‘திலகர்’ படத்தில் நாயகனாக நடித்துள்ள அறிமுக நடிகர் துருவாவின் ஊடக அறிமுக விழா நேற்று மாலை வடபழனி, ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடந்தது. விழாவில் கலந்து கொண்டு இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும் போது தான் ஹீரோவாக அறிமுகமான கதையை சொன்னார்..
“நான் சினிமாவுக்கு வந்தபோது எனக்கு அட்வைஸ் பண்ண யாருமில்ல. நான் கதாநாயகனாக ஆசைப்பட்ட காலத்தில் பாண்டி பஜார் பக்கம் போவேன். அங்கு விதவிதமாக கலர் கலராக ஸ்டைலாக டிரஸ் போட்டுக் கொண்டு வருபவர்களைப் பார்ப்பேன். நமக்குக் கதாநாயகன் ஆசை சரிப்பட்டு வராது என்று நினைப்பேன். ஒருவேளை சாப்பாட்டுக்கே அல்லாடும் நிலைமைல இப்படியெல்லாம் டிரஸ் வாங்க நான் எங்கே போவது? அதனால் ஆசையை விட்டுவிட்டேன். உதவி இயக்குநராக ஆகி இயக்குநர் ஆனால் போதும் என்று நினைத்தேன்.
அப்படித்தான் எங்க டைரக்டரிடம் சேர்ந்தேன். அவர் ஒரு நாள் என்னைக் கூப்பிட்டார். ‘நீதான் இந்தப் படத்தோட ஹீரோ’ன்னாரு.. எனக்கு திக்குன்னு ஆயிருச்சு.. நான், ‘வேண்டாம் ஸாரு’ண்ணேன்… ‘கதாநாயகனா நடிக்க யாரும் கிடைக்கலய்யா… அதுனால நீயே நடி’ன்னார். என்றார். நான் சொன்னேன்.. ‘இது உங்க சொந்தப் படம்.. நீங்க மூணு படத்துல சம்பாதிச்சதை நாலாவது படத்தில் விடணுமா..? நல்லா போசனை பண்ணுங்க ஸார்..’ன்னேன்.. . ‘எனக்கு நம்பிக்கை இருக்கு… நீ நடி..’. என்றார். அப்படித்தான் ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் நடித்தேன்.
பிறகு ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ எடுக்கும்போதும்கூட நமக்கு நடிப்பு வேண்டாம். இயக்கினால் போதும் என்றே நினைத்தேன். நடிக்கத் தேர்வு செய்து வைத்திருந்த பையன் படப்பிடிப்பு துவங்கி ஒரு வாரத்துல ஓடிட்டான். வேறு வழியில்லாமல் நான் மறுபடியும் மேக்கப் போட வேண்டியிருந்தது. நடித்தேன்.
கதாநாயகனாக அறிமுகமாவது சிரமம். நுழைந்துவிட்டால் நின்று விடலாம். ஒரு படம் ஓடி விட்டால் நாலு படம் ஒடவில்லை என்றால்கூட தாக்குப் பிடித்துவிடமுடியும். வண்டி ஒடும். நாலு பேர் நாலு படம் இயக்கினால் ஒருத்தர் மூளையைக் கசக்கி படடெடுத்தால்கூட நாலுல ஒண்ணு ஓடி ஹீரோவை காப்பாத்திரும்…
இயக்குநர்கள் நிலைமை அப்படியில்லை. செய்கிற வேலையிலேயே நொந்து நூலாகி விடுவார்கள். விழுந்தால் நானே எழுந்தால்தான் உண்டு. யாரும் கை தூக்கி விட மாட்டார்கள். கதாநாயகனுக்கு நாலு படத்தில் ஒன்று நன்றாக இருந்தால் போதும். இந்த வசதி இயக்குநருக்கு இருக்காது..” என்றார் இயக்குநர் கே.பாக்யராஜ்..!