இந்தப் படத்தை ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் மற்றும் Passion Studios நிறுவனங்களின் சார்பில் கார்த்திகேயன் சந்தானம், சுதன் சுந்தரம், ஜெயராம், கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
படத்தில் வைபவ் நாயகனாகவும், அனகா நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் ஜோஜூ ஜார்ஜ், அந்தக்குடி இளையராஜா, நரேன், மூணாறு ரமேஷ், தமிழ், ‘ஆடுகளம்’ ஜெயபாலன், மதுரை விஸ்வநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – அசோக் வீரப்பன், இணை தயாரிப்பு – கல்ராமன், எஸ்.சோமசேகர், கல்யாண் சுப்ரமணியன், இசை – சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு – தினேஷ் புருஷோத்தமன், கலை இயக்கம் – குமார் கெங்கப்பன், படத் தொகுப்பு – வெற்றி கிருஷ்ணன், சண்டை பயிற்சி இயக்கம் – விக்கி நந்தகோபால், தினேஷ் சுப்பராயன், நடனப் பயிற்சி இயக்கம் – எம்.ஷெரீப், ஒலி வடிவமைப்பு – ஜி.சுரேன், எஸ்.அழகியகூத்தன், ஒலிக் கலவை – ஜி.சுரேன், கலரிஸ்ட் – சுரேஷ் ரவி, விளம்பர வடிவமைப்பு – கபிலன், புகைப்படங்கள் – எம்.தினேஷ், உடை வடிவமைப்பு – தினேஷ் மனோகரன், உடைகள் – சுபேர், ஒப்பனை – எம்.என்.பாலாஜி, பாடல்கள் – ராஜா குருசாமி, முத்தமிழ், உமா தேவி, துரை, VFX – Prism & Pixel, பத்திரிகை தொடர்பு – நிகில் முருகன்.
இந்தப் படத்தை சக்தி பிலிம் பேக்டரியின் சார்பில் பிரபல விநியோகஸ்தரான சக்திவேல் வெளியிட்டுள்ளார்.
கிராமத்துத் திருவிழாக்களில் நாடகம் போடும் கலைஞர் குடும்பத்தைச் சேர்ந்தவர் நாயகனான குமரன் என்னும் வைபவ். நாடகத்தினால் கிடைக்கும் வருமானம் சொற்பமாக இருப்பதால் இந்த வேலையை விட்டுவிட்டு வெளிநாட்டுக்குப் போய் பணம் சம்பாதிக்க நினைக்கிறார் வைபவ்.
வெளிநாட்டுக்குப் போவதற்கே லட்சக்கணக்கில் பணம் வேண்டும் என்பதால் தற்காலிகமாக வேலை தேடுகிறார் வைபவ். உள்ளூர்காரரான மூணாறு ரமேஷ் மூலமாக லாரி டிரைவர் வேலை கிடைக்கிறது.
உண்மையில் அந்த லாரியில் போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன. பல வருடங்களாக ராமநாதபுரம் பகுதியில் போதை மருந்து கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வரும் டானான தனபால் டீமிடமே அவர்கள் யார் என்று தெரியாமலேயே வேலைக்குச் சேர்கிறார் வைபவ்.
முதல் வேலையிலேயே போலீஸிடம் மாட்டுகிறார்கள் வைபவ்வும், இளையராஜாவும். ஜெயிலுக்குப் போகும் நிலையில் நடுவழியிலேயே இருவரும் தப்பித்து ஓடுகிறார்கள். போலீஸில் சிக்கினால் 10 ஆண்டுகள் ஜெயிலில் இருக்க வேண்டுமே என்றெண்ணி நாட்டைவிட்டே ஓடிப் போக பிளான் செய்கிறார்கள் வைபவ்வும், இளையராஜாவும்.
இந்தச் சிக்கலிலிருந்து இவர்கள் தப்பிக்க, வைபவ்வின் காதலியான இலங்கை தமிழ்ப் பெண்ணான அனகா இவர்களுக்கு உதவுகிறார். அது முடிந்ததா.. இல்லையா.. இதனால் அனகாவுக்கு என்ன சிக்கல் வருகிறது? உண்மையான தனபால் யார்? இந்தப் போதை மருந்து கடத்தல் தொழிலிற்குப் பின்னால் இருக்கும் அரசியல் சூழ்ச்சிகள் என்ன…? இந்த சூழ்ச்சி வலையில் சிக்கி கடைசியில் யாரெல்லாம் ‘பபூன்’ ஆக்கப்படுகிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் சுருக்கமான கதை.
இதுவரையிலும் நகரத்து இளைஞனாகவே தொடர்ந்து நடித்து வந்த வைபவ் இந்தப் படத்தில் வித்தியாசமான வேடத்தை ஏற்றிருக்கிறார். படத்தின் துவக்கத்தில் நடக்கும் நாடகத்தில் அவர் பேசும் வசனங்களும், பாடலும், நடிப்பும் ஆச்சரியப்பட வைக்கிறது. நாடகக்காரனாக, பபூனாக, கட்டியக்காரனாக, காதலனாக அவர் நடித்திருக்கும் காட்சிகளில் அவரது நடிப்பு முன்பைவிடவும் மேம்பட்டிருக்கிறது என்பது உண்மைதான்.
வைபவ்வின் நண்பன் பாத்திரத்தில் நடித்திருக்கும் ஆந்தகுடி இளையராஜா பல இடங்களில் கவனிக்க வைத்திருக்கிறார். டயலாக் டெலிவரியிலும், வசனத் தெறிப்பிலும் பல வருட அனுபவஸ்தர் போல நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் நடிகராக ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கலாம்.
நாயகி அனகா அழகாகத் தென்படுகிறார். அவரது முகத்தில் எப்போதும் இருக்கும் சோகமே அவரது கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கிறது. ஆனாலும் பாதி படத்துக்கு மேல் இவர் காணாமல் போயிருக்கிறார். இவரது சின்ன சின்ன முகபாவங்களின் நடிப்பு நம்மைக் கவர்கிறது என்றாலும், டப்பிங்கில் இவருக்கான வசன உச்சரிப்பு பல இடங்களில் ஒட்டவே இல்லை. இயக்குநர் எப்படி இதைப் பார்க்கத் தவறினார் என்று தெரியவில்லை.
டான் தனபாலாக மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் அட்டகாசமான மிரட்டல் நடிப்பைக் காண்பித்திருக்கிறார். ஆனால் இவருக்கு சில காட்சிகளை கூடுதலாக வைத்திருந்தால் இவரை இன்னமும் ரசித்திருக்கலாம்.
போதை பொருள் தடுப்புத் துறையின் எஸ்.பியாக வரும் இயக்குநர் தமிழ், படம் முழுவதும் போலீஸ் தோரணையில் மிரட்டல் நடிப்பைக் கொடுத்திருக்கிறார். சண்டை போட வந்த எம்.எல்.ஏ.வை சலாம் போட வைத்து விரட்டியடிக்கும் காட்சியை உதாரணமாகச் சொல்லலாம்.
ஆனால் அதே சமயம் ‘ஆடுகளம்’ நரேனை வீழ்த்துவதற்காக முதல்வரின் நேரடி உத்தரவிலேயே இவர் ராமநாதபுரத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறார் என்பதை முன்பேயே சொல்லியிருந்தால் படத்தை இன்னும் கொஞ்சம் ரசித்திருக்கலாம்.
‘ஆடுகளம் நரேன்’ தனது பண்பட்ட அனுபவ நடிப்பைக் காண்பித்திருக்கிறார். மேலும் கூத்துக் கலைஞராக நடித்திருக்கும் நடிகரின் அனுபவ நடிப்பும், வைபவ் மீண்டும் வந்தவுடன் சந்தோஷமாகி அவர் பேசும் பேச்சும் நெகிழ வைக்கிறது.
ஒளிப்பதிவாளர் தினேஷின் ஒளிப்பதிவில் ராமநாதபுரம் பகுதிகள் மொத்தமும் அழகாகப் பதிவாகியுள்ளது. கூடுதலாக சிறிது நேரம் மலபார் கடற்கரையையும் அழகுற பதிவாக்கியிருக்கிறார்.
சந்தோஷ் நாராயணனின் இசையில் படத் தொடக்கத்தில் நாடகத்தில் ஒலிக்கும் ‘மடிச்சு வச்ச வெத்தல’ கூத்துப் பாடல் முணுமுணுக்க வைக்கிறது. மற்றைய பாடல்கள் பெரிதாக கவரவில்லை.
வசனங்களும் படத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக அமைந்திருக்கிறது. “தண்டிக்கனும்னா மட்டும் உங்க சட்டத்துல இவ்வளவு செக்ஷன தேடுறீங்களே. எங்களுக்கு என்னென்ன உரிமை இருக்குன்னு உங்க சட்டம் சொல்லுதுன்னு தெரியுமா?” என்று அனகா, எஸ்.பி.தமிழிடம் கேட்பதும், “துரோகத்தால பல சாம்ராஜ்யங்களே அழிச்சிருக்கு. நாமெல்லாம் எம்மாத்திரம்?”, “காலைல போட்டோவ பாத்தா மதியானம் ஜனங்க மறந்துருவாங்கல்ல” போன்ற வசனங்களும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை.
‘ஆடுகளம்’ நரேன்-‘ஆடுகளம்’ ஜெயபாலன் இடையே நடக்கும் அரசியல் சண்டைகள் தற்போதைய தமிழகத்தின் அரசியல் களத்தை கொஞ்சம் நினைவுபடுத்துகின்றன.
ஒரு பக்கம் தென் மாவட்ட கடலோரப் பகுதிகளில் இன்றைக்கும் நடந்து வரும் போதை பொருள் கடத்தல் தொழிலைத் திரையில் காண்பிக்க நினைத்திருக்கிறார் இயக்குநர்.
இன்னொரு பக்கம் தற்போதைய நவீன கால யுகத்தால் வாய்ப்பின்றி பொருளாதார வசதியில்லாமல் வறுமையில் வாழும் நாடகக் கலைஞர்களின் வாழ்க்கையை வெளிப்படுத்த நினைத்திருக்கிறார்.
மூன்றாவதாக மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் இலங்கை தமிழர்கள் இந்தியத் தமிழர்களால் படும் அவஸ்தைகளையும் வெளிப்படுத்த நினைத்திருக்கிறார்.
இப்படி இந்த மூன்று கதைகளையும் ஒன்றாகச் சேர்த்து செய்த கதம்பமாக இருந்திருக்க வேண்டிய படம் கடைசியாக இப்படி கேங்ஸ்டர் படமாக உருமாறிப் போயிருக்கிறது.
ஆனால், இந்தியாவில் இருக்கும் இலங்கைத் தமிழர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று காட்டுவதெல்லாம் அவர்களுக்குக் கூடுதல் சிக்கலைத்தான் ஏற்படுத்தும் என்பதை இயக்குநர் ஏன் உணரவில்லை.
படத்தின் துவக்கக் காட்சியில் நடக்கும் அந்த நாடகக் காட்சிகள் மிக சரியான தேர்வு. அதேபோல் வைபவ்வின் அப்பா தனியே நடத்தும் நாடகமும்கூட கவனிக்க வைக்கிறது.
இந்த நாடகத்துடன் துவங்கிய படம் போகிற போக்கில், போதை மருந்து கடத்தல், அரசியல் கூத்து, போலீஸ் வேட்டை, நீதிமன்றம், கேரளா, கடல் பயணம் என்று மாறி மாறி பல்வேறு திருப்பங்களுடன் பயணிக்கும் திரைக்கதை சுவாரஸ்யமாகவே இருக்கிறது.
போலீஸாரால் தனபாலின் நிழலைக்கூட இதுவரையிலும் கண்டறிய முடியவில்லை என்று ஓவர் பில்டப்பை கொடுத்துவிட்டு, தொடர்ந்து தனபாலை போகஸ் செய்யாமல் அப்படியேவிட்டுவிட்டது ஏன் தெரியவில்லை.
தப்பிச் சென்ற வைபவ், மீண்டும் ஊருக்குள்ளேயே வந்து தங்கிக் கொண்டு ஊருக்குள் வண்டி ஓட்டுவது, படகில் செல்வது, டாஸ்மாக் கடைக்குச் செல்வது என்றெல்லாம் திரைக்கதை எழுதியிருப்பது எப்படி என்றே தெரியவில்லை.
அதேபோல் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை நீதிபதியிடம் அழைத்துப் போகும்போது எந்த போலீஸ் எஸ்.பி.யும் உடன் செல்ல மாட்டார்கள். நீதிமன்றத்திற்கும் செல்ல மாட்டார்கள். இயக்குநர் ஏன் இதை யோசிக்கவில்லை என்று தெரியவில்லை. இயக்குநர் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம்.
தற்போதைய நாடகக் கலைஞர்களின் சிரமங்கள், தமிழகத்தில் இலங்கை அகதி வாழ் மக்கள் படும் கஷ்டம், தமிழகத்தில் நடக்கும் அரசியல் விளையாட்டுக்கள் என்று பலவற்றையும் பேச வந்த இந்தப் படம் இந்த மூன்றையுமே முழுமையாக பேசவில்லை என்பதுதான் உண்மை.
ஒரு நாடக பபூன், எப்படி நாயகனாகிறான் என்பதை மட்டுமே இயக்குநர் நிறைவாக செய்திருக்கிறார்.
RATING : 3.5 / 5