full screen background image

அய்யனார் வீதி – சினிமா விமர்சனம்

அய்யனார் வீதி – சினிமா விமர்சனம்

ஸ்ரீசாய்சண்முகா பிக்சர்ஸ் சார்பில் பி.செந்தில்வேல், விஜய சங்கர் இருவரும் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் கே.பாக்யராஜ், பொன்வண்ணன், யுவன், சாரா ஷெட்டி, சின்சு மோகன், தயாரிப்பாளர் செந்தில்வேல் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – சக்திவேல், இசை – யுகே.முரளி, தயாரிப்பு ஸ்ரீசாய் சண்முகம் பிக்சர்ஸ் சார்பில் பி.செந்தில்வேல், விஜயசங்கர், இயக்கம் – ஜிப்ஸி என்.ராஜ்குமார்.

உலகமே ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த பாகுபலி படத்தோடு போட்டியிட்ட பெருமையுடன் திரைக்கு வந்திருக்கிறது இந்தப் படம். கிராமத்துக் கதையுடன் கூடிய படத்தைப் ரொம்ப நாளாகிவிட்டது என்கிற ஆயாசத்தில் இருந்த நமக்கு ஆறுதலாய் இருக்கிறது இந்தப் படம்.

அய்யனார் வீதி என்பதே கதைக்களனை உள்ளடக்கிய கிராமத்தின் பெயர். அந்தக் கிராமத்தின் பெரிய மனிதர் அய்யனார் என்னும் பொன்வண்ணன். ஊர் சாமி கும்பிடும்போது அய்யனார் வாளுடன் அருள் வாக்கு சொல்லும் சாமியாடி.

அதே ஊர் கோவிலின் பூசாரி சுப்ரமண்ய சாஸ்திரி என்கிற கே.பாக்யராஜ். பாக்யராஜூம், பொன்வண்ணனும் நெருங்கிய நண்பர்கள். பல வருடங்களாக குடும்ப நண்பர்களாகவும் இருப்பவர்கள்.

அதே ஊரைச் சேர்ந்த மருது என்னும் செந்தில்வேலின் குடும்பம் ஊரிலிருந்தே ஒதுக்கப்பட்டிருக்கிறது. அய்யனாரின் அப்பாவான ராஜா ஊருக்கே ஜமீனாக இருந்தபோது அவருடைய தங்கை கணவரான மருதுவின் தந்தை ஊரில் கள்ளச் சாராயம் காய்ச்சி சில குடிமகன்கள் சாவதற்குக் காரணமாக இருக்கிறார்.

இதனால் தனது தங்கை குடும்பம் என்றும் பாராமல் அந்தக் குடும்பத்தை ஊரைவிட்டு விலக்கி வைக்கிறார் அய்யனாரின் அப்பா. ஆனால் ஊர்க்காரர்கள் தங்கையையும், தங்கை கணவரையும் படுகொலை செய்கிறார்கள். உயிர் தப்பிய இரண்டு மகன்கள்தான் இப்போது இருக்கிறார்கள்.

இதில் பெரியரின் மகனான யுவன் பக்கத்து ஊரில் கல்லூரியில் படிக்கிறார். அதே கல்லூரியில் பாக்யராஜின் பொண்ணான சவுமியா என்னும் சாராவும் படிக்கிறார். யுவன் சாராவை விரும்புவதாகச் சொல்லி அவளை நெருங்கி, நெருக்க.. இதை விரும்பாத சாரா யுவன் பற்றி கல்லூரி முதல்வரிடம் புகார் கொடுக்கிறாள். யுவன்-சாரா காதல் கதை மோதலுடன் இருக்கிறது.

இந்த நேரத்தில் அய்யனாரின் மகளான துர்கா யுவனை விரும்புகிறாள். இந்த சாராவும், துர்காவும் நெருங்கிய தோழிகளாக இருக்கிறார்கள். தனது குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கியதால் கோபத்தில் இருக்கும் யுவன் இதுதான் சமயமென்று அய்யனாரின் மகளான துர்காவுடன் நெருங்கிப் பழகி அவளுடன் உறவு கொள்கிறார் யுவன்.

இதே நேரம் ஊரில் அய்யனார் கோவில் திருவிழா வருகிறது. இந்த்த் திருவிழாவின்போது தங்களை ஒதுக்கி வைத்திருக்கும் ஊர் மக்களை கூண்டோடு கைலாசத்திற்கு அனுப்ப திட்டம் போடுகிறது யுவனின் அப்பா, சித்தப்பா கூட்டணி.

ஊர்த் திருவிழாவின்போது அய்யனார் வாளோடு ஊரைச் சுற்றி வர வேண்டிய அய்யனாருக்கு அன்றைக்கு சாமி இறங்காமல் போக.. அதே நேரம் அங்கே வரும் மருது அய்யனாரின் மகள் சோரம் போன கதையைச் சொல்ல திடுக்கென்று அதிர்ச்சியாகும் அய்யனாருக்கு மனநலம் பாதிக்கப்படுகிறது.

அய்யனார் இல்லாத்தால் அடுத்து யாரிடம் வாளைக் கொடுத்து ஊரைச் சுற்றி வரச் செய்வது என்று ஊர் மக்கள் யோசிக்கிறார்கள். அய்யராக இருந்தாலும் அவரும் பூசாரிதானே என்று நினைத்து பாக்யராஜிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைக்கிறார்கள்.

பாக்யராஜ் அந்தப் பொறுப்பை செய்து முடித்தாரா..? கள்ளச் சாராய சாவில் இருந்து ஊர் மக்களை காப்பாற்றினாரா என்பதெல்லாம் திரையில் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்..!

கிராமமும், கிராமம் சார்ந்த பகுதிகளிலும் படம் பிடித்திருக்கிறார்கள். நகர கலாச்சாரத்தையே பார்த்து போரடித்த ரசிகர்களை இந்தப் படம் கிராமத்துக்கு அழைத்துச் சென்ற உணர்வைத் தருகிறது.

அய்யனார் மனநலம் பாதிப்பில் இருப்பதில்தான் படமே துவங்குகிறது. கிராமத்துக் கதை.. எளிய மனிதர்கள்.. என்பதெல்லாம் சரிதான். ஆனால் கதை, திரைக்கதையில் இத்தனை ஓட்டைகளையும், குழப்பங்களையும் வைத்திருந்தால் எப்படி ரசிப்பது..? படம் எப்படி நம் மனதில் உட்காரும்..!?

முதலில் யுவன் யாரை காதலிக்கிறான் என்பதே சரியாக சொல்லப்படவில்லை. அய்யனாரின் மகள்.. பாக்யராஜின் மகள் என்று இருவரையும் சம்பந்தப்படுத்தி குழப்பமான காட்சியமைப்புதான் படத்தில் இருக்கிறது.

அதுவும் யுவன் சாராவை விரட்டி விரட்டி காதலிப்பது போலவும், டார்ச்சர் செய்வதும் போலவும் காட்சிகளே இல்லை. இதுவே இல்லாதபோது யுவன் மீது சாரா கல்லூரி முதல்வர்வரையிலும் புகார் சொல்வது ஏன் என்றுதான் தெரியவில்லை. சாரா, யுவன் மீது கொண்டிருக்கும் வெறுப்புக்குக் காரணம் என்னவென்றுதான் தெரியவில்லை.

“வாழ்க்கையில் முன்னேற லட்சியம் வேண்டும். காதலிக்கும் முன் ஏதாவது சாதித்துவிட்டு வா..” என்கிறார் சாரா. கடைசியில் கல்லூரியில் இளம் சாதனையாளர் விருதினை இருவருமே பெறுகின்றனர். பின்பு ஏன் சாரா, யுவனை நிராகரிக்கிறார் என்று புரியவில்லை.

இப்படி யுவனின் கேரக்டர் ஸ்கெட்சை ஏதோ ஒப்புக்கு சப்பாணி போல் ஆக்கியிருக்கிறார்கள். அவரும் தன்னால் முடிந்தவரையிலும் நடித்துவிட்டுப் போயிருக்கிறார்.

ஹீரோயின்களாக நடித்திருக்கும் சாராவும், துர்காவாக நடித்திருக்கும் சிஞ்சு மோகனும் நல்ல தேர்வு. நல்ல முகவெட்டு. நடிப்பென்று அதிகம் இல்லை. பாடல் காட்சிகளில் தங்களுடைய வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள் அவ்வளவுதான்.

பொன்வண்ணனும், பாக்யராஜூம்தான் படத்தில் நடித்திருக்கும் கேரக்டர்கள். அய்யனாராக ஊரை வலம் வரும் பொன்வண்ணனின் உடல் மொழி சாமியாடிக்கு ஒத்துவரவில்லை. அல்லது இயக்குநர் அவரிடமிருந்து அந்த நடிப்பை வரவழைக்கவில்லை என்பதுதான் உண்மை.

பாக்யராஜ் தனக்கான காட்சிகளிலெல்லாம் நன்றாகத்தான் பேசியிருக்கிறார். ஆனால் கொஞ்சம் குழப்பியிருக்கிறார். இடைவேளை காட்சியில் கோவிலை கொள்ளையடித்த கும்பல் அய்யனாருடையது என்று ஏதோ சொல்லி வைக்கிறார். பின்பு போலீஸுடன் அய்யனாரின் வீட்டு வாசலுக்கு வந்தும் ஏதோ பூடகமாக அய்யனாரை குற்றம்சாட்டிவிட்டு பின்பு போலீஸ் ஜீப்பில் இருந்தவர்களை இறக்கி அவர்கள்தான் என்கிறார். இதென்ன குழப்பம்டா சாமி என்று நம்மையே கேட்க வேண்டிய கட்டாயம்..! திரைக்கதை மன்னனையே குழப்பியிருக்கிறார்கள்..!

பாக்யராஜ்தான் அய்யனாராக ஊரைச் சுற்றி வர வேண்டும் என்றதும் ஏதாவது பெரிய அளவுக்கு ஹிப்பை ஏற்றுவார் என்று நினைத்தால் அது எதுவுமே இல்லாமல் சாதாரணமாக நடந்து செல்வதும், வழியிலேயே ஒரு கொலை செய்வதுமாக கிளைமாக்ஸ் படு சொதப்பலாகிவிட்டது..!

வில்லனாக வரும் தயாரிப்பாளர் செந்தில்வேலுக்காகவே பாடல் காட்சிகளும், சண்டை காட்சிகளையும் அமைத்திருக்கிறார்கள். இவரது நடிப்பு படு செயற்கையாக இருப்பதால் கவரவில்லை. சண்டை காட்சிகள் மட்டும்தான் படத்தில் மிக நேர்த்தியாக செய்யப்பட்ட இயக்கம் என்று சொல்லலாம்.

ஒளிப்பதிவாளர் சக்திவேல் கிராமத்து வட்டாரத்தை நன்கு படம் பிடித்திருக்கிறார். ஊர்த் திருவிழாவை விரட்டி, விரட்டி படமாக்கியிருக்கிறார்கள்.

யு.கே.முரளியின் இசையில் ‘வராரு ஐயன் வராரு’ பாடல் வரும் காலங்களில் அய்யனார் கோவில்களில் ஒலித்துக் கொண்டேயிருக்கும். ‘பொண்ணுங்களை பொறுத்தவரை’ கானா பாணி பாடல்.  ‘கண்ணுச் சாராயம் முன்னாலே’ குத்துப் பாட்டு.  ‘அன்பு கொண்ட ஐயன் முகம்’ ஆகியவை கேட்கும் ரகம்.

சிறு தெய்வ வழிபாடு, நட்பு, குடும்பப் பாசம் என்று பலவற்றையும் சொல்ல முனைந்திருந்தாலும், எதையும் முழுதாகச் சொல்லாமல் விட்டதினால் படத்தை முழுமையாக ரசிக்கவே முடியவில்லை..!

 

Our Score