கடந்த வெள்ளியன்று வெளியான ‘அரண்மனை’ திரைப்படம், 1978-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினி, விஜயகுமார், லதா, ஸ்ரீதேவி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் கதையை போலவே இருந்தது என்பதை படம் பார்த்த பலரும் சொல்லியிருந்தார்கள்.(படத்தின் விமர்சனம் இந்தப் பதிவில் உள்ளது)
இதனைக் கேள்விப்பட்ட ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் தயாரிப்பாளர் எம்.முத்துராமன், சென்னை 12-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில், ‘அரண்மனை’ படத்தை தடை செய்ய வேண்டும் என்று வழக்கு தொடுத்துள்ளார்.
அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “தமிழ்த் திரையுலகத்தில் கடந்த 35 ஆண்டுகளாக தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் இருந்து வருகிறேன். இதுவரை 26 திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளேன். இதில் பெரும்பாலான படங்கள் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளன.
கடந்த 1978-ம் ஆண்டு நடிகர்கள் ரஜினிகாந்த், விஜயகுமார், ஸ்ரீதேவி, லதா ஆகியோர் நடித்த ‘ஆயிரம் ஜென்மங்கள்’ என்ற படத்தை தயாரித்து வெளியிட்டேன். இந்த படம் அந்த காலத்தில் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. இந்த நிலையில், இதே படத்தை ‘ஆயிரம் ஜென்மங்கள் பாகம் 2’ என்ற தலைப்பில் மீண்டும் தயாரிக்க முடிவு செய்திருந்தேன்.
இந்த படத்தை, பிரபல இயக்குனர் செல்வா என்ற செல்வகுமாரை இயக்குனராக தேர்வு செய்து, அவருக்கு முன் தொகையாக 25 லட்சம் ரூபாயையும் கொடுத்துள்ளேன். மேலும், வேறு சில தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் முன்பணம் கொடுத்துள்ளேன்.
இந்த நிலையில், சினிமா துறையை சேர்ந்த எடிட்டர்கள், மக்கள் தொடர்பாளர்கள் மற்றும் பிறர் மூலம் ‘அரண்மனை’ என்ற பெயரில் தற்போது வெளியாகியுள்ள படம், ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தை கதையை ‘ரிமேக்’ செய்து தயாரிக்கப்பட்டுள்ளது என்று எனக்கு தகவல் தெரியவந்தது.
இந்த படத்தை ‘விஷன் ஐ மீடியா’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இயக்குநர் சுந்தர் சி இயக்கியுள்ளார். ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தை அவர்கள் மீண்டும் வேறு பெயரில் எடுத்துள்ளது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலில் கடந்த 1-ந் தேதி புகார் செய்தேன். அங்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ‘அரண்மனை’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்..” என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி விஷன் ஐ மீடியா நிறுவனம், இயக்குனர் சுந்தர் சி உள்ளிட்டோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.









