படத்தில் ஒரு சிறிய காட்சி என்றாலும், அதை இயற்கையாகவும், இயல்பாகவும்தான் எடுக்கப்பட்டாக வேண்டும் என்ற தனித்துவமான எண்ணம் கொண்டவர் இயக்குநர் பாலா. அவரிடம் இணை இயக்குநராக பணியாற்றி அனுபவம் பெற்ற சுந்தர இளங்கோவன், இயக்கியிருக்கும் முதல் திரைப்படம்தான் ‘அர்த்தநாரி’.
ஆக்ஷன் கலந்த உணர்ச்சிகரமான பொழுது போக்கு திரைப்படமாக உருவாகியுள்ள இந்த ‘அர்த்தநாரி’ படத்தில் ஆக்ஷன், காதல், செண்டிமெண்ட், காமெடி மட்டுமில்லாமல் சமூகத்திற்கு தேவையான முக்கிய செய்தியையும் உள்ளடக்கியிருக்கிறார் அர்த்தநாரி படத்தின் இயக்குநரான சுந்தர இளங்கோவன்.
“அநீதிக்கு எதிராக வெகுண்டு எழும் இரண்டு இணைந்த சக்திகளே ‘அர்த்தநாரி’. எனக்கு படம் ஓகே ஆன அடுத்த நொடியே நான் சந்தித்தது எனது குருநாதர் பாலா சாரைதான். இன்னமும் அவர் கூறிய, ‘முதல் படம்.. நன்றாகவும், கவனமாகவும் பண்ணு..’ என்ற வார்த்தைகள் என் காதில் ஒலித்து கொண்டே இருக்கிறது.
நம் சமூகத்தில் கட்டுக்குள் அடங்காமல் நடக்கும் கொடுமைகளை, ஹீரோ தர்மத்தின் வழியிலும், ஹீரோயின் சட்டத்தின் வழியிலும் தடுக்கிறார்கள்..! அது அவர்களின் காதல் வாழ்க்கையில் என்ன விளைவுகளை ஏற்படுத்தியது என்பதே இந்த ‘அர்த்தநாரி’ திரைப்படத்தின் கதை.
இந்த நேரத்தில் மிக முக்கியமாக குறிப்பிட வேண்டியவர் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் முத்தமிழ் செல்வன். திரைப்படத்தின் கதையை எழுதியதுடன் ஒரு தயாரிப்பாளாராக சகலவித ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.
நடிகர் நாசர், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், கதாநாயகன் ராம்குமார், கதாநாயகி அருந்ததி, முத்துராமன் போன்றவர்கள் மிகுந்த அர்ப்பணிப்போடு பணியாற்றியது மறக்க முடியாதது..!
அற்புதமான பாடல் வரிகளை எழுதி கொடுத்த கபிலன், அந்த பாடல் வரிகளுக்கு இனிய இசையமைத்துக் கொடுத்த செல்வ கணேஷ், ஒளிப்பதிவு செய்த ஸ்ரீரஞ்சன் ராவ், படத் தொகுப்பாளார் சுரேஷ் அர்ஸ் ஆகியோரின் பங்கு மகத்தானது.
வரும் ஜூலை எட்டாம் தேதி வெளியாகும் எங்களின் ‘அர்த்தநாரி’ திரைப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் என பெரிதும் நம்புகிறேன்..” என்று நம்பிக்கையோடு கூறினார் இயக்குநர் சுந்தர இளங்கோவன்.