பல வெற்றிப் படங்களை கொடுத்திருக்கும் தயாரிப்பாளர் சி.வி.குமாரின் திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் அடுத்த படைப்பான ‘அதே கண்கள்’ திரைப்படம் நாளை வெளியாகிறது.
பல அறிமுக இயக்குநர்களுக்கு வெற்றி வாய்ப்புகளை அளித்து அவர்களை அறிமுகப்படுத்தியிருக்கும் திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் இந்த ‘அதே கண்கள்’ திரைப்படத்தின் மூலம் ரோகின் வெங்கடேசன் என்னும் புதிய இயக்குநர் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் கலையரசன் கதாநாயகனாகவும், ஜனனி ஐயர், ஷிவதா கதாநாயகிகளாகவும் நடிக்க, பால சரவணன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், ‘ஊமை விழிகள்’ படத்தின் இயக்குநரான அரவிந்தராஜ், இந்தப் படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் அபிஷேக், சஞ்சய், லிங்கா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
சண்டை பயிற்சி – ஹரி தினேஷ், கலை – விஜய் ஆதிநாதன், மக்கள் தொடர்பு – நிகில் முருகன், ஒளிப்பதிவு – ரவிவர்மன் நீலமேகம், இசை – ஜிப்ரான், பாடல்கள் – உமாதேவி, பார்வதி, படத் தொகுப்பு – லியோ ஜான்பால், வசனம் – முகில், கதை, திரைக்கதை, ரோகின் வெங்கடேசன், முகில், தயாரிப்பாளர் – C.V.குமார், இயக்கம் – ரோகின் வெங்கடேசன். இவர் இயக்குநர் விஷ்ணுவர்த்தனிடம் இணை இயக்குநராகப் பயின்றவர்.
படம் பற்றிப் பேசிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன், “சமையல் கலைஞனான வருண், தனியாக ஒரு ரெஸ்ட்டாரண்ட்டை நடத்தி வருகிறான். பத்திரிகையாளரான சாதனா, வருணின் நீண்ட காலத் தோழி. அவனை மனதார விரும்புகிறாள். சாதனா, வருணின் பெற்றோரைச் சந்தித்து, தனது திருமண ஆசையைத் தெரிவிக்கிறாள்.
அதே சமயம் வருண், துணிக்கடை ஒன்றில் வேலை பார்க்கும் தீபா என்ற பெண்ணைச் சந்திக்கிறான். அந்தச் சந்திப்பு வளர்ந்து காதலாகக் கனிகிறது. மூன்று பேரும் தங்கள் திருமணக் கனவினை நோக்கி நகரும் வேளையில் அசாதாரணமான நிகழ்வுகளும் திருப்பங்களும் அவர்களது வாழ்க்கையைப் புரட்டி போடுகின்றன. மூவரது விதியும் என்னவானது என்பதே ‘அதே கண்கள்’ சொல்லும் கதை.
ஹீரோ வருண் கண் பார்வையில்லாதவர் என்பதால் டைட்டில் இதற்கு பொருத்தமானதாக இருக்க வேண்டுமே என்றெண்ணிதான் ‘அதே கண்கள்’ என்ற தலைப்பை தேடிப் பிடித்து வாங்கி வைத்திருக்கிறோம்.
மூன்று பேர் பங்கு கொள்ளும் முக்கோணக் காதல் இதில் இருந்தாலும் படத்தில் காதலே பிரதானமல்ல. ஆனால் ஆணுக்கும், பெண்ணுக்குமான புரிதல்கள் இதில் முக்கியப் பங்காக இருக்கிறது.
ஒரு சம்பவம் எப்படி அந்த மூவரையும் பாதிக்கிறது. அதிலிருந்து அவர்கள் எப்படி விடுபடுகிறார்கள் என்பதுதான் திரைக்கதை. இப்போதைய ஜெனரேஷனுக்கு ஏற்றாற்போல் காதலையும், அதனால் ஏற்படும் விளைவுகளை எப்படி அணுகுவது என்பது பற்றியும் இதில் தெளிவாகச் சொல்லியிருக்கிறோம்.
இதில் வருணாக கலையரசனும், சாதனாவாக ஜனனி ஐயரும், தீபாவாக ஷிவதா நாயரும் நடித்திருக்கிறார்கள். பாலசரவணன் கதையை நகர்த்தும் ஒரு முக்கியக் கேரக்டரில் நடித்திருக்கிறார்.
ஒரு பக்கம் பார்த்தால் இந்தப் படம் காதலும், திகிலும் கலந்த ஒரு ரொமாண்டிக் திரில்லர் படம். முதலில் பார்வையற்றவராக இருக்கும் ஹீரோ வருணுக்கு இடையில் பார்வை திரும்பக் கிடைக்கிறது. இந்தப் பார்வை கிடைக்கும்வரையிலும் இவர்கள் மூவருக்கும் இடையில் முக்கோணக் காதல் இருக்கும். ஆனால் வருணுக்கு கண் பார்வை கிடைத்தவுடன் எப்படி கிடைத்தது என்பது தொடர்பான பிரச்சினையில் கதை திரில்லராக மாறிவிடும்.
இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி, ஈரோடு ஆகிய இடங்களில் நடைபெற்றது. படம் மிக விரைவாக முடிவடைந்தாலும் நல்லதொரு தருணத்திற்காக காத்திருந்தோம். அது இப்போது நாளைய தினமாக எங்களுக்குக் கிடைத்துள்ளதால் உலகம் முழுவதும் எங்களது அதே கண்கள் படம் தமிழ்ச் சினிமா ரசிகர்கள் கண்களின் பார்வைக்கு வருகிறது. ரசிகர்கள் இந்த முதல் இயக்குநரின் முதல் முயற்சியை பாராட்டி ஊக்குவிக்க வேண்டும் என்று பெரிதும் எதிர்பார்க்கிறேன்…” என்றார் நெகிழ்ச்சியுடன்.
படம் வெற்றியடைய பெரிதும் வாழ்த்துகிறோம்..!