பிரபல யூ டியூப் சேனலான ‘பிளாக் ஷீப்’ நிறுவனமும் ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளரான முருகானந்தமும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தில் ‘மைக் செட்’ ஸ்ரீராம், ‘பிளாக் ஷீப்’ அயாஸ், அம்மு அபிராமி, தேஜு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், ஆர்.ஜே.விக்னேஷ் காந்த், சுட்டி அரவிந்த், அன்புதாசன், மற்றும் மேலும் பல முன்னணி கலைஞர்களும், நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – வாஞ்சிநாதன், இசை – சந்தோஷ் தயாநிதி, கலை இயக்கம் – வினோத், படத் தொகுப்பு – தமிழ், ஆடை வடிவமைப்பு – தினேஷ் மனோகரன், தயாரிப்பு நிர்வாகம் – அருண் ராஜா, நடன இயக்கம் – அசார், சண்டை காட்சி இயக்கம் – பில்லா ஜெகன், தயாரிப்பு நிர்வாகி – துரை, பாடல்கள் – மதுரை பாலா, அ.ப.ராஜா, பத்திரிக்கை தொடர்பு – யுவராஜ்.
இந்தப் படத்தின் மூலமாக தமிழகத்தின் பிரபல பேச்சாளரான ராஜ்மோகன் இயக்குநராக அறிமுகமாகிறார். இவரது தமிழ் பேச்சு வீடியோக்கள் ‘புட் சட்னி’, ‘தமிழ் வணக்கம்’ உள்ளிட்ட யூ டியூப் சேனல்களில் மிகவும் பிரபலமானவையாகும்.
யூட்யூப் கன்டென்ட்-ஐ விரிவாக்கம் செய்து திரைப்படமாக்க நினைத்தால் என்ன விபத்து நடக்குமோ.. அதுதான் இந்த பாபா ப்ளாக்ஷீப் படத்தில் நடந்துள்ளது
கதையின் துவக்கத்தில் ஒரு வாய்ஸ் ஓவர் வருகிறது. என்னப்பா இது வாய் ஓவராக இருக்கிறதே என்று சொல்லும் அளவில் அந்த வாய்ஸ் ஓவரே ஓவர் டோஸாக அமைந்துவிட்டது.
அடுத்ததாக நடிகை அபிராமிக்கு ஒரு போன் வருகிறது. அந்தப் போனில் அவரது மகளுக்கு ஒரு துயரம் நடப்பதாய் காட்டப்படுகிறது. அப்படியே கதை பின்னோக்கி வந்து ஒரு தனியார் பள்ளியின் பசங்க பிரச்சனைகளில் வந்து பயணிக்கிறது..! பசங்களுக்குள்ள என்ன பிரச்சினை?..
கல்வியாளரான சுரேஷ் சக்கரவர்த்தி ஒரே வளாகத்தில் குறுக்கே சுவர் எழுப்பி ஆண்கள் பள்ளி, இரு பாலர் படிக்கும் பள்ளி என்று தனித்தனியே நடத்தி வருகிறார். அவர் திடீரென்று இறந்துபோக, அடுத்து நிர்வாகத்துக்கு வருகிறார் சுப்பு பஞ்சு.
சுப்பு இரண்டு பள்ளிகளையும் ஒன்றாகச் சேர்க்கிறார். இதில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்குள் இரு கேங் இருக்கிறது. அதில் ஒரு கேங்-ல் அம்மு அபிராமி உள்பட 5 பேர். மற்றொரு கேங்-ல் ஆர்.ஜே விக்னேஷ் உள்பட 5 பேர். இவர்களுக்குள் யார் பள்ளியில் கடைசி பெஞ்ச்-ல் அமர்வது என்ற போட்டி நிலவுகிறது.
அதன் பின் பலப் பல பிரச்சனைகள் நடக்கின்றன. அவை அத்தனையும் எந்த சுவாரசியமும் இல்லாமல் நடக்க.. நமக்கு இடைவேளை வருமுன்பே தலைவலி வந்து விடுகிறது. அதன் பின்னர் பெரிய அபிராமியின் மகளுக்கு என்னாச்சு? கடைசி பெஞ்ச் பஞ்சாயத்து என்னாச்சு என்பதெல்லாம் திரைக்கதையாக விரிகிறது.
டஜன் கணக்கில் நடித்துள்ள மாணவர்களில் பலர் கவனம் ஈர்த்தாலும் யாருடைய கேரக்டரும் ஸ்ட்ராங்காக எழுதப்படவில்லை. ஆகவே யாருமே மனதில் நிற்கவில்லை. பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட பெரிய அபிராமி கேரக்டர் படத்தில் மருந்துக்கும் பயன்படவில்லை. அம்மு அபிராமி சில, பல குறும்புத்தனங்களால் 2k கிட்ஸை குறி வைக்கிறார்.
ஆர்.ஜே விக்னேஷ் காமெடி என்ற பெயரில் கதகளி ஆடி நம் நிம்மதியில் அதகளம் செய்துவிட்டார். போஸ் வெங்கட் உள்ளிட்ட வேறு யாரும் பெரிதாக படத்தில் ஜொலிக்கவில்லை.
இசை அமைப்பாளர் கலகலப்பான பின்னணி இசையால் படத்தை கொஞ்சம் காப்பாற்றியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் தன் வேலையைச் சரியாகச் செய்துள்ளார். எடிட்டர் பாவம் எங்கு வெட்ட..எங்கு ஒட்ட என்று ரொம்பவே திணறியிருக்கிறார். படத்தில் ஏகத்திற்கும் ஜம் கட்ஸ்.
இந்தப் படத்தை ஒரு ஜாலியான பள்ளிக்கூட வாழ்க்கையை கண்களில் காட்டும் படமாக மாற்றியிருக்கலாம். ஆசிரியர் பெற்றோர் உறவு, பிள்ளைகளிடம் அவர்கள் காட்ட வேண்டிய / கூடாத விசயங்கள் போன்றவற்றை எமோஷ்னலாக இயக்குநர் ராஜ்மோகன் பதிவு செய்திருக்கலாம். தவறவிட்டுவிட்டார்.
வெறும் பத்து வரி வாட்ஸப் மெசேஜில் சொல்லி பார்வேர்ட் செய்ய வேண்டிய சிறிய விசயத்தை படமாக எடுத்து வைத்துள்ளார். அதில் துளியளவும் ஈர்ப்போ உயிர்ப்போ இல்லை. ஒரு யூ ட்யூபர் இயக்குநராக மாறும் போது தன் யூ ட்யூப் அடையாளத்தை ஒழித்துவிட்டு வரவேண்டும். இல்லை என்றால் படம் கடைசி பெஞ்ச்-ல்தான் இருக்கும் என்பதற்கு இந்த ‘பாபா ப்ளாக்ஷீப்’ படமும் ஒரு உதாரணம்.
RATING : 2.5 / 5









