full screen background image

மூத்தக் கலைஞர்களை கண்டு கொள்ளுங்கள்.. இயக்குநர் மகேந்திரனின் வேண்டுகோள்..!

மூத்தக் கலைஞர்களை கண்டு கொள்ளுங்கள்.. இயக்குநர் மகேந்திரனின் வேண்டுகோள்..!

திரையுலகில் இருந்து ஓய்வு பெற்றவர்கள்.. ஒதுங்கியிருக்கும் மூத்த கலைஞர்களை திரையுலகம் விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் இயக்குநர் மகேந்திரன்.

நேற்றைய பிரஸ்மீட்டில் மகேந்திரன் சொன்ன ஒரு விஷயம் உண்மையாகவே மனதை கஷ்டப்படுத்தியது. மிகச் சிறந்த ஒளிப்பதிவாளரான அசோக்குமார் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் மிகக் கஷ்டமான நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார் மகேந்திரன். “அவரை மாதிரியான கலைஞர்களை அப்படியே விட்டுரக் கூடாது.. அவருக்கு பைனான்ஸியலா யாரும் ஹெல்ப் செய்யணும்னு சொல்ல்லை. ஆனால் நலம் விசாரிக்கலாமே..? எப்படியிருக்கீங்கன்னு கேக்கலாம்..! நமது மூத்தக் கலைஞர்களுக்கு இதுகூட செய்யலைன்னா எப்படி..?” என்றார் இயக்குநர் மகேந்திரன்..

மகேந்திரன் இப்படி உருகியற்குக் காரணம் இருக்கிறது. மகேந்திரனின் முதல் படமான ‘முள்ளும் மலரும்’ படத்திற்கு ஒளிப்பதிவு பாலுமகேந்திரா. ஆனால் அதற்கடுத்து மகேந்திரன் இயக்கிய ‘உதிரிப்பூக்கள்’, ‘ஜானி’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘நண்டு’, ‘கை கொடுக்கும் கை’ போன்ற படங்களுக்கு அசோக்குமார்தான் கேமிராமேன்.

ashokkumar-1

‘நெஞ்சத்தை கிள்ளாதே’ படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருதையும் பெற்றிருந்தார் அசோக்குமார். ‘ஜானி’ படத்தின்போது அசோக்குமாரிடம் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய நடிகை சுஹாசினியை, இயக்குநர் மகேந்திரன்தான், ‘நெஞ்சத்தை கிள்ளாதே’ படத்தில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தினார்.

suha-1

‘உல்லாச பறவைகள்’, ‘காளி’, ஸ்ரீதரின் ‘யாரோ எழுதிய கவிதை’, பாண்டியராஜனின் ‘கன்னிராசி’, ‘பிள்ளை நிலா’, ‘வெற்றி விழா’, ஷங்கரின் ‘ஜீன்ஸ்’, ‘மை டியர் மார்த்தாண்டன்’, ‘வசந்த காலப் பறவை’, ‘சூரியன்’, ‘மகுடம்’, ‘மன்னன்’, ‘நடிகன்’, ‘இந்து’, ‘கட்டுமரக்காரன்’, ‘கோவில்பட்டி வீரலட்சுமி’ போன்ற படங்களும் அசோக்குமாரின் கைவண்ணம்தான். இதைவிட முக்கியமானது 25 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட முதல் 3-டி படமான ‘மை டியர் குட்டிச்சாத்தானின்’ ஒளிப்பதிவும் அசோக்குமார்தான்.

ஒளிப்பதிவு மட்டுமில்லை.. ‘தம்பிக்கு ஒரு பாட்டு’, ‘அன்று பெய்த மழையில்’ என சில படங்களையும் இயக்கியிருக்கிறார். ‘அன்று பெய்த மழையில்’ படத்தில் சில்க் ஸ்மிதாவை மிக அழகாக பதிவு செய்திருக்கிறார் அசோக்குமார். சில்க் ஸ்மிதாவே பல பேட்டிகளில் இதனைச் சொல்லியிருக்கிறார். ஒளிப்பதிவில் அசோக்குமார் பி.சி.ஸ்ரீராமுக்கு முன்னோடி என்று அழைக்கப்படுபவர். கிட்டத்தட்ட இருவரின் ஒளிப்பதிவு ஸ்டைலும் ஒன்று போலவே இருக்கும் என்பார்கள் திரையுலகத்தினர்.

சினிமாவுலகில் இருந்து கொஞ்சம் விலகியிருந்தாலே ஆள் இல்லை என்றே முடிவு கட்டிவிடுவார்கள் திரையுலகத்தினர். அதுதான் இவருக்கும் நேர்ந்திருக்கிறது போல. இவருடைய மகன் ஆகாஷை நடிக்க வைத்து இயக்கமு்ம் செய்தார். ஆனாலும் இவருடைய புகைப்படங்கள்கூட இணையத்தில் கிடைக்காதது நமது துரதிருஷ்டம்தான்.

இவர் போன்ற சிறந்த கலைஞர்கள் இவ்வளவு தூரம் கஷ்டப்படுவதை நினைத்தால் சங்கடமாக இருக்கிறது.. இவரைப் போலத்தான் பிரபல ஒளிப்பதிவாளர் மது அம்பட்டும் சில ஆண்டுகளுக்கு முன்னால் பக்கவாத நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின்னர் இப்போது மீண்டு வந்து படங்களில் ஒளிப்பதிவு செய்து வருகிறார். அவரை போல அசோக்குமாரும் மீண்டு வரட்டும் என்று பிரார்த்திப்போம்..!

Our Score