full screen background image

பட்டத்து அரசன் – சினிமா விமர்சனம்

பட்டத்து அரசன் – சினிமா விமர்சனம்

கபடி விளையாட்டை மையமாக வைத்து பல படங்கள் வந்துவிட்டன. ஆனால், லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் இந்த ‘பட்டத்து அரசன்’ படம், அதே கபடி விளையாட்டில் நாம் இதுவரை அறிந்திருக்காத ஒரு முகத்தைக் காட்டுகிறது.

இயக்குநர் ஏ.சற்குணம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் அதர்வா நாயகனாக நடிக்க, நாயகியாக ஆஷிகா ரங்கநாத் நடித்திருக்கிறார். ராஜ்கிரண் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் ராதிகா சரத்குமார், செந்தி, மீனாள், ஜானகி, சிந்து, ஜெயப்பிரகாஷ், ஆர்.கே.சுரேஷ், துரை சுதாகர், சிங்கம் புலி, ராஜ் அய்யப்பா, பால சரவணன், ஜி.எம்.குமார், கன்னட நடிகர் காளே, தெலுங்கு நடிகர் சதுரு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ‘உஸ்தாத் ஹோட்டல்’ புகழ் லோகநாதன் சீனிவாஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

தஞ்சை மாவட்டத்தை சுற்றியே முழு படத்தையும் எடுத்திருக்கிறார்கள். கும்பகோணத்தை கதைக் களமாக வைத்துக் கொண்டு, வெற்றிலைத் தோட்டம் மற்றும் அங்கு நடக்கும் பணிகளை பின்புலமாக வைத்திருக்கிறார்கள்.

வெற்றிலை தோட்டத்தை இதுவரை எந்தப் படத்திலும் பெரிதாக காட்டியிருப்பதாக தெரியவில்லை, இந்த படத்தில் வெற்றிலைத் தோட்டம் மற்றும் அங்கு நடக்கும் பணிகளையும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த விஷயமும் தமிழ்த் திரை ரசிகர்களுக்குப் புதிதாக இருக்கிறது.

ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் கபடி விளையாடுகிறார்கள். அதுவும் அவர்கள் இருக்கும் ஊருக்கு எதிராகவே கபடி விளையாடுகிறார்கள். அது ஏன் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.  

இதனுடன், தஞ்சை மாவட்டத்தில் தற்போதும் வழக்கத்தில் இருக்கும் தாரம் பாகம்’ என்ற விஷயத்தையும் கதைக்குள் வைத்து அதற்கேற்றாற்போல் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.

தாரம் பாகம்’ என்பது, ஒருவருக்கு இரண்டு மனைவிகள் இருந்து, ஒரு மனைவிக்கு ஒரு குழந்தை.. மற்றொருவருக்கு நான்கு பிள்ளைகள் இருந்தாலும், அவருடைய சொத்துக்களை குழந்தைகள் அடிப்படையில் இல்லாமல் தாரத்தின் அடிப்படையில்தான் பிரிப்பார்கள். அதனால், குடும்பத்தில் பல சிக்கல்கள் ஏற்படும். அந்த விஷயத்தையும் இந்த படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

இது முழுக்க, முழுக்க குடும்பப் படமாகத்தான் அமைந்திருக்கிறது. இதில் கபடி விளையாட்டையும் சொல்லியிருப்பதோடு, தாத்தா, பேரன் பாசப் போராட்டத்தையும் இணைத்துச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சற்குணம்.

பேரன், தாத்தாவுடன் சேர நினைப்பார். ஆனால் தாத்தா, பேரனை தனது குடும்பத்துடன் சேர விடாமல் தடுப்பார். ஆனால் ஒரு கட்டத்தில் அதே தாத்தா தான் இதுநாள் வரையிலும் புறக்கணித்து வந்த பேரனை தன்னுடன் இணைத்துக் கொள்கிறார். அதற்கான காரணம், பேரனின் பாசப் போராட்டம் எல்லாமே படத்தில் காரண காரியத்தோடு சொல்லப்பட்டிருக்கிறது.

இராமநாதபுரம் ஜில்லாவில் இருக்கும் காளையார்கோவில் கிராமத்தில் உயிருடன் இருக்கும் போதே சிலை வைத்து கொண்டாடும் அளவுக்கு மிகப் பெரிய கபடி வீரரான ராஜ்கிரண், மகன்கள், மகள், பேரன்கள், பேத்திகள் என்று கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார்.

அவருடைய மற்றொரு மனைவியின் பேரனான அதர்வாவும், அவரது அம்மா ராதிகாவும் அதே ஊரில் தனியாக வசித்து வருகிறார்கள். சொத்துப் பிரச்சினையால் ராதிகாவையும், அதர்வாவையும் ராஜ்கிரணும் அவரது குடும்பத்தாரும் ஒதுக்கி வைத்துள்ளனர். தனது தாய் ராதிகாவின் எதிர்ப்பையும் மீறி அதர்வா மட்டும் எப்படியாவது தாத்தா குடும்பத்துடன் சேர்ந்துவிட வேண்டும் பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகிறார்.

இதற்கிடையே ராஜ்கிரணின் மற்றொரு பேரனும், ராஜ்கிரணின் பால்ய காலத்து தோழனும், தற்போதைய பஞ்சாயத்துத் தலைவருமான ரவி காளேவின் மகனும் ஒன்றாக அதே ஊரின் கபடி டீமில் இடம் பெற்று விளையாடி வருகிறார்கள்.

ராஜ்கிரணின் பேரன் மட்டும் தமிழக கபடி டீமிற்கு தேர்வாகிவிட்டதை தெரிந்து கொண்ட காளேவின் மகன் தந்திரமாக சிலவைகளை செய்து ராஜ்கிரணின் பேரனை சிக்கலுக்கு உள்ளாக்குகிறான்.

இப்போது ஊரே கொண்டாடிய ராஜ்கிரணின் குடும்பம் ஊருக்கு துரோகம் செய்துவிட்டதாக பழி சுமத்தி அவரது குடும்பத்தில் இருப்பவர்கள் யாரும் ஊருக்கான கபடி அணியில் விளையாட கூடாது என்று தடையும் விதிக்கிறார்கள்.

இப்போது கபடி விளையாடவே தெரியாத அதர்வா தன் தாத்தா குடும்பத்தின் மீது விழுந்த பழியை போக்க களத்தில் இறங்குகிறார். கபடி விளையாட்டில் தன் ஊர் அணியை தன் குடும்ப அணி வெல்லும் என்று சவால்விட்டு பிரிந்த, குடும்பத்தை ஒன்று சேர்த்து ஊர் அணிக்கு எதிராக கபடி விளையாடத் தயாராகிறார் அதர்வா.

அந்தச் சவாலில் ராஜ்கிரணின் குடும்பம் வெற்றி பெற்றதா..? இல்லையா? என்பதை விறுவிறுப்பான கபடி விளையாட்டோடு, குடும்ப செண்டிமெண்டையும் சேர்த்து சொல்லியிருக்கிறார்கள்.

கபடி வீரராக நடித்திருக்கும் அதர்வா விளையாட்டு வீரருக்கான வேடத்தில் வழக்கம்போல கச்சிதமாக பொருந்துகிறார். கபடி களத்தில் காளையாக பாய்ந்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் அதிரடி காட்டுகிறார். காதல் காட்சிகளில் ரசிக்கும்படி அளவாக நடித்தும், குடும்ப செண்டிமெண்ட் காட்சிகளில் அனைவரையும் கவரவும் வைக்கிறார். 

அதர்வாவுக்கு தாத்தாவாக, கதையின் உண்மையான நாயகனாக பொத்தாரி’ என்ற கபடி வீரரின் வேடத்தில் நடித்திருக்கும் ராஜ்கிரண், மூன்றுவிதமான கெட்டப்புகளில் தனது வித்தியாசத்தை நடிப்பினை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். 70 வயதில் ஒருவரால் கபடி விளையாட முடியுமா என்ற கேள்விக்குத் திரையில் கபடி விளையாடியே காண்பித்திருக்கிறார் ராஜ்கிரண்.

நாயகியாக நடித்திருக்கும் புதுமுகம் ஆஷிகா ரங்கநாத்திற்கு குடும்ப பாங்கான முகம். கபடி வீராங்கனையாக நடித்திருப்பவர் காதல் காட்சிகளிலும், கபடி போட்டியிலும் அளவான நடிப்பு மூலம் ஜொலித்திருக்கிறார். நாயகி தொடை தெரியும் அளவுக்கு உடையணிந்திருப்பது சற்குணத்தின் இயக்கத்தில் இதுதான் முதல் படமாகும்.

ராஜ்கிரணின் மூத்த மகனாக நடித்திருக்கும் ஜெயப்பிரகாஷ், அதர்வாவிடம் தனது கோபத்தை வெளிப்படுத்தும் காட்சிகளிலும், மகனை இழந்த ஆற்றாமையில் தவிக்கும் காட்சிகளிலும், இறுதியில் நிலைமை புரிந்து அதர்வாவுடன் இணைந்து கபடியில் மல்லுக்கட்டும் காட்சியிலும் குறையில்லாமல் நடித்திருக்கிறார்.

ராஜ்கிரணின் இளைய மகனான துரை சுதாகரும் தன் பங்குக்கு உரிய நடிப்பினை காண்பித்திருக்கிறார். சிங்கம் புலி வீட்டு மாப்பிள்ளையாக வலம் வந்தாலும் கிடைக்கும் சில இடங்களில் நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்.

ராஜ்கிரணின் மற்றொரு பேரனாக நடித்திருக்கும் ராஜ் ஐயப்பன் நடிப்பிலும், கபடி விளையாட்டிலும் சரி பாராட்டும்படி நடித்திருக்கிறார். ராதிகா தன் பங்குக்குத் தனது தனித் திறமையை பதிவு செய்துள்ளார். மேலும் ஆர்.கே.சுரேஷ், ரவி காளே, பால சரவணன் என்று பலரும் தங்களது கேரக்டருக்கேற்ற நடிப்பைக் காண்பித்து முடித்திருக்கிறார்கள்.

தொழில் நுட்பத்தில் லோகநாதன் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றபடி பயணித்துள்ளது. விளையாட்டு போட்டிகளை விறுவிறுப்பாக காட்டுவது மட்டுமல்ல.. பல்வேறு வயதுகளில் இருக்கும் தாத்தா, மகன், பேரன் என்று மூன்று தலைமுறையினர் கொண்ட ஒரு குடும்ப அணி கபடி விளையாடுவதை மிக நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார்.

படத்தின் துவக்கத்தில் கேமிரா அந்த வெற்றிலை கொடி தோட்டத்திற்குள் நுழைந்து பயணிக்கும் காட்சியை இதுவரையிலும் தமிழ்த் திரை ரசிகர்கள் கண்டதில்லை. அவ்வளவு அழகுடன் அதைப் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

பொதுவாக சற்குணத்தின் படமென்றால் ஜிப்ரானின் இசையில் பாடல்கள் சிறப்பாகத்தான் இருக்கும். இந்தப் படத்திலும் அதுவே நடந்திருக்கிறது. பாடல்கள் திரும்ப திரும்ப கேட்கும்படி இருப்பதோடு, முணுமுணுக்கவும் வைக்கிறது. இன்னொரு பக்கம் பின்னணி இசை படத்தை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தி செல்ல உதவியிருக்கிறது.

கபடி விளையாட்டை மையமாக வைத்து இந்தக் கதை எழுதப்பட்டிருந்தாலும், குடும்ப செண்டிமெண்டோடு திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் சற்குணம், அதை முழுமையான பொழுதுபோக்கு படமாகவும் கொடுத்திருக்கிறார்.

அதிகப்படியான பெரிய நட்சத்திரங்களை வைத்துக் கொண்டு இப்படி ஒரு கிராமத்து, குடும்பக் கதையை சொல்வதே மிகப் பெரிய சவால் என்றாலும், அந்த சவாலை சாமர்த்தியமாக சமாளித்திருக்கும் இயக்குநர் சற்குணம், காதல், ஆக்‌ஷன், காமெடி, குடும்ப செண்டிமெண்ட் என்று அனைத்தையும் கலந்து அளவாகவே கொடுத்திருக்கிறார்.

விறுவிறுப்பான கபடி விளையாட்டை சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் குடும்ப செண்டிமெண்ட் திரைக்கதையில் சில தடுமாற்றங்கள் இருந்தாலும், அவற்றை கபடி விளையாட்டும் அதை சார்ந்த தகவல்களும் சரி செய்து, சலிப்பு ஏற்படுத்தாமல் படத்தை நகர்த்தி சென்றிருக்கிறது. 

இறுதியில் ராஜ்கிரணின் குடும்பத்தாருக்கும், ஊருக்கும் இடையே நடக்கும் கபடி போட்டி நம்மை சீட் நுனியில் உட்கார வைத்து ரசிக்க வைத்திருக்கிறது.

கிளைமாக்ஸ் காட்சியில் ஊரை எதிர்த்து தாத்தா ராஜ்கிரன் முதல் பேரன் அதர்வா & குட்டி பையன்வரை அனைவரும் கபடி விளையாடுகின்றனர். அப்போதும்கூட அதர்வாஙுடன் கை கோர்க்க தவிர்க்கிறார் பெரியப்பா ஜெயப்பிரகாஷ்.

ஆனால், கடைசி ரவுண்டில் ஜெயித்தால்தான் கவுரவம் என்ற நிலை வந்த பின்பு, கவுரவம் பார்க்காமல் தம்பி மகனுடன் கைப் பிடித்து களத்தில் குதிக்கிறார் ஜெயப்பிரகாஷ். அந்தக் காட்சி ரசனையானது என்றாலும், இன்னும் கொஞ்சம் அழுத்தமாகக் காட்டியிருக்கலாம்தான்.

இந்த கபடி ஆட்டத்தில் மருமகன் சிங்கம் புலிக்கு காயம் ஏற்பட திடீரென ஆட்டத்தில் நுழைகிறார் நாயகி ஆஷிகா. “இது ஒரு குடும்பம் மட்டுமே ஆடும் ஆட்டம்.. இதில் நுழைய நீ யார..?” என்று அனைவரும் கேட்கிறார்கள். உடனேயே நாயகி, அதர்வாவிடம் தன் கழுத்தில் தாலி கட்ட சொல்லும் காட்சியெல்லாம் உச்சக்கட்டமான லாஜிக்கே இல்லாத சென்டிமெண்ட். சிரிப்புதான் வருகிறது. முன்பேயே நாயகியை இவர்களது குடும்பத்திற்குள் கொண்டு வந்திருக்கலாம்.

இப்படியாக இயக்குநர் சற்குணம் திரைக்கதையில்தான் சற்றே சறுக்கியிருக்கிறார். சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்த அவர் திரைக்கதையையும் இன்னும் வலுவாக கேள்வி கேட்காத அளவுக்கு அமைத்திருக்கலாம்.

ஒட்டு மொத்தமாய் இன்றைய இளைஞர்களுக்கான படமாக மட்டுமின்றி, குடும்பத்தோடு பார்க்கக் கூடிய பாசமலர்’ டைப் படமாகவும் இந்தப் பட்டத்து அரசன்’ அமைந்துள்ளது.

RATING : 3.5 / 5

Our Score