full screen background image

“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..!

“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..!

செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜோன்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் ‘அதோ  அந்த  பறவை  போல’. 

அட்வெஞ்சர் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் நடிகை அமலா பால் கதையின் நாயகியாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் மூத்த நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி வனத்துறை அதிகாரியாக முக்கிய  கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அத்துடன்  ஐ.பி.எல்.  வர்ணனையாளரும்  ‘ஜனத்’,  ‘ஹவுஸ்ஃபுல்-3’,  ‘டேஞ்சரஸ் ஐசக்’  உள்ளிட்ட  பாலிவுட்  படங்களில் நடித்தவருமான  சமீர்  கோச்சார்  மற்றொரு  முக்கிய  கதாபாத்திரத்தில்  நடித்திருக்கிறார்.  பிரவீன்  என்ற  குழந்தை  நட்சத்திரம்  இந்தப்  படத்தின்  மூலம்  தமிழ் சினிமாவில்  அறிமுகமாகிறார்.

adho-andha-paravai-pola-poster-1

ஒளிப்பதிவு – சாந்தகுமார், இசை – ஜேக்ஸ் பிஜோய், படத் தொகுப்பு – ஜான் ஆப்ரகாம், கலை இயக்கம் – சரவணன், சண்டை இயக்கம் – சுப்ரீம் சுந்தர், எழுத்து -அருண் ராஜகோபாலன், இயக்கம் – கே.ஆர்.வினோத்.

இயக்குநர் கே.ஆர்.வினோத்துக்கு இது முதல் படமாகும். இவர்  ‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ என்கிற படத்தில்  இணை  இயக்குநராகப் பணியாற்றியவர்.  மேலும், சில  தொலைக்காட்சி  விளம்பரங்களையும்  இயக்கியிருக்கிறார். 

இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் தயாரிப்பாளர் ஜோன்ஸ், நடிகை அமலாபால், இயக்குநர் கே.ஆர்.வினோத் உள்ளிட்ட படக் குழுவினருடன் தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ், இயக்குநர் திருமலை ஆகியோரும் கலந்து கொண்டனர்.

team (2)

தயாரிப்பாளர் ஜோன்ஸ் பேசும்போது, “நான் இதற்கு முன்னர் பல திரைப்படங்களை என் நண்பரான தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் உடன் இணைந்து தயாரித்துள்ளேன்.

‘மைனா’ படத்தில் இருந்து அமலாபால் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். ‘அதோ அந்த பறவை போல’ படத்தில் அவரின் அர்ப்பணிப்பு ரொம்ப உணர்வுப்பூர்வமானது.

இத்திரைப்படம் மிக, மிக வித்தியாசமான கதை. அமலாபாலிடம் இந்தக் கதையை சொன்னதும் எந்த யோசனையும் இல்லாமல் ‘ஓ.கே.’ என்றார். இந்தப் படத்தை இயக்குநர் கே.ஆர்.வினோத் சிறப்பாக இயக்கித் தந்துள்ளார்…” என்றார்.

Amala paul (4)

நடிகை அமலாபால் பேசும்போது, “இந்தப் படம் எனக்கு ரொம்பவும் சந்தோசத்தைக் கொடுத்தது. தயாரிப்பாளருக்குக் கண்டிப்பாக நல்ல லாபத்தைக் கொடுக்கும். காரணம் படத்தின் கதை. ஒரு இளம்பெண் எந்த உதவியுமே இல்லாம தனி ஆளா காட்டுல சிக்கிக்கிட்ட பிறகு அதுல இருந்து எப்படி வெளியில வர்றாங்கறதுதான் இந்தப் படத்தின் கதை.

இன்னிக்கு நாடு இருக்கற நிலையில் பெண்கள் பாதுகாப்புங்கறது எந்த அளவுக்கு இருக்குங்கிறதுதான் பெரிய விவாதமா இருக்கு. இந்த சூழ்நிலையில இப்படி ஒரு படம் வர்றது ஒட்டு மொத்தப் பெண்களுக்கான படமாக இருக்கும்.

இந்தப் படத்தோட டீம் பக்காவா திட்டமிட்டு உழைச்சாங்க. கதை சொல்லும்போதுகூட பக்காவா பிளான் பண்ணிட்டுத்தான் வந்திருந்தாங்க. கதை ஆசிரியர் அருண் அவ்வளவு திறமையா இந்த கதையை எழுதி இருந்தாரு.

இந்தப் படத்துக்காக புதுசா ‘கிராமகா’ என்னும் தற்காப்பு கலையை கத்துக்கிட்டேன். ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர்கூட ஒரு சண்டை போட்டுருக்கேன். அந்த சண்டை நிச்சயம் பெரிதாகப் பேசப்படும்.

படம் ஷூட் போறதுக்கு முன்னாடியே எனக்கான ஸ்டண்ட் காட்சிகளை ஷூட் பண்ணி டெமோ காட்டி எனக்கு நம்பிக்கை கொடுத்தாங்க. இயக்குநர் வினோத், நிர்வாக தயாரிப்பாளர் கவாஸ்கர், கதாசிரியர் அருண் இவர்கள் எல்லாம் பெரிய போராட்டத்தைச் சந்தித்து இருக்கிறார்கள். இவர்கள் கஷ்டம் முன்னாடி படத்தில் நான் பட்ட கஷ்டம் எல்லாம் ஒன்றுமே இல்லை.

ரொம்ப இளமையான டீம். இவர்கள் இருக்கிற படத்தில் நான் இருக்கிறது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. ஒரு ஹீரோயின் காட்டுக்குள் ஆக்‌ஷன் பண்ணா எப்படி இருக்கும் என்று ஒரு பேச்சு இருந்தது. ஆனால் கதை அதை சரி செய்துவிடும்.

எங்க டீமில் எல்லாரும் பெண்கள் பலத்தை உணர்ந்தவர்கள். தயாரிப்பாளர் ஜோன்ஸ் ‘மைனா’வில் இருந்தே நல்ல நண்பர். சிறுவன் பிரவீன் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறான். நிச்சயமாக அவனுக்கு தேசிய விருது கிடைக்கும். மேலும் இந்த படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

என்னோடு நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் வேலை செய்த அனைவரும் இப்படத்தை ஒரு பேஷனாக எடுத்து வேலை செய்தார்கள். இந்தப் படத்திற்காக நான் கற்றுக் கொண்ட தற்காப்பு கலை, எனக்கு நிஜ வாழ்க்கையிலும் ரொம்ப தைரியத்தைக் கொடுத்துள்ளது.

இப்போதெல்லாம் கதை பிடித்திருந்தால் மட்டுமே படங்களில் நடிக்கிறேன். கதாநாயகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க நிறைய நடிகைகள் இருக்கிறார்கள். அதெல்லாம் எனக்குத் தேவையில்லைன்னு நினைக்கிறேன்…” என்றார்.

Director KR Vinoth

இயக்குநர் கே.ஆர்.வினோத் பேசும்போது, “என்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள் இல்லாமல் எனக்கு இந்த மேடை அமைந்திருக்காது. என் உழைப்பை நம்பி வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. மற்றும் என்னுடைய படக் குழுவினருக்கு நன்றி.

எங்கள் படத்தில் அமலாபால் ஹீரோயின் இல்லை; ஹீரோ. அவரை அப்படித்தான் அழைத்து வருகிறேன். அமலாபாலுக்கு இந்தப் படம் ரொம்பவும் சிறப்பா இருக்கும் என்று நம்புகிறோம். சண்டைக் காட்சிகளை எல்லாம் நாங்கள் முன்கூட்டியே திட்டமிட்டு அமலாபாலிடம் காட்டினோம். அதைப் பார்த்து பயிற்சி செய்து படத்திற்கு தயாரானார். அதை அப்படியே படப்பிடிப்பில் மிகச் சிறப்பாக செய்துவிட்டார்.

Amala paul (3)

60 அடி உயரமுள்ள மரத்தில் இருந்து இறங்குவது, சண்டை போடுவது என நடிப்பில் அமலாபால் அசத்தியுள்ளார். குறிப்பாக சேற்றுக்குள் இறங்கி மூச்சு விடாமல் நடிக்க வேண்டும் அதை நாங்கள் நினைத்து பார்க்க முடியாதளவிற்கு நடித்து கொடுத்தார். இந்த தைரியம் யாருக்கு வரும். எல்லாருக்கும் பிடிக்கும் வகையில் படம் சிறப்பாக வந்திருக்கிறது…” என்றார்.

Our Score