமாக இவர்கள் செய்திருக்கும் செயல்.., நமது சென்சார் போர்டை அணுகி ஸ்கிரிப்டை அவர்களிடத்தில் கொடுத்து படிக்க வைத்து அவர்களது ஆலோசனையையும் கேட்டிருக்கிறார்கள். அவர்கள் சொன்ன திருத்தங்களையும் ஏற்றுக் கொண்டார்களாம்.. அத்தோடு படம் எடுத்து முடித்த பின்பும் சென்சார் சர்டிபிகேட் வாங்கும்போது சென்சார் போர்டு உறுப்பினர்கள் சொன்ன கருத்தையேற்று படத்தில் சில திருத்தங்களை செய்ததாகக் கூறினார் இயக்குநர்.
விடுதலைப்புலிகள் இந்தியாவை விரும்பினார்கள்.. ஆதரித்தார்கள் என்பதை படத்தில் வலியுறுத்திச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அப்போதைய இந்திய அரசு பழிக்குப் பழியாக இந்த போரை நடத்தியது என்பதையும் பதிவு செய்திருப்பதாக இயக்குநர் கூறினார்.
படத்தில் குறிப்பிடத்தக்க விஷயம்.. வேந்தர் மூவிஸ் உரிமையாளர் எஸ்.மதன்தான் இதில் பிரபாகரனாக நடித்துள்ளார். பாலசந்திரனாக நடித்த சத்யாவை பள்ளிகளில் தீவிர வேட்டை நடத்தி தேடி கண்டுபிடித்தார்களாம்.. அதற்கு மேல் சத்யாவிற்கு ஆறு மாத காலம் டிரெயினிங் கொடுத்துத்தான் களத்திற்கு அழைத்து வந்தார்களாம்..!
“சேனல் 4 வெளியிட்ட பாலசந்திரனின் அந்த ஒரு புகைப்படம்தான் இந்த திரைப்படத்தை எடுக்க உந்துகோலாக இருந்தது. இது முழுக்க, முழுக்க பாலச்சந்திரனின் வரலாற்றை சொல்லும் படம் மட்டுமே. தனி ஈழமே வேண்டாம் என்பவர்கள்கூட பாலச்சந்திரன் படுகொலையை மன்னிக்க மாட்டார்கள். விடுதலைப் புலிகள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்ல என்ற உண்மையை படத்தில் தெளிவாக சொல்கிறோம். தமிழர்களின் வீரத்தையும் முழுமையாக இதில் பதிவு செய்திருக்கிறேன். இதைத் தாண்டி எந்த அரசியலும் இதில் இல்லை..” என்கிறார் இயக்குநர் பிரவீன்காந்த்.
“பிரபாரகனின் மகன் பாலச்சந்திரன் பற்றிய கதை என்பதால் அவரைப் பற்றிய செய்திகளையும் புகைப்படங்களையும் பார்த்தேன். அதிர்ச்சியாக இருந்தது.. இதில் நடிப்பதை நான் மிகவும் பெருமையாகவே கருதினேன்.. கண்டிப்பா இந்தப் படத்துல நான்தான் நடிக்கணும்னு ஆண்டவன்கிட்ட பிரே செய்தேன். அது கடைசில நிறைவேறியுள்ளது. அந்த கேரக்டரை நான் நல்லா பண்ணியிருக்கேன்னு நினைக்கிறேன்..” என்றான் சிறுவன் சத்யா.
இந்தப் படத்தில் இயக்குநர் பிரவீன்காந்தும் ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். வேந்தர் மூவிஸ் நிறுவனர் பாரிவேந்தர் ஒரு பாடல் எழுதியிருக்கிறார். வேந்தர் மூவிஸ் நிறுவனம் சார்பாக எஸ்.மதன் இப்படத்தை தயாரித்து, வெளியிடுகிறார்.
ஸ்கிரிப்ட்டில் சென்சார் போர்டு திருத்தம் செய்திருப்பதாகச் சொல்கிறார் இயக்குநர். இதனால்தான் சந்தேகமாக இருக்கிறது..! முள்ளிவாய்க்கால் போரில் அப்போதைய காங்கிரஸ் அரசு இலங்கை ராணுவத்துக்கு செய்த உதவிகளெல்லாம் இதில் வருகிறதா..? காங்கிரஸ் அரசு எடுத்த தமிழர்களுக்கெதிரான நிலைப்பாடுகள் பற்றி படத்தில் காட்சிகள் வருகிறதா? என்பதெல்லாம் தெரியவில்லை.. படம் வரட்டும்.. படம் வரட்டும்.. பார்த்திருவோம்..!