full screen background image

அது வாங்குனா இது இலவசம் – சினிமா விமர்சனம்

அது வாங்குனா இது இலவசம் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தில் விஜய் டிவி ராமர், கலையரசன், பூஜாஸ்ரீ, சூப்பர் குட் சுப்ரமணி, மாரீஸ் ராஜா, சம்பத், மீசை ரமேஷ். அருண், அம்மையப்பன் பாலாஜி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பு, எழுத்து, இயக்கம் – எஸ்.கே.செந்தில்ராஜன், இசை – அர்வின் ராஜ், தயாரிப்பு – ஸ்ரீஜா சினிமாஸ், பத்திரிக்கை தொடர்பு – கே.எஸ்.கே.செல்வக்குமார்.

விஜய் டிவி ராமரை முக்கிய கதாபாத்திரத்தில் வைத்து சிறிய பட்ஜெட்டில் இந்தப் படத்தை ஏதோ தங்களால் முடிந்த அளவுக்கு எடுத்து கொடுத்திருக்கிறார்கள் படக் குழுவினர்.

ராமரும், கலையரசனும், மாரிஸ் ராஜாவும் நண்பர்கள். மகா குடியர்கள். எந்த வேலை வெட்டிக்கும் போகாமல் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு அதில் கிடைக்கும் பணத்தை டாஸ்மாக்குக்கு வாரி இறைக்கும் மதுப் பிரியர்கள்.

இவர்கள் ஒரு நாள் அறியாமல் செய்த ஒரு தவறினால் அநியாயமாக ஒரு உயிர் காலியாகிறது. அதே நேரத்தில் இவர்கள் மூவருமே ஒரு பெண்ணை தீவிரமாக காதலிக்கிறார்கள். அந்த பெண் இவர்கள் மூவரையும் தனித்தனியாக காதலிப்பது போல நடிக்கிறார்.

ஆனால் அந்தக் காதல் கை கூடும் என்று இந்த நண்பர்கள் நினைக்க அந்தப் பெண்ணால் ஏற்படும் விளைவுகள் விபரீதமாக இருக்கின்றன. அது என்ன என்பதுதான் இந்தப் படத்தின் கிளைமாக்ஸ்.

“நன்மை செய்தால் இன்னொரு நன்மை இலவசமாகவே கிடைக்கும். தீமை செய்தால் இன்னொரு தீமை இலவசமாகவே வரும்” என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் கரு.

கதை, திரைக்கதை, நடிப்பு, இயக்கம், இசை என்று அனைத்திலுமே இந்தப் படம் ஏனோதானோவென்று இருப்பதால், அதைப் பற்றி நாம் எதையும் சொல்ல முடியவில்லை. பல காட்சிகள் ஒரு அப்ரண்டிஸ் இயக்குநர் இயக்கியதை போலவே நமக்குத் தெரிகிறது.

டாஸ்மாக் பார் சம்பந்தப்பட்ட காட்சிகள் வாந்தி வரும் அளவுக்கு ம்மை முகம் சுழிக்க வைக்கிறது. ரசிக்கவே முடியவில்லை. அதோடு குடிகாரர்களிடத்தில் எந்தெந்த காட்சிகளிலெல்லாம்  குளோசப் வைக்கக் கூடாதோ, அதற்கெல்லாம் குளோசப் ஷாட்களை வைத்து படம் பார்ப்பவர்களை கதிகலங்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

படத்தில் ஒரே ஒரு ஆறுதல் ஹீரோயினாக நடித்திருக்கும் பூஜாஸ்ரீதான். அவருடைய சின்னச் சின்ன பார்வைகள் மிகவும் மட்டுமே நம்மை அந்த நிமிடத்தில் திரையை கவனிக்க வைத்திருக்கிறது.

படத்திற்கு இசையமைத்திருக்கும் அட்வின் ராஜாவை பாராட்டலாம். அவருடைய பாடல்கள் ஓரளவுக்கு கேட்கும் ரகமாக அமைந்துள்ளது.

சின்ன பட்ஜெட் படம் என்றாலும் அதையும் மிக அழகாக எடுக்க கூடிய அளவுக்கு திறமைசாலி இயக்குநர்கள் எத்தனையோ பேர் இங்கே இருக்கிறார்கள். ஆனால், இப்படியொரு மொக்கைத்தனமாக ஒரு படத்தை எடுத்துக் கொண்டு வந்து அதையும் தியேட்டரில் போட்டு காட்டி திரையரங்கங்களுக்குக் கொண்டு வருவதற்கு மிகப் பெரிய தைரியம் வேண்டும். அந்த தைரியம் இந்த படக் குழுவிற்கு இருக்கிறது என்று சொல்லலாம்.

RATING : 1 / 5

Our Score