‘அயோக்யா’ – சினிமா விமர்சனம் 

‘அயோக்யா’ – சினிமா விமர்சனம் 

2015-ம் ஆண்டு தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர்., காஜல் அகர்வால் நடிப்பில் தெலுங்குலகின் மசாலா மன்னனான பூரி ஜெகன்னாத்தின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘டெம்பர்’. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த ‘அயோக்யா’ படம் உருவாகியுள்ளது.

லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் B.மது தயாரித்திருக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தில் நடிகர் விஷால் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். ராஷி கன்னா இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், R.பார்த்திபன், K.S.ரவிக்குமார், சச்சு, வம்சி, ராதாரவி, பவித்ரா லோகேஷ், எம்.எஸ்.பாஸ்கர், சந்தான பாரதி, ஆடுகளம் நரேன், ஆர்.என்.ஆர்.மனோகர், சோனியா அகர்வால், வேல.ராமமூர்த்தி, பூஜா தேவரியா, தேவதர்ஷிணி, சனாகான் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

இசை - சாம் C.S., ஒளிப்பதிவு - VI கார்த்திக், கலை – S.S.மூர்த்தி, படத் தொகுப்பு - ரூபன், சண்டை பயிற்சி -  ராம் லக்ஷ்மன், நடனம் - பிருந்தா ஷோபி, உடை வடிவமைப்பு - உத்ரா மேனன், பாடல்கள் - யுகபாரதி-விவேக், ஸ்டில்ஸ் – ஹரிசங்கர், ஒலி வடிவமைப்பு – உதயகுமார், டிசைன்ஸ் – கோபி பிரசன்னா, மக்கள் தொடர்பு – ஜான்சன், மூலக்கதை - வெக்காந்தம் வம்சி, தயாரிப்பு வடிவமைப்பு – எஸ்.எஸ்.மூர்த்தி, தயாரிப்பு மேற்பார்வை - முருகேஷ், தயாரிப்பு நிர்வாகம் - ஆண்டனி சேவியர். இணை தயாரிப்பு – பிரவீன் டேனியல்.

‘கர்ணன்’ என்னும் விஷால் சிறு வயதிலேயே தனது பெற்றோரை இழந்தவர். அனாதையாக சுற்றித் திரிந்தவர் லோக்கல் ரவுடியான ஆனந்த்ராஜின் கண்ணில்பட்டு அவருடைய அரவணைப்பில் சின்னச் சின்னத் திருட்டுக்களைச் செய்து வருகிறார்.

‘போலீஸாக வேலை பார்த்தால் அதிகாரப்பூர்வமாகவே திருடலாம்.. கொள்ளையடிக்கலாம்.. யாரும் கேட்க மாட்டார்கள்’ என்பது ஒரு சம்பவத்தின் மூலமாக சின்ன வயது விஷாலுக்குத் தெரிய வருகிறது.

இதனால் தற்காலிகமாக திருட்டுத் தொழிலுக்கு குட் பை சொல்லிவிட்டு 10-ம் வகுப்புவரையிலும் கஷ்டப்பட்டு படிக்கிறார். அதற்கு மேல் படிக்க முடியாமல் தவித்தவர், பணம் கொடுத்து சர்டிபிகேட் வாங்கி அதன் மூலமாக போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் ஆகிவிட்டார்.

இப்போது தூத்துக்குடி நகர இன்ஸ்பெக்டராக இருக்கும் கர்ணன் பெயருக்கேற்றபடி வாழவில்லை. சுருட்டல்.. சுரண்டல் இதுதான் இவரது தாரக மந்திரம். லஞ்சமாகவும், வஞ்சமாகவும் காக்கி உடைக்கு துரோகம் செய்து பிழைத்து வரும் அவருக்கு ஒரு லம்ப்பான பரிசாக சென்னைக்கு டிரான்ஸ்பர் கிடைக்கிறது.

அதுவும் அடையாறு சரகத்திற்குட்பட்ட நீலாங்கரை போலீஸ் ஸ்டேஷனில். அந்தப் பகுதியில் கட்டப்பஞ்சாயத்து, போதை மருந்து கடத்தல் என்று அனைத்துவிதமான சமூக விரோதச்  செயல்களையும் செய்து வரும் பார்த்திபனுக்கு ஒத்தாசையாக இருக்க வேண்டி லோக்கல் மந்திரியான சந்தானபாரதியால் கொண்டு வரப்படுகிறார் விஷால்.

துவக்கத்தில், ‘எல்லாமே நல்லாத்தான போகுது’ என்பதைப் போல பார்த்திபனின் அனைத்துவிதமான சமூக விரோதச் செயல்களுக்கும் துணை போகிறார் விஷால். அந்த ஸ்டேஷனில் ஏட்டாக வேலை செய்யும் நேர்மையானவரான கே.எஸ்.ரவிக்குமார் விஷாலை சகித்துக் கொள்ள முடியாமல் தவித்து வருகிறார்.

அதே பகுதியில் வசிக்கும் பிராணிகள் நல ஆர்வலரான ராசி கண்ணாவைப் பார்த்தவுடன் லவ்வாகிறார் விஷால். ஒரு கட்டத்தில் பார்த்திபனின் தம்பிகள் தேடி வரும் ஒரு பெண்ணை ராசி கண்ணா கேட்டாரே என்பதற்காக காப்பாற்றுகிறார் விஷால்.

இது பார்த்திபனுக்கும், விஷாலுக்கும் இடையில் மோதலை உருவாக்குகிறது. அமைச்சர் தலையிட்டும் சமாதானம் ஏற்படாமல் போக.. இருவரும் ஒருவரையொருவர் போட்டுத் தள்ளப் பார்க்கிறார்கள்.

அந்தப் பெண்ணை கொடூரமாக கற்பழித்து, கொலை செய்த குற்றத்திற்காக பார்த்திபனின் தம்பிகள் தேடப்பட்டு வருகிறார்கள். இவர்களை பிடித்து எப்படியும் தண்டனை வாங்கித் தர வேண்டும் என்று நினைத்து பேயாய் தேடி வருகிறார் விஷால். அவர்களும் விஷாலுக்கு பயந்து ஓடி ஒளிகிறார்கள்.

கடைசியில் என்னாகிறது என்பதுதான் இந்த ‘அயோக்யா’ படத்தின் திரைக்கதை.

விஷாலுக்கு இது மிக முக்கியமான படம்தான். இதுநாள்வரையிலும் நல்லவனாகவும், நாயகனாகவும் நடித்தவர் இதில் கெட்டவனாகவும், வில்லனாகவும் நடித்திருக்கிறார். இதற்கு அவருக்கு துணையாக இருந்திருப்பது அவருடைய உடல் மொழியும், வசனங்களும், நடிப்பும்.

தெலுங்கு படத்தில் இருந்த இயக்கத்தையும், நடிப்பையும் அப்படியே இதிலும் அட்சரம் சுத்தமாக பதிவு செய்திருக்கிறார்கள். வசனங்களை கடித்துத் துப்புவது போன்று பேசியிருப்பதும், அலட்சியமாக உடல் மொழியைக் காட்டியிருப்பதும் விஷாலுக்கு புதிது.

பார்த்திபனுக்கும், இவருக்குமான மோதல் ஏற்படும் காட்சிகளில் சுவையான வசனங்களினால் காட்சியை நகர்த்தியிருக்கிறார்கள். பார்த்திபனின் சிச்சுவேஷனுக்கேற்ற பன்ச் டயலாக்குகளுக்கேற்றபடியான பொருத்தமாக விஷாலுக்கும் வசனங்களை எழுதியிருக்கிறார்கள். அதிகம் ரசிக்கும்படி இருப்பது இந்தக் காட்சிகள்தான்.

கிளைமாக்ஸில் கோர்ட்டில் விஷால் எடுக்கும் அதிரடி முடிவை அவர் காட்டும்விதம் ஆக்ரோஷம். ‘லாஜக் என்றால் கிலோ என்ன விலை?’ என்று கேட்கும் அளவுக்கு மிகப் பெரிய ஓட்டையை வைத்திருக்கும் அந்தக் காட்சியை அதை மறந்து பார்த்திருக்கிறோம் என்றால் அது விஷாலின் நடிப்பினால்தான்.

ராசி கண்ணாவுக்கு பெரிய அளவுக்கான ரோல் இல்லை. வழக்கமான ஹீரோயினாக வலம் வந்து விஷாலுக்கு தைரியம் சொல்லி கடைசியாக அழுது புலம்பி தனது பங்களிப்பை நிறைவு செய்திருக்கிறார்.

பார்த்திபன்தான் பாதிப் படத்தைத் தாங்கியிருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில், ‘கோர்ட் வாசலில் என்னடா ஆதாரம் வைச்சிருக்க?’ என்று பதற்றத்தோடு கேட்கும்போதுகூட மிகவும் ரசிக்க வைத்திருக்கிறார் இந்த வில்லன்.

நெகிழ்ச்சிக்கு எம்.எஸ்.பாஸ்கர், தவிப்புக்கு பவித்ரா லோகேஷ், பூஜா தேவரியா என்று காட்சிகளை கனமாக்க நடித்திருக்கிறார்கள். அதிலும் பூஜா விமான நிலையத்தின் உள்ளேயிருந்து ஓடி வந்து ‘அவனுங்களை சும்மா விடாதீங்கண்ணா’ என்று சொல்லிக் கதறும் காட்சியை மிக அழகாகப் பதிவாக்கியிருக்கிறார் இயக்குநர்.

நேர்மையின் சிகரமான ‘அப்துல் காதர்’ என்ற ஏட்டையாவாக கே.எஸ்.ரவிக்குமார். ‘காலேஜ் பீஸ் கட்ட காசில்லை. நீ இந்த வருடம் காலேஜூக்கு போக வேண்டாம். பணம் கிடைச்சு கட்டின பின்னாடி அடுத்த வருஷம் போலாம்’ என்று தன் மகளிடம் சொல்லும் அளவுக்கு நேர்மையின் மீது வைராக்கியமாக இருக்கும் அவரது கேரக்டர் ஸ்கெட்ச் அனைவருக்கும் பிடித்தமாக இருக்கிறது.

இதேபோல் விஷாலின் ‘நல்லவன்’ என்கிற மனமாற்றத்தை வெளிப்படுத்த இவரை இயக்குநர் கச்சிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார் என்றாலும் மிகைப்படுத்தலாய் இருக்கிறது அந்தக் காட்சி.

கார்த்திக்கின் ஒளிப்பதிவில் பிரேம் பை பிரேம் அழகு தெரிகிறது. பாடல் காட்சிகளில் பாண்டிச்சேரியைவிடவும் ராசி கண்ணா மிக அழகாகக் தெரிகிறார். தொழில் நுட்பத்தின் துணையுடன் சண்டை காட்சிகளில் அனலை தெறிக்கவிட்டிருக்கிறார்கள். இதற்கு படத் தொகுப்பாளரும் பெருமளவுக்கு உதவிகளைச் செய்திருக்கிறார். பாடல்களில் கண்ணே கண்ணா ஒன்று மட்டுமே முணுமுணுக்க வைத்தது. மற்றவைகள் காதில் ஒலித்தன. அவ்வளவுதான். வசனங்களை இந்த அளவுக்கு அதிக ஒலியோடு பதிவு செய்திருக்க வேண்டுமா என்று கேட்கத் தோன்றுகிறது.

டெல்லி, மும்பை, பொள்ளாச்சி, சென்னை என்று பெண்களுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்து வந்திருக்கும் சம்பவங்கள் அனைத்திற்கும் ஒட்டு மொத்தமாய் பதில் சொல்லும்விதமாய் இந்தப் படத்தின் கதை அமைந்திருந்தாலும் லாஜிக் என்ற ஒன்று இருக்கிறதே.. அதைப் பற்றியே யோசிக்காமல் கதையை மசாலாத்தனமாக உருவாக்கியிருக்கிறார் தெலுங்கு கதாசிரியர்.

“நானும் சேர்ந்துதான் அந்தக் கொடூரத்தைச் செய்தேன்…” என்கிற விஷாலின் ஒற்றை வாக்குமூலத்தை வைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு தூக்குத் தண்டனை கொடுப்பதெல்லாம் இராணுவ ஆட்சியில்தான் நடக்கும். மக்களாட்சியில் நடக்கவே நடக்காது.

வீடியோ ஆதாரம் இருந்தால்கூட முறைப்படி விசாரணை நடத்தி, குற்றவாளிகள் தரப்பிடமும் கருத்துக்களையும், அவர்களது தரப்பு நியாயங்களையும் கேட்டு அதன் பின்புதான் தண்டனை தர முடியும். எப்பேர்ப்ப்டட குற்றமாக இருந்தாலும் இதுதான் நடைமுறை.

பெண்களுக்கெதிரான குற்றத்திற்காக மட்டும் தீர்ப்பு சொல்லியே மறுநாளே தூக்கில் போடுங்கள் என்று சொல்வதெல்லாம் நிஜத்திற்கு ஒத்து வராத விஷயம். ஆனால் காலக்கெடுவைக் குறைத்து தீர்ப்பு வந்த 3 மாதத்திற்குள் தூக்கலிட வேண்டும் என்று சட்டம் கொண்டு வரலாம்.

தெலுங்கு கிளைமாக்ஸில் அந்த மண்ணுக்கே உரித்தான கமர்ஷியல் அயிட்டங்களை சேர்த்து குற்றவாளிகளை நாயகனே பழி தீர்ப்பதாகச் சொல்லி கதையை முடித்திருந்தார்கள். ஆனால் தமிழில் நாயகன் தானே விருப்பப்பட்டு தூக்குக் கயிறை முத்தமிட்டு இறந்து போகிறான். இது ஒன்றுதான் தமிழில் செய்திருக்கும் மிகப் பெரிய மாற்றம். எது எப்படியிருந்தாலும் தமிழில் செய்திருக்கும் மாற்றம் ஏற்புடையதே..!

பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் இந்த நேரத்தில், இது மாதிரியான ஒரு விழிப்புணர்வை இத்திரைப்படம் கொண்டு வந்திருப்பது நிச்சயமாகப் பாராட்டுக்குரியது..!

‘அயோக்யா’ – நிச்சயமாக இதுவொரு அயோக்கியத்தனமான படம்தான்..!