இணையம் மற்றும் தொழில் நுட்பத்தின் வீச்சு பத்திரிகையுலகத்தைவிட பொதுமக்கள் மத்தியில்தான் அதிகமாக பரவாயிருக்கிறது..
இன்று காலை திருநெல்வேலி அருகேயுள்ள பாபநாசத்தில் கமல்ஹாசனின் அடுத்த படமான ‘பாபநாசம்’ திரைப்படத்தின் ஷூட்டிங் துவங்கிவிட்டதாம்.
கமல்ஹாசனும், கவுதமியும் பேருந்து நிலையத்தில் காத்திருப்பது போலவும், பேருந்தில் பயணம் செய்வது போலவும் காட்சிகள் எடுக்கப்பட்டனவாம். ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்த ஒரு பொதுஜனம் உடனடியாக தனது செல்போனில் அதனை சுட்டு இணையத்திற்கு அர்ப்பணித்துவிட்டார்.
கடந்த வெள்ளியன்றுதான் எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றம் இந்தப் படத்தின் ஷூட்டிங்கிற்கு தடை விதித்தது. ஷூட்டிங்கின் துவக்க வேலைகள் ஆரம்பமாகியிருந்தால், 10 லட்சம் ரூபாய் பணத்தைக் கட்டிவிட்டு ஷூட்டிங்கை நடத்தலாம் என்றும் நீதிமன்றம் கோரியிருந்தது.
அதன்படி 10 லட்சம் ரூபாயை செலுத்துவிட்டு ஷூட்டிங் நடத்த அனுமதி பெற்றுவிட்டார்களாம் தயாரிப்பாளர்களாம்.
இந்தப் படத்தில் கமல்ஹாசனும், கவுதமியும் மிக நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பிறகு ஜோடியாக நடிக்கிறார்கள். போலீஸ் ஐ.ஜி.யாக மலையாளத்தில் நடித்த ஆஷா சரத் நடிக்கிறார். போலீஸ் அதிகாரியாக கலாபவன் மணி நடிக்கிறார். கமலின் மகள்களாக நிவேதா தாமஸும், எஸ்தரும் நடிக்கிறார்களாம். மலையாள திரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீது ஜோஸப்பே இந்தப் படத்தையும் இயக்குகிறார்.
‘விஸ்வரூபம் பாகம்-2’, ‘உத்தமவில்லன்’ என்று இரண்டு பெரிய பிராஜெக்ட்டுகளை முடித்துக் கொடுத்துவிட்டு உடனடியாக அடுத்த படத்தைத் துவக்கி மின்னல் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறார் கமல்ஹாசன்..!
இந்த உழைப்புதான் இந்த கலைஞனிடத்தில் மிகவும் பிடித்தமான விஷயம்..!