Dream Icon Film Production நிறுவனத்தின் சார்பில் எஸ்.அன்பழகன் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
இதில் ரிஷி ரித்விக் அட்டு என்னும் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சுந்தரி என்னும் ஹீரோயினாக அர்ச்சனா ரவி நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, தீனா, பிரபா, ராஜசேகர் நால்வரும் ஹீரோவுக்கு நண்பர்களாக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ராமலிங்கம், இசை – போபோ ச்சி, படத் தொகுப்பு – எல்.வி.கே.தாஸ், கலை இயக்கம் – சுரேஷ் கல்லெரி, சண்டை பயிற்சி – பவர் பாண்டியன் ஆசான், நடனம் – அன்வர், மக்கள் தொடர்பு – நிகில், எழுத்து, இயக்கம் – ரத்தன் லிங்கா.
கத்தியெடுத்தவன் கத்தியால்தான் சாவான்.. வன்முறையாளனுக்கு வன்முறைதான் முடிவு என்பதை 101-வது முறையாக சொல்ல வந்திருக்கும் படம் இது.
அட்டு என்னும் அனாதை தனது நான்கு நண்பர்களோடு வட சென்னை பகுதியிலேயே வளர்ந்து வந்திருக்கிறார். தண்டையார்பேட்டை குப்பைக் கூளம்தான் அவரது வீடு. அடிதடி, வெட்டுக் குத்துக்கு அஞ்சாதவர். ஏரியாவிட்டு ஏரியா போயும் தனது பராக்கிரமத்தை காட்டி வருவார்.
இவரையும் வழக்கமான ஹீரோயின் பாணியில் காதலிக்கிறார் அர்ச்சனா ரவி. இதற்காக பிளாஷ்பேக்கில் ஒரு நேர்த்தியான கதையுண்டு. இந்தக் காதலை முதலில் ஏற்காமல், தயங்கி, பின்பு பலவித பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் ஏற்றுக் கொள்கிறார் அட்டு.
அட்டுவிடமிருந்து அவரது நண்பர்களை பிரித்தெடுக்க எதிரிகள் முயல்கிறார்கள். அந்த முயற்சி தோல்வியடைகிறது. நேருக்கு நேராக நின்று மோதுகிறார்கள். அதுவும் பலனளிக்காமல் போகிறது.
இந்த நேரத்தில் அட்டு கும்பல் தவிர்க்க முடியாமல் கவுன்சிலரை கொலை செய்ய நேரிடுகிறது. இதற்காக போலீஸ் துரத்த.. அந்தப் பகுதி பெரிய கையான அரசியல்வாதியிடம் அடைக்கலம் புகுகிறார்கள் அட்டுவும் அவரது நண்பர்களும்.
இந்த நேரத்தில் அட்டுவின் காதலியான அர்ச்சனா தனக்கு அவரது அப்பா மாப்பிள்ளை பார்த்திருப்பதை சொல்லி அழுக.. காதலியுடன் ஊரைவிட்டுப் போக முடிவெடுக்கிறார் அட்டு. இந்த நேரத்தில் அடைக்கலம் புகுந்திருந்த அரசியல்வாதியின் மகளுடன் காதல் என்று சொல்லி அட்டுவின் நெருங்கிய நண்பன் வர.. குழப்பம் அதிகமாகிறது..!
போலீஸ் ஒரு பக்கம்.. எதிரிகள் ஒரு பக்கம்.. காதலி ஒரு பக்கம்.. புதிதாய் முளைத்திருக்கும் அரசியல்வாதி ஒரு பக்கம்.. என்று நான்கு பக்கமும் எதிரிகளை சம்பாதித்து வைத்து என்ன செய்வது என்று யோசிக்கிறார் அட்டு.
அடுத்து என்ன நடக்கிறது..? இதையெல்லாம் அட்டு சமாளித்தாரா? இல்லையா? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
‘அட்டு’ என்றால் பொதுவாக தமிழில் ‘மொக்கை’ அல்லது ‘சுமார்’ என்பார்கள். இதில் ஹீரோ ‘சுமார்’ முகமா அல்லது ‘சுமார்’ ரவுடியா என்பதை மட்டும் யூகிக்க முடியாமல் வைத்திருக்கிறார் இயக்குநர்.
பரட்டை தலை.. தூக்கிக் கட்டிய கைலி, காவிக் கறையேறிய பற்கள்.. சவரம் செய்யாத முகம்.. அழுக்கு உடம்பு என்று பக்கவான ரவுடிக் கும்பல் தலைவனை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து வைத்திருக்கிறார் ‘அட்டு’வாக நடித்திருக்கும் ரிஷி ரித்விக். இது இவர் நடித்திருக்கும் முதல் படம் என்பதால் மிக சிரத்தையுடன் நடித்திருக்கிறார்.
ரொமான்ஸ்தான் வரவில்லையே தவிர, ஆக்சனும், கோபமும், ரெளத்திரமும், அன்பையும், பாசத்தையும் காட்டவும் செய்திருக்கிறார். ‘நட்பு என்றால் என்னவென்று இப்போ பார்த்துக்க’ என்று தன்னை கைவிடாத நண்பனைக் காட்டி கொக்கரித்துவிட்டு. எதிரிகளை விரட்டியடிக்கும் காட்சியில் சண்டை காட்சி என்பதைக்கூட மறந்து பார்க்க முடிகிறது. கிளைமாக்ஸ் காட்சியில் இவரது நடிப்பு பாராட்டுக்குரியது. இன்னும் வேறு, வேறு கேரக்டர் ஸ்கெட்ச்சுகளில் இவரை பார்த்த பின்பு இன்னும் பாராட்டலாம்.
அர்ச்சனா ரவியும் புதுமுகம். அழகான, வடிவான, கேமிராவுக்கு ஏற்ற முகம். இவர் வருகின்ற காட்சிகளில் இவர்தான் அதிகமாக கவர்ந்திழுக்கிறார். பாடல் காட்சிகளில் சாதாரணமான கிளிஷே ஷாட்டுகளில் பெரிதும் ரசிக்க வைத்திருக்கிறார்.
இவரைவிடவும் இவரது அப்பாவாக நடித்திருப்பவர்தான் பெரிய பாராட்டுக்குரியவர். காது கேளாத.. தன்னுடைய கையாலாகதத்தனத்தை நினைத்து இவர் உருகும் காட்சி மனதை நெகிழ வைக்கிறது. அதேபோல் கடைசியில் மகளுக்காக இவர் எடுக்கும் முடிவும் பகீர்தான்.. ஆனால் ‘படம் முழுக்க எம்புட்டு ரத்தம் பார்த்துட்டோம். இதையும் பார்த்திருவோமே…?’ என்பதாகத்தான் அந்தக் காட்சியையும் கடக்க முடிகிறது..!
நண்பர்களில் யோகி பாபுவும், தீனாவும்தான் மெயினாக நடித்திருக்கிறார்கள். யோகி அவ்வப்போது சிரிக்க வைத்திருக்கிறார்.
அந்தப் பொட்டல் வெளியை ஒளிப்பதிவாளரின் கேமிரா மிக அழகாக சுருட்டியிருக்கிறது. பகல் நேரப் பொழுதுகள்தான் அதிகமாக இருப்பதால் கேமிராவின் உதவி அதிகம் தேவைப்படாமல் கச்சிதமாக படமாக்கியிருக்கிறார்கள். பாடல் காட்சிகளும் மாண்டேஜ் ஷாட்டுகளாகவே செல்வதால் ரசிக்க முடிந்திருக்கிறது.
‘ஓரக் கண்ணால்’ பாடலும் ‘கை நிறைய கண்ணாடி’ பாடலும் கேட்க கேட்க பிடிக்கும். ‘டிங் டிங் டிக்கானா’ பாடல் எல்.ஆர்.ஈஸ்வரி குரலில் ரம்மியாக இழுத்துப் பிடித்து உட்கார வைக்கிறது.
இது போன்று எத்தனையோ ரவுடியிஸ படங்களை பார்த்தாகிவிட்டது. அத்தனையிலும் இதேதான் இருந்தது. அதிலிருந்து வித்தியாசமாக எடுக்க வேண்டித்தான் கதைக் களனை குப்பை மேட்டிற்கு தள்ளிவிட்டார் போலிருக்கிறது..!
அந்தக் குப்பை மேடு காட்சிகளிலெல்லாம் எப்படித்தான் படமாக்கினார்களோ தெரியவில்லை. அத்தனை குப்பைகளினாலும் சினிமா தொழிலாளர்களுக்கு ஏதாவது பாதிப்பு இருந்திருக்கும். இத்தனை பிரச்சினைகளிடையே இந்தப் படம் முழுவதையும் அந்தப் பகுதியிலேயே படமாக்கியிருக்கும் இயக்குநரின் திறமைக்கு நமது பாராட்டுக்கள்.
‘பொட்டலம்’ என்று இப்போதும் வடசென்னை பகுதியில் சொல்லப்படும் கஞ்சா, போதை பொருள் விற்பனை.. அவைகள் எப்படியெல்லாம் பார்சலாகிறது..? எப்படி சப்ளை செய்யப்படுகிறது..? என்பதையெல்லாம் இயக்குநர் இதில் பகிரங்கமாக சொல்லியிருக்கிறார். இதெல்லாமும் திரைக்கதையில் ஒரு சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கிறது என்பது உண்மைதான்..!
அதே நேரம்.. படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் யாரும் எதைப் பற்றியும் யோசிக்காமல் கத்தியைத் தூக்குவதையும், வெட்டுவதையும், கொல்வதையுமே காட்டிக் கொண்டிருப்பது ஒரு கட்டத்தில் நமக்கே பயத்தைத் தருகிறது. அதிலும் கிளைமாக்ஸ் சண்டை காட்சி மிக கொடூரம். ‘ரத்தச் சகதி’ என்று சொல்லும் அளவுக்கு படமாக்கியிருக்கிறார் இயக்குநர். இதனை கொஞ்சம் குறைத்திருக்கலாம்..!
‘கத்தியை எடுத்தவன் கத்தியால்தான் சாவான்’ என்பது அகில உலக ரவுடிகளுக்கே தெரியும் என்றாலும் அது எந்த மாதிரியான சூழலில் நடக்கும், என்பதில்தான் விஷயமே அடங்கியிருக்கிறது.
“மனிதன் ஆடு, ஆடு என்று ஆடும்போது, அவனை நன்கு ஆடவிடுவான் ஆண்டவன். ஆனால் ஆடிய மனிதன் ‘போதும். இனிமேல் அமைதியாக இருப்போம்’ என்று ஓய்வெடுக்கும்போதுதான், ஆண்டவன் அவனுடைய ஆட்டத்தை ஆரம்பிப்பான்..” – இத்தைத்தான் எல்லா ரவுடியிஸ படங்களுமே மறைமுகமாக சொல்லி வருகின்றன. அதில் இந்தப் படமும் ஒன்று. அவ்வளவுதான்..!