தாய், தந்தையரை மதிக்காமல் தன் இஷ்டம்போல் வாழ நினைக்கும் ஒரு பெண்ணின் கதைதான் இந்த ‘பேட் கேர்ள்’ திரைப்படம்.
ஸ்ரீராமும், சாந்தி பிரியாவும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் தம்பதிகள். இவர்களது மகளான அஞ்சலி பள்ளியில் படிக்கும் காலத்திலேயே தாய், தந்தை பேச்சை கேட்க மறுக்கிறார் பள்ளியில் படிக்கும் பொழுது தன்னுடைய சக மாணவர் ஒருவரை தீவிரமாக காதலிக்கிறார்.
இந்தக் காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிந்து பெரும் பிரச்சனையாக மகளது பள்ளியை மாற்றி வேறொரு பள்ளியில் அஞ்சலியை படிக்க வைக்கிறார்கள். தாய், தந்தை சொல்வது எதையும் கேட்காத அஞ்சலிக்கு தன் இஷ்டம் போல் வாழ முடியவில்லை என்கின்ற ஒரு வருத்தம் இருக்கிறது.
இதனால் “ஸ்கூல் முடிக்கிறவரைக்கும்தான் உங்க பேச்சைக் கேட்பேன். காலேஜூக்கு போயிட்டனா நான் என் இஷ்டத்துக்குத்தான் வாழ்வேன்…” என்று முன்கூட்டியே சொல்கிறார்.
அதேபோல் கல்லூரியில் படிக்கும்போது ஹாஸ்டலிலேயே தங்கி வீட்டுக்கு வரவே பிரியம் இல்லாமல் இருக்கிறார். கல்லூரியில் படிக்கும் பொழுதும் உடன் படித்த ஒரு மாணவனுடன் காதல் கொள்கிறார். கலவி கொள்கிறார். அவனை திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்திருக்கிறார். ஆனால் அந்த காதலனுக்கு அது ஒன் நைட் ஸ்டேண்ட் என்று நினைத்து அவளை உதாசீனப்படுத்துகிறார். இதனால் பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார் அஞ்சலி.
கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு செல்கிறார் அஞ்சலி. வேலைக்குப் போன இடத்திலும் அங்கு ஒரு காதல் உருவாக அந்த காதல் உண்மையானது என்று நினைத்து அங்கும் அத்துமீறுகிறார். தன்னுடைய தாய், தந்தையை சந்திக்க மறுக்கிறார். தன்னை தேடி வரும் தாயை உதாசீனப்படுத்துகிறார். மது அருந்துகிறார். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதே தெரியாமல் வாழ்கிறார். ஒரு பூனை வீட்டைவிட்டுப் போனதற்காக பேப்பரில் விளம்பரம் கொடுக்கும் அளவுக்கு அஞ்சலியின் குணம் இருக்கிறது.
அம்மாவும், அப்பாவும் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைப்பதாக சொல்லும்போதும் அதை மறுத்துவிட்டு தானே தன் இஷ்டப்படி வாழ்ந்து கொள்வதாக சொல்கிறார்.
கடைசியாக அஞ்சலியின் வாழ்க்கை எப்படி முடிந்தது? அவருக்கான காதலன் கிடைத்தானா..? திருமணம் செய்தாரா?.. அவருடைய பெற்றோர்கள் என்ன ஆனார்கள்?.. என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
இந்தப் படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் வர்ஷா பரத் மிக இளம் வயது பெண். நவநாகரிகமான வாழ்க்கையில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறவர். அவருடைய மனப்பான்மையில் பெண்கள் எப்படி வாழ வேண்டும்?.. எப்படி தன் இஷ்டப்படி வாழ வேண்டும் என்கின்ற ஒரு கருத்தாக்கத்தில் இந்தப் படத்தை உருவாக்க நினைத்தவர் கடைசியாக தான் என்ன சொல்ல வந்தோம் என்பதையே சொல்ல முடியாமல் தவித்து படத்தை அப்படியே அந்தரத்தில் விட்டுவிட்டுப் போயிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அஞ்சலி சிவராமன் பள்ளி, கல்லூரி, வேலை பார்க்கும் காலம் ஆகிய மூன்று விதமான பரிணாமங்களிலும் நடித்திருக்கிறார் அதற்கு அவருடைய முகமும், அவருடைய உடல் அமைப்பும் கச்சிதமாக பொருந்தி இருக்கிறது.
இவரைச் சுற்றியே படம் நெடுகிலும் காட்சிகள் நகர்வதால் ஒவ்வொரு போர்ஷனிலும் தன்னுடைய நடிப்பை சிறப்பாக காண்பித்து இருக்கிறார். அவருடைய முகத்திற்கு வைக்கப்படும் குளோசப் ஷாட்டுகள் அத்தனையுமே சினிமா பாஷையில் ‘அல்வா துண்டு’ என்பார்கள். அந்த அளவுக்கு மிகச் சிறப்பான வகையில் கேமரா கோணங்களை வைத்து இவரை அழகுபடுத்தி இருக்கிறார் இயக்குநர்.
கல்லூரி காதலன் தன்னை ஏமாற்றி விட்டதை உணர்ந்து அவரிடம் பட்டமளிப்பு விழா அன்றே சட்டையை பிடித்து சண்டை போடுவது… அதன் காரணமாக குடிக்க ஆரம்பிப்பதும்.. குடித்துவிட்டு நண்பிகளிடம் புலம்பும் காட்சியில், “உனக்கு இது தேவையாம்மா?” என்று படம் பார்ப்பவர்களையும் கேட்க வைத்திருக்கிறார்.
அம்மா, அப்பாவிடம் மரியாதையே இல்லாமல் பேசிவிட்டு அவர்கள் சொல்வதையே காதில் வாங்காமல் தான் செய்வது தான் சரி என்று பிடிவாதம் பிடித்து தன்னுடைய வாழ்க்கையில் பல சிக்கல்களை ஏற்றுக் கொண்டு… அதை விடுவிப்பது எப்படி என்பதுகூட தெரியாமல் கடைசியாக அம்மாவிடம் சாய்ந்து கொள்ள ஒரு இடம் இருக்கிறது என்று நினைத்து அம்மாவை கட்டி அணைத்துக் கொண்டு “லவ் யூ அம்மா” என்று சொல்கின்ற அந்த கடைசி காட்சியில் அவருடைய நடிப்பு மிக பிரமாதம் என்று சொல்லலாம்.
நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் சாந்தி பிரியா ஒரு அட்டகாசமான நடிப்பை காண்பித்திருக்கிறார். ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தில் ஒரு அம்மா குடும்பத்தை நடத்துவதற்காக எவ்வளவு கஷ்டப்படுகிறார், எவ்வளவு வேதனைப்படுகிறார் என்பதை இவருடைய போர்ஷனிலேயே மிக அழகாக பதிவாக்கியிருக்கிறார் இயக்குநர். இவருடைய கணவராக நடித்த ஸ்ரீராமும் தன்னால் முடிந்த அளவுக்கான ஒரு அப்பாவுக்கான பொருத்தமான நடிப்பை காண்பித்திருக்கிறார்.
நன்பியாக நடித்திருக்கும் சரண்யா ரவிச்சந்திரனின் கதை மூலமாக ஒரு நல்ல அமைதியான வாழ்க்கை எது என்பது நாயகிக்கு சுட்டிக் காட்டினாலும் அதை அவரே ஏற்கும் நிலையில் இல்லை என்பதை இருவரின் பேச்சுக்களாலும் காண்பித்திருக்கிறார் இயக்குநர். சரண்யா ரவிச்சந்திரனின் சமரச பேச்சும், அவருடைய நடிப்பும் சிறப்புதான்.
மேலும் உடன் நடித்திருக்கும் ஹிர்து கருண், டிஜே சாங், பொம்மிரட்டி பல்லி என்று மற்ற வேடங்களில் நடித்தவர்களும் தங்களுடைய நடிப்பை அழகாக காட்டியிருக்கிறார்கள்.
மூன்றுவிதமான காலகட்டங்களில் இந்தப் படம் நடப்பதாக காட்டியிருப்பதால் மூன்று ஒளிப்பதிவாளர்களான ப்ரீத்தா ஜெயராமன், ஜெகதீஸ் ரவி, பிரின்ஸ் ஆண்டர்சன் என்ற மூன்று பேரும் அவரவர் போஷனில் காட்சிகளை அழகாக பதிவாகி இருக்கிறார்கள். ஆனால் சில நேரங்களில் எந்த சினிமாவிலும் இப்படி ஒரு குளோசப் காட்சிகளை பார்க்கவே முடியாது என்று சொல்லும் அளவுக்கு சில கோணங்களும், சில காட்சிகளையும் வைத்து நாங்கள் புதுமையானவர்கள் என்பதையும் காட்டியிருக்கிறார்கள்.
அமித் திரிவேதியின் இசையில் பாடல்கள் தியேட்டரில் ஒலித்தன ஆனால் நம் காதுகளுக்கு அது எட்டவில்லை. பாடல் வரிகள் மிக எளிமையாக இல்லாததால் அதையும் ஒரு கவிதையாகவே பாடிவிட்டு போயிருக்கிறார்கள்.
ராதா ஸ்ரீதரின் படத் தொகுப்பு படத்தை கொஞ்சம் கொஞ்சமாக நகர்வதைப் போல ஸ்லோ மோஷனிலேயே நகர்த்தி இருக்கிறார்.
இந்தப் படத்தின் கலை இயக்குநரை நிச்சயமாக மனதார பாராட்ட வேண்டும். நாயகியின் வீட்டில் இருக்கும் அந்த பழைய காலத்து கம்ப்யூட்டர் கீபோர்டு பழைய காலத்து செல்போன் அப்படி வீட்டில் இருந்த பொருட்கள் என்று அந்த வீட்டையே 2000-ம் ஆண்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அவருக்கும் நமது பாராட்டுக்கள்
இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கும் பெண் இயக்குநரான வர்ஷா பரத், இப்போதைய இளைஞர்களின் உதாரணமாக இருப்பதால் இப்போதைய 2 கே கிட்ஸ்களின் அடையாளமான ஒரு பெண்ணை திரையில் காட்டியிருக்கிறார்.
ஆனால் இந்த கதையை வெற்றி மாறன் எப்படி ஒத்துக் கொண்டார் என்பது இப்போதுவரையிலும் நமக்கு புரியவில்லை. நிச்சயமாக இது மால் தியேட்டர்களில் பார்க்கப்படும். பேசப்படும். ஆனால் சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்களில் மெட்ரோ சிட்டிகளை தவிர மற்ற நகரங்களில் இருக்கின்ற தியேட்டர்களில் நிச்சயம் இந்தப் படம் எந்த ஒரு எதிர் வினையையும் மாற்றாது. இது ஒரு படமா என்றுதான் கேட்பார்கள்
அந்த அளவுக்கு தற்போதைய மக்களின் வாழ்க்கை முறைக்கும் இந்த படத்தில் இருக்கும் கதை மாந்தர்களுக்கும் அவ்வளவு வித்தியாசம் இருக்கிறது. அந்த வித்தியாசம் என்பதுதான் இப்போதைய இளைய சமுதாயத்தினருக்கும், அவருடைய மூத்தவர்களுக்கும் இடையிலான பெரும் இடைவெளி.
குழந்தைகளை பெற்றெடுக்கிறார்கள். வளர்க்கிறார்கள். படிக்க வைக்கிறார்கள். ஆனால் அதன் பின்பு நாங்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம் என்று இந்தக் காலத்து இளைஞர்களும், இளைஞர்களும் சொல்வது மிக மிக சுயநலத்தனம்.
இவ்வளவு தூரம் அவர்களை படிக்க வைத்து ஆளாக்கி அழகு பார்ப்பது பெற்றவர்களை அம்போ என்று விட்டுவிட்டு போவதற்கு அல்ல. பெற்றவர்கள் தங்களால் முடிந்த அளவுக்கான படிப்பையும், கல்வியையும், பொருளாதார வலிமையும் பிள்ளைகளுக்கு கொடுக்கும்பொழுது அந்த பிள்ளைகள் அதேபோல் பெற்றவர்களின் வயதான காலத்தில் அவர்கள் உடன் வைத்திருந்து அவருடைய ஆலோசனையில் வாழ்க்கையை நகர்த்தலாம் என்பதுதான் நமது முந்தைய தலைமுறையினர் நமக்கு சொல்லிக் கொடுத்த பாடம்.
ஆனால், இதையெல்லாம் மனதில் கொள்ளாமல் பிள்ளை பெற்றுக்.. கொள்வதோடு சரி படிக்க வைக்கிறதோடு சரி… பணம் கொடுத்து எங்களை கவனித்துக் கொள்வதோடு சரி… அதற்கு மேல் நாங்கள் யாரை காதலிக்க வேண்டும்? யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும்.. எப்படி வாழ வேண்டும்… என்றெல்லாம் எங்களுக்கு அட்வைஸ் செய்யாதீர்கள் என்று தான்தோன்றித்தனமாக பேசும் பல இளைஞர், இளைஞிகளுக்கு இந்தப் படத்தின் பெண் இயக்குநர் சாமரம் வீசி இருப்பது பெரும் பலவீனம்.
அதோடு அஞ்சலியின் குடும்பத்தினரை பிராமண குடும்பமாக காட்டியிருப்பது மிகப் பெரிய தவறு. அந்த இனத்தில் மட்டும்தான் இப்படி எல்லாம் இருக்கிறார்களோ என்று படம் பார்ப்பவர்கள் நினைத்துக் கொள்வார்கள். சமூகத்தில் எல்லா ஜாதிகளிலும், எல்லா இனத்திலும், எல்லா மதத்திலும் இது போன்று பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான புரிதலில் பிரச்சனைகள் இருக்கின்றன.
அதனால் ஒரு குறிப்பிட்ட இனத்தவர் மட்டும் இப்படி வாழ்கிறார்கள் என்று சொல்வது போல இந்தப் படத்தை இயக்குநர் காட்டி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
‘பேட் கேர்ள்’ என்று படத்திற்கு மிகப் பொருத்தமாக டைட்டில் வைத்திருக்கும் இயக்குநர் இந்த படத்தின் முடிவாக அஞ்சலிக்குக் கிடைத்த ‘பேட் லைஃப்’ என்று சுட்டிக் காட்டியிருந்தால் நிச்சயமாக இந்த இயக்குநரை நாம் மனதார பாராட்டி இருக்கலாம். ஆனால் அப்படி சொல்லாமல் அது நாயகியின் தனி மனித சுதந்திரம் என்று சொல்லி முடித்திருப்பது அவரை ‘பேட் டைரக்டர்’ என்று சொல்ல வைத்திருக்கிறது.
RATING : 1.5 / 5









