‘மெய்யழகன்’ படம் வரும் செப்-27 (புரட்டாசி 11) ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் கிளர்வோட்டம் (Traser) வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று மாலை சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் ரசிகர்கள் முன்னிலையில் இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கார்த்தி, அர்விந்த்சாமி உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டனர்.
நடிகர் அர்விந்த்சாமி பேசும்போது, “இந்த படத்தில் எனது கதாபாத்திரத்தை என்னை மனதில் வைத்துக்கொண்டு எழுதியதற்காக பிரேம் குமாருக்கு நன்றி. இது என் வாழ்க்கையில் நடந்த கதை. என்னை மிகவும் பாதித்த கதை. இப்போதும் பாதிக்கின்ற ஒரு விஷயம். அது பற்றி பட ரிலீசுக்கு பிறகு பேசுகிறேன்.
கார்த்தியுடன் இந்த படத்தில் நடித்தபோது மட்டுமல்ல, அதன் பிறகு தற்போது வெளியேயும் நல்ல உறவில் நெருக்கமாகி விட்டோம். கார்த்தி அண்ணா என்னைப் பற்றி உங்களிடம் ஏதாவது சொல்வார். ஆனால் அதை எல்லாம் நம்பாதீர்கள்.
அரவிந்த்சாமி மாதிரி மாப்பிள்ளை வேண்டும் என்று பெண்கள் கேட்பதாக சொன்னீர்கள். ஆனால் அப்படி கேட்பவர்களுக்கு என்னைப் பற்றி சரியாக தெரியாது என்று நினைத்துக் கொள்வேன்…” என்று கூறினார்.