‘மகாதீரா’, ‘சத்ரபதி’, ‘நான் ஈ’ ஆகிய பிரமாண்டமான படங்களை இயக்கிய பிரபல தெலுங்கு இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி தற்போது ‘பாகுபாலி’ என்கிற பிரமாண்டமான சரித்திர படத்தை இயக்கி வருகிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்த ‘பாகுபாலி’ படம் தயாராகி வருகிறது. இத்திரைப்படம் வரும் மே 15-ம் தேதி வெளியாகும் என்று படத்தின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி நேற்று அறிவித்துள்ளார்.
3-டி தொழில் நுட்பத்தில் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படம் தயாராகி உள்ளது. இதில் கதாநாயகனாக பிரபாஸும், கதாநாயகியாக அனுஷ்காவும் நடித்துள்ளர். பிரபாஸுக்கு அம்மாவாக ஸ்ரீதேவி நடிக்கிறார். தளபதி கேரக்டரில் சத்யராஜ், வில்லனாக ராணா டகுபதி, கோபிசந்த் என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். எம்.எம்.கீரவாணி இசையமைத்துயுள்ளார்.
ஹாலிவுட்டில் வரலாற்றுப் படங்களுக்குச் செய்யப்படுவதுபோலவே புரொடெக்ஷன் டிசைன் செய்து இதற்காகவே தனியாக பிரம்மாண்ட நகரம் ஒன்றை உருவாக்கி அதில் படப்பிடிப்பை நடத்தி உள்ளனர். இந்த படம் 2 பாகங்களாக தயாரிக்கப்படுகிறது. முதல் பாகம் இந்தாண்டு வெளியாகிறது. 2-வது பாகம் 2016-ம் ஆண்டு வெளியாகும் என்று கூறபட்டது.
இந்த நிலையில் இப்படத்தின் வெளியீடு குறித்து பல்வேறு கிசுகிசுக்கள் கடந்த சில மாதங்களாக வெளியாகி வந்தன. தற்போது இந்தப் படத்தின் வெளியீடு குறித்து, உறுதியான தகவலை இயக்குநர் ராஜமவுலி தனது டிவிட்டர் இணையத்தளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
“இன்று ‘பாகுபாலி’ குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளோம். ஏனென்றால் ஒரு பாடலைத் தவிர படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து விட்டது. எனவே ‘பாகுபாலி’ முதல் பாகத்தை வரும் மே-15 அன்று வெளியிட வேலைகள் நடந்து வருகின்றன..” என கூறி உள்ளார்.
மே-15 ‘பாகுபாலி’ வெளியீடு என்றால் நிச்சயம் இதற்கு முன்னதாகவே ‘ருத்ரமா தேவி’யும் ரிலீஸாகிவிடும் என்று தெரிகிறது..!