full screen background image

‘அயோக்யா’ பட போஸ்டர் – விஷாலுக்கு டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம்..!

‘அயோக்யா’ பட போஸ்டர் – விஷாலுக்கு டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம்..!

நேற்றைக்கு வெளியான விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘அயோக்யா’ படத்தின் முதல் பார்வை திரையுலகிலும், அரசியல் துறையிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

2015-ம் ஆண்டு தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில், இயக்குநர் பூரி ஜெகந்நாத்தின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘டெம்பர்’. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த ‘அயோக்யா’ படம் தயாராகி வருகிறது.

லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் B.மது தயாரிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் வெங்கட் மோகன் இயக்குகிறார்.

இந்தப் படத்தில் நடிகர் விஷால் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். தெலுங்குலகில் அனைவரின் மனதையும்  கவர்ந்த ராஷி கன்னா இவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

மேலும், R.பார்த்திபன், K.S.ரவிக்குமார், சச்சு, வம்சி மற்றும் பலர் நடித்து  வருகின்றனர். 

இசை – சாம் CS, ஒளிப்பதிவு – VI கார்த்திக், கலை – SS மூர்த்தி, படத் தொகுப்பு – ரூபன், சண்டை பயிற்சி –  ராம் லக்ஷ்மன், நடனம் – பிருந்தா ஷோபி, உடை வடிவமைப்பு – உத்ரா மேனன், பாடல்கள் – யுகபாரதி-விவேக், மூலக்கதை – வெக்காந்தம் வம்சி, தயாரிப்பு மேற்பார்வை – முருகேஷ், தயாரிப்பு நிர்வாகம் – ஆண்டனி சேவியர்.

ayokyaa-movie-poster-1

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமாகி ஹைதராபாத், விசாகபட்டினம்  என்று பரவி இப்போது மீண்டும் சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக தனது தோற்றத்தை உடற்பயிற்சியால் ஆஜானுபாகுவாக வடிவமைத்திருக்கிறார் விஷால். 

வரும் 2019-ம் ஆண்டு ஜனவரியில் ‘அயோக்யா’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியிடப்படவுள்ளது.

இந்த அயோக்யா படத்தின் முதல் பார்வை போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இந்தப் போஸ்டரில் ஒரு போலீஸ் ஜீப் மீது அமர்ந்திருக்கும் நாயகன் விஷால் கையில் பீர் பாட்டிலுடன் இருப்பது போன்ற காட்சி அமைந்துள்ளது.

இந்தப் போஸ்டர் வெளியானவுடன் வழக்கம்போல சர்ச்சைகளும் உடனேயே எழுந்துவிட்டன. ஏற்கெனவே சர்கார் படத்தின் வெளியீட்டுக்கு பிறகு அந்தப் படத்தில் நிறைய காட்சிகளில் நாயகன் விஜய் சிகரெட் பிடித்தபடி வருவதை பல அரசியல் கட்சியினரும் விமர்சித்து சமூகத்திற்கு பெரும் கேட்டினை செய்யும் விஜய் எப்படி நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பியிருந்தார்கள்.

இப்போது அதேபோல் நடிகர் விஷால் கையில் வைத்திருக்கும் பீர் பாட்டிலும் சர்ச்சையாகிவிட்டது.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ் இது பற்றி டிவீட்டரில் உடனுக்குடன் கருத்து தெரிவித்துள்ளார்.

ayokya-ramdoss-tweet-1 ayokya-ramdoss-tweet-2

டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட கண்டனச் செய்தியில், “பீர் பாட்டிலுடன் நடிகர் விஷால் தோன்றும் விளம்பரமும், முதல் சுவரொட்டியும் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும். இந்த விளம்பரம் மூலம் அவரது ரசிகர்களுக்கு நடிகர் விஷால் சொல்ல வரும் செய்தி என்ன? நடிகர் சங்க பொதுச் செயலாளரிடமிருந்து சமூக அக்கறையை எதிர்பார்க்கிறேன்..!” என்று குறிப்பிட்டுள்ளார்.

டாக்டர் ராமதாஸின் இந்த ட்வீட் பற்றி நடிகர் விஷால் இதுவரையிலும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இதையும் படத்துக்கான பப்ளிசிட்டியாக படக் குழுவினர் பயன்படுத்துவார்கள் என்றுதான் தெரிகிறது..!

 

Our Score