full screen background image

அயலி- WEB SERIES – விமர்சனம்

அயலி- WEB SERIES – விமர்சனம்

மடமைகளை ஒழிக்கும் ஒரே ஆயுதம் கல்விதான் எனச் சொல்கிறாள் இந்த ‘அயலி’.

‘அயலி’ என்ற பெண் தெய்வத்தை சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் ஒரு கிராமத்தில் வழிபடுகிறார்கள். அந்தக் கிராமத்தில் ஒரு பெண் தன் விருப்பப்படி காதல் கொள்கிறாள். அது அயலிக்குப் பிடிக்கவில்லை என்பதால் அந்த ஊர் அழிவை நோக்கிச் செல்கிறது.

அங்கிருந்து சில ஜனங்கள் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்திற்கு குடி வருகிறார்கள். வரும்போது ஒரு பெண் அயலி கோவிலின் பிடி மண்ணை எடுத்து வருகிறாள். அந்த மண்ணை வைத்து அயலிக்கு சிறு கோவில் அமைக்கிறார்கள். அந்த அயலி தெய்வத்தை பெண்கள் மட்டும்தான் வழிபட வேண்டும். மேலும் வயதுக்கு வராத பெண்கள் மட்டும்தான் அயலி சிலையின் அருகே செல்ல வேண்டும். இப்படியான சம்பிரதாயங்களைச் செய்துள்ள அவ்வூர் ஆண்கள், பெண் குழந்தைகள் வயதுக்கு வந்த பிறகு படிக்கக் கூடாது… உடனேயே திருமணம் செய்துவிட வேண்டும் எனவும் தலைமுறை, தலைமுறையாக ஒரு நம்பிக்கையில் வாழ்ந்து வருகிறார்கள். 

கதை 1990-க்கு வருகிறது. அப்பவும் இந்த ஊரின் சட்டத் திட்டங்கள் பெண்களுக்கு எதிராக அப்படியேதான் இருக்கிறது. ஆண்களின் சுயநலத்தால் அயலி என்ற பெண் தெய்வத்தைக் காரணம் காட்டி பெண்களுக்கு எதிராக செயல்படும் இந்த ஊர்க் கட்டுப்பாடுகளை தமிழ்ச்செல்வி என்ற 8-ஆவது படிக்கும் சிறுமி தகர்க்க நினைக்கிறாள்.

தான் வயதுக்கு வந்தது தெரிந்தால் படிக்க முடியாது என்பதை உணர்ந்து தான் வயதுக்கு வந்ததையே மறைத்து அந்தப் பெண் படிக்கிறாள். வெற்றிகரமாக அந்த ஊரிலே முதன்முதலாக பத்தாவது பரீட்சை எழுதி மாவட்டத்தின் முதல் மாணவியாக வருகிறாள்.

அதன் பின் ஒரு கட்டத்தில் ஊர் சார்பில் அவளுக்கு பல எதிர்ப்புகள் கிளம்ப, முடிவில் தமிழ்ச்செல்வி எப்படி வெல்கிறாள் என்பதை எட்டு எபிசோட்கள் வழியாக திரைக்கதையாக்கி சுவையாக தந்துள்ளார் இயக்குநர் முத்துக்குமார்.

தமிழ்ச் செல்வியாக நடித்துள்ள அபிதான் இந்த வெப் சீரிஸின் ஆட்ட நாயகி. மிகச் சிறப்பான நடிப்பால் நம் மனங்களை வெல்கிறாள். அவளின் கோபம், இயலாமை, தன்னம்பிக்கை என எல்லாவற்றையும் நம்மால் உணர முடிகிற அளவிற்கு சிறப்பாக நடித்துள்ளாள்.

அபியின் அம்மாவாக நடித்துள்ள அனுமோல் அருமையான நடிப்பால் கதைக்கு உயிர் கொடுத்துள்ளார். கணவனுக்கு அடங்கும் போதும், கணவனை எதிர்க்கும் போதும், வெள்ளந்தியாக மகளிடம் ஏமாறும் போது அனுமோல் செம தூள்.

அபியின் அப்பாவாக நடித்துள்ள அருவி மதன் பொருத்தமான தேர்வு. சிங்கம்புலி ஒரு சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். வாத்தியாராக வரும் தர்மராஜன் காமெடிக்கு full கியாரண்டி தருகிறார். வில்லனாக லிங்கா உள்ளிட்ட மேலும் பலர் இந்த வெப் சீரிஸில் தாங்கள் சிறந்த கலைஞர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் நடித்துள்ளனர்.

இந்தக் கதைக்கு என்ன தேவையோ அதை இசையாக வழங்கியுள்ளார் இசை அமைப்பாளர். 1990-களின் நிலப்பரப்பையும், அந்தக் காலத்திய சினிமா லைட்டிங்கையும் கண்களில் காட்டியுள்ளார் கேமராமேன். எடிட்டர் இன்னும் சிரத்தையெடுத்து சீரிஸை ஷார்ப் செய்திருக்கலாம்.

பெண்கள் இன்று வான் தொடும் அளவிற்கு உச்சம் தொட்டாலும், அவர்கள் கடந்து வந்த பாதையை கண்களில் காட்சிகளாக பார்க்கும்போது மனம் கலங்கவே செய்கிறது.

எட்டு எபிசோட்களுக்கு குறைவாகவே இந்தக் கதையைச் சொல்லியிருக்க முடியும். இயக்குநர் ஏனோ அதை கவனம் கொள்ளவில்லை. இயக்குநரோடு சேர்த்து இன்னும் இருவர் வசனம் எழுதியிருக்கிறார்கள். வசனங்கள் ஒவ்வொன்றிலும் அவ்வளவு கூர்மை.

பட்ஜெட் போன்ற சின்னச் சின்ன குறைபாடுகள் லேசாக தென்பட்டாலும், தமிழில் மிக முக்கியமான வெப் சீரிஸாக இந்த அயலி அவதரித்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

ZEE-5 OTT-யில் காணக் கிடைக்கும் இந்த வெப் சீரிஸை தவற விடாதீர்கள்..!

அயலி- அபாரம்..!

Our Score