full screen background image

அடுத்தக் கதைத் திருட்டு வழக்கினை ‘அப்புச்சி கிராமம்’ திரைப்படம் பெறுகிறது..!

அடுத்தக் கதைத் திருட்டு வழக்கினை ‘அப்புச்சி கிராமம்’ திரைப்படம் பெறுகிறது..!

‘கத்தி’ படத்தின் கதை திருட்டு பஞ்சாயத்தே இன்னமும் முடியவில்லை. அதற்குள் அடுத்த  கதை திருட்டும் வெளியாகிவிட்டது.

இந்த முறை கதைத் திருட்டில் குற்றம்சாட்டப்பட்டுள்ள படம், ‘அப்புச்சி கிராமம்’. “இந்தப் படத்தின் கதை, தான் 3 ஆண்டுகளுக்கு முன்பே எழுதியது..” என்கிறார் இப்போது இந்தக் கதைக்குச் சொந்தம் கொண்டாடும் ரவி இன்பா என்கிற உதவி இயக்குநர்.

இந்தக் கதையை எழுதி முடித்துவிட்டு சில தயாரிப்பாளர்களிடமும், நடிகர்களிடமும், கேமிராமேன்களிடமும் வாய்ப்புக்காக கதையைப் படிக்கக் கொடுத்திருக்கிறார். சில நாட்கள் கழித்துதான் அதனை வாங்கியிருக்கிறார்.

இப்போது ‘ரோமியோ ஜூலியட்’ படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளர் நந்தகுமாரிடம், இந்தக் கதையைச் சொல்லி ஓகே வாங்கி தயாரிக்கும் பணிக்காக அவரது அலுவலகத்தில் 2 மாதங்கள் அமர்ந்து பட தயாரிப்பு வேலைகளையும் செய்திருக்கிறார் ரவி இன்பா. ஆனால் வேறு சில காரணங்களினால் அப்போது அது தயாரிக்கப்படவில்லை.

ஒரு விண் கல் பூமியைத் தாக்கப் போவதாக கிளம்பும் செய்தியாலும், அதே கல் ஒரு கிராமத்தில் வந்து விழுவதால் ஏற்படும் சம்பவங்களும்தான் தான் எழுதிய கதையின் கரு என்கிறார் ரவி இன்பா.

‘அப்புச்சி கிராமம்’ படத்தின் கதையைப் படித்தவுடன் ஆவேசமாக தனது முகநூல் பக்கத்தில் கடந்தாண்டு மே மாதம் தன்னுடைய கதையின் திரைக்கதையை எழுத ஆரம்பித்தவர், பின்பு நண்பர்களின் ஆலோசனைக்கேற்ப ஒரு பாகத்துடனேயே நிறுத்திக் கொண்டார்.

இது தொடர்பாக அப்புச்சி கிராமம் படத்தின் இயக்குநர் ஆனந்த் மற்றும் தயாரிப்பாளரிடம் இது குறித்து பேசியிருக்கிறார் ரவி இன்பா. “நீங்க நினைச்சது மாதிரி இன்னொருத்தர் நினைக்கக் கூடாதா..? இது என்னோட சிந்தனையில் உதித்தது..” என்று சொன்னாராம் இயக்குநர் ஆனந்த்.

‘அப்புச்சி கிராமம்’ திரைப்படம் நாளை மறுநாள் ரிலீஸாகவிருப்பதால் வேறு வழியில்லாமல் இன்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். ‘அப்புச்சி கிராமம்’ படத்தை வெளியிட தடை கேட்டுள்ளாராம். இந்த வழக்கு இன்று மதியம் விசாரணைக்கு வரவிருக்கிறதாம்.

“ஏன் கடைசி நேரத்தில் இந்த வேலை..?” என்று கேட்டதற்கு, “அவர்களிடம் பேசி பேசி பார்த்தோம். அதோடு எழுத்தாளர் சங்கத்தையும் அளவுக்கதிகமாக நம்பிவிட்டேன். அவர்களும் இப்போதுவரையிலும் எதையும் செய்யவில்லை. அதனால்தான் வேறு வழியில்லாமல் இப்போது நீதிமன்றத்திற்கு போக வேண்டிய நிலை. அந்தக் கதைக் கரு அந்த இயக்குநருக்கும் தோன்றியதாக இருக்கலாம். ஆனால் திரைக்கதை, வசனம் என்னுடையது என்பதை அந்தப் படத்தில் பணியாற்றியவர்கள் மூலமாக அறிகிறேன். அதனால்தான் துணிந்து தைரியமாக வழக்கு தொடுத்துள்ளேன்..” என்கிறார் உதவி இயக்குநர் ரவி இன்பா.

இவர் பற்றிய இன்னொரு செய்தி. “கத்தி’ படத்தின் டைட்டில் என்னுடையதுதான். எனக்குத் தெரியா்மலேயே எனது படத்தை தயாரிப்பதாக இருந்த தயாரிப்பாளர் ‘கத்தி’ டைட்டிலை விற்றுவிட்டார்..” என்று நீதிமன்றத்தில் வழக்கு போட்டவர் இந்த ரவி இன்பாதான். அந்த வழக்கினை தொடர்ந்து நடத்த முடியாத சூழலினால் கைவிட்டார். இப்போது இந்த வழக்கையும் வேறு வழியில்லாத சூழலில் தொடர்ந்திருக்கிறாராம்..

இதில் இன்னொரு சுவாரஸ்யம்.. ‘அப்புச்சி கிராமம்’ படத்தின் இயக்குநரான ஆனந்த், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் சீடர்..!

Our Score