காயன்ஸ் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக வி.உமாமகேஸ்வரி, வி.சுதா விஸ்வநாதன் தயாரித்துள்ள படம் ‘அவன் அவள்.’
இந்த படத்தில் விக்னேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகிகளாக தேவிகா மாதவன், சந்திரிகா இருவரும் நடித்திருக்கிறார்கள். மற்றும் கணபதி, ஸ்வப்னம், சச்சு, பாவாலட்சுமணன் செவ்வாளை, ஆதிசிவன் சுப்புராஜ், சின்ராசு, மணிகுட்டி, என்.சி.பி.விஜயன் ஆகியோரும் நடித்துள்ளார்கள்.
ஒளிப்பதிவு – ரவி சீனிவாசன். இசை – கார்த்திக் ராஜா, பாடல்கள் – சினேகன், பா.விஜய். கலை – ஆரோக்கியராஜ், நடனம் – கூல் ஜெயந்த், கருணாகரன். சண்டை பயிற்சி – தவசிராஜ், எடிட்டிங் – பேட்ரிக், இணை தயாரிப்பு – சுதா விஸ்வநாதன். தயாரிப்பு – காயன்ஸ் பிக்சர்ஸ் வி. உமாமகேஸ்வரி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ராம்கிரீஷ் மிரினாளி.
படம் பற்றி இயக்குநர் ராம்கிரீஷ் மிரினாளி பேசும்போது, “இந்த ‘அவன் அவள்’ படத்தின் கதை இப்பொழுது பல குடும்பங்களில் நடக்கும் உண்மை சம்பவங்கள்தான்.
படத்தில் தம்பதிகள் எப்படி வாழ வேண்டும் என்பதை திரில்லர் கலந்து உருவாக்கியுள்ளோம். நடிகர் விக்னேஷுக்கு இதுவொரு திருப்புமுனை படமாக இருக்கும்.
கணவன், மனைவி ஒருவருக்கொருவர் புரிதலுடன் இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அன்புடன் வாழ வேண்டும். ஆனால், இப்போதெல்லாம் அப்படி விட்டுக் கொடுக்காமல் ஒன்றை மற்றொன்றுடன் ஒப்பிட்டு ‘அது உன்னை விட சிறந்தது.. இது உன்னைவிட சிறந்தது’ என்று பேசி மனஸ்தாபத்துடன்தான் வாழ்ந்து கொண்டிருகிறார்கள். அப்படி வாழ்ந்த ஒருவனின் வாழ்க்கைதான் இந்த படம்.
படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் கொடைக்கானலிலும் 20 சதவீதம் சென்னையிலும் நடைபெற்றுள்ளது. படத்தின் அனைத்து கட்ட வேலைகளும் முடிந்துவிட்டது. படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது..” என்றார்.









