full screen background image

‘அரண்மனை-3’ – சினிமா விமர்சனம் 

‘அரண்மனை-3’ – சினிமா விமர்சனம் 

இந்த ‘அரண்மனை-3’ படத்தை அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் நடிகை குஷ்பு தயாரித்துள்ளார். 

இப்படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, சுந்தர்.சி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, விவேக், யோகி பாபு, ஆண்ட்ரியா, மனோபாலா, சம்பத், சாக்‌ஷி அகர்வால், மதுசூதன ராவ், வின்சென்ட் அசோகன், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்கம் – சுந்தர்.சி, தயாரிப்பு நிறுவனம் – அவ்னி சினிமேக்ஸ், தயாரிப்பாளர் – குஷ்பு  சுந்தர், ஒளிப்பதிவு – U.K.செந்தில்குமார், இசை – C.சத்யா,  படத் தொகுப்பு – ஃபென்னி ஆலிவர், கலை இயக்கம் – குருராஜ், சண்டை பயிற்சி – பீட்டர் ஹெய்ன், தளபதி தினேஷ், பிரதீப் தினேஷ், நடனம் – பிருந்தா, தினேஷ், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அஹ்மத்.

2014-ல் வெளியான அரண்மனை’ முதல் பாகத்தைப் போலவே இந்த மூன்றாம் பாகத்தின் கதையோட்டமும் பேய்களின் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று அக்மார்க் சுந்தர்.சி.யே ரிப்பீட் அடித்தது போல இருக்கிறது. ஆனால் புதுசு போல உட்கார வைத்து பிரமிப்புடன் வெளியில் அனுப்பியிருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி.

தன்னுடைய அரண்மனையில் பேய் இருப்பதாகச் சொல்லும் தனது மகளை ஹாஸ்டலில் தங்கிப் படிக்க வைக்கிறார் ஜமீன்தார் சம்பத்ராஜ். மகள் படிப்பு முடிந்து வீடு திரும்பும்போது வீட்டில் கூட்டம் எக்கச்சக்கமாக இருக்கிறது.

ஜமீன்தாரின் தங்கையான நளினி.. அவரது மகளான மைனா.. இவரது கணவரான விவேக்.. மற்றும் சம்பத்தின் தங்கையான சாக்சி அகர்வாலும், அவரது சிறு வயது மகளும். இவர்களுக்கிடையில் சம்பத்தின் கையாட்களாக விச்சுவும், வின்சென்ட் அசோகனும்.

நாயகி ராஷி கண்ணா திரும்பவும் வீட்டிற்கு வந்தவுடன் பேய் இருப்பதை உணர்கிறார். அதேபோல் ஏற்கெனவே அந்த வீட்டில் இருக்கும் சாக்சியின் மகளும் அதே பேயுடன் விளையாடிக் கொண்டிருப்பதை உணர்கிறார் ராஷி.

வழக்கம்போல அப்பா சம்பத்ராஜ் இதை ஏற்க மறுத்து சலம்பல் செய்கிறார். அந்த நேரத்தில் சாக்சியின் முன்னாள் கணவரான சுந்தர்.சி தன் மகளைப் பார்க்க வீட்டிற்கு வருகிறார்.

வந்த இடத்தில் பேய் இருப்பதை கண்டறிகிறார். 1 பேய் இல்லை.. 2 பேய்கள் வீட்டிற்குள் இருப்பதை அவர் கண்டு பிடிக்கிறார். அவைகளை வீட்டில் இருந்து விரட்டிவிட்டுத்தான் மறுவேலை என்று களத்தில் இறங்குகிறார் சுந்தர் சி.

நினைத்தபடி அவர் பேய்களை விரட்டியடித்தாரா..? இல்லையா..? என்பதுதான் இந்த ‘அரண்மனை-3’ படத்தின் திரைக்கதை.

நடிப்பு என்று பார்த்தால் ஆண்ட்ரியாவுக்குத்தான் அதிக ஸ்கோப் கதையில் கிடைத்துள்ளது. வஞ்சகமில்லாமல் நடித்திருக்கிறார். திரைக்கதையும் ஜெட் வேகத்தில் நகர்வதால் அதற்கேற்றாற்போல தனது நடிப்பினை காட்சிக்குக் காட்சி வித்தியாசமாகக் காட்டியிருக்கிறார் ஆண்ட்ரியா.

பிள்ளை பாசத்தில் தன் குழந்தையைக் கொன்றுவிட வேண்டாம் என்று துடிக்கும் அந்தக் காட்சியில் ஆண்ட்ரியாவின் நடிப்புத் திறமைக்கு மிகப் பெரிய வாய்ப்பளித்திருக்கிறார் இயக்குநர். ஆண்ட்ரியாவும் குறை வைக்காமல் நடித்திருக்கிறார். பாராட்டுக்கள்.

அடுத்துப் பாராட்டை பெறுபவர்கள் விவேக், யோகிபாபு, மனோபாலா கூட்டணி. தனது கடைசி படமான இதில் தனது முத்திரையை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் விவேக். கல்யாணமாகி 15 வருடங்களாகியும் கன்னி கழியாமல் இருக்கும் தனது சோகத்தைச் சொல்லும் காட்சியிலும். அடுத்தடுத்து தான் இருக்கும் காட்சிகளிலெல்லாம் சிரிப்பலையை உண்டு செய்கிறார் விவேக்.

இதேபோல திருடர்களான யோகிபாபுவும், மனோபாலாவும் சேர்ந்து செய்யும் சேட்டைகளும், மனோபாலாவின் முட்டாள்தனமான செயல்களால் வெறுப்பாகும் யோகிபாபுவின் கதையும் படத்தின் விறுவிறுப்பான ஓட்டத்திற்கு உறுதுணையாய் நிற்கின்றன.

படத்தின் நாயகன் ஆர்யாதான் என்று சொன்னாலும், இடைவேளைக்கு பின்பு மிக முக்கியமான காட்சிகளில் அவர் காணாமல் போவது சற்று ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால், ஆர்யா எங்கே? என்ற கேள்வி படம் பார்ப்பவர்கள் மனதில் தோன்றாத வகையில், மற்ற நட்சத்திரங்கள் படத்தை நகர்த்தி செல்கிறார்கள்.

இந்தப் படத்திற்கு சுந்தர்.சி தேவையே இல்லை. ஆர்யாவையே அந்த வேலையை செய்ய வைத்திருக்கலாம். ஆனால், அரண்மனை’யின் தொடர்ச்சியில் கண்டிப்பாக தான் இருக்க வேண்டும் என்பதால் தன்னை முன்னிலைப்படுத்தியிருக்கிறார் சுந்தர்.சி என்பது தெளிவாகத் தெரிகிறது.

நளினியின் டிக் டாக் அலப்பறையும், விவேக்-மைனா தம்பதியரின் சண்டையும், மைனா-ஆர்யாவின் இல்லீகல் காதலும் இன்னொரு பக்கம் சிரிக்க வைத்துக் கொண்டேயிருக்கிறது.

ஜமீன்தாரான சம்பத்ராஜ் தனது கம்பீர நடிப்பைக் காண்பித்திருக்கிறார். மேலும், வேல ராமமூர்த்தி, மதுசூதன ராவ், வின்செண்ட் அசோகன், விச்சு விஸ்வநாதன் என்று அத்தனை பேருமே அவரவர் கேரக்டர்களுக்கு ஏற்ற நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள். கோவில் பூசாரியாக நடித்திருப்பவருக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

சி.சத்யாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்தான். அதிலும் ஷங்கர் மகாதேவனும், ஹரிஹரனும் திரையிலும் தோன்றிப் பாடியிருக்கும் முருகன் பாடல் அசத்தல்.. அதைக் காட்சிப்படுத்தியிருப்பதும், மிகச் சரியாக திரைக்கதையில்  அதனை சேர்த்திருப்பதும் சுந்தர்.சி-யின் எழுத்துத் திறமைக்கு சான்று.

யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவில் அரண்மனையும், காடுகளும், இறுதிக் காட்சியின் செட் அமைப்பும், துர்கா தேவி சிலையின் பிரம்மாண்டமும் அழகுற காண்பிக்கப்பட்டுள்ளது. கிளைமாக்ஸ் காட்சியில் சி.ஜி.யும், கேமிராமேனும் ஒன்றாக இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். படத்தின் இறுதிக் காட்சியின் காட்சியமைப்பினாலும், இயக்கத்தினாலும் லப் டப்’ என்று நம்மை பதட்டத்திலேயே இருக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

எத்தனை நடிகர்கள் நடிப்பதாக இருந்தாலும், அவர்களை சரியான முறையில் பயன்படுத்துவதோடு, திரைக்கதையின் ஓட்டத்திற்கு ஏற்றவாறு காட்சிகளை வடிவமைக்கும் திறன் படைத்தவர் இயக்குநர் சுந்தர்.சி. இதனை அவருடைய முந்தைய பல படங்களில் செய்து காட்டியிருக்கிறார். இதிலும் அந்தத் திறமையை வெளிக்காட்டியிருக்கிறார்.

படத்தின் ஆரம்பம் முதல் முடியும்வரை, நகைச்சுவையையும், திகிலையும், மிரட்டலையும், சஸ்பென்ஸையும் ஒரு சேர கொடுத்துக் கொண்டே வந்திருக்கிறார். சஸ்பென்ஸ் கதையை சொல்ல வேண்டிய இடத்தில் அவர் சொல்லியிருப்பதும் படத்தின் வெற்றிக்கு ஒரு காரணம்.

இருந்தாலும் சில இடங்களில் காட்சிகளை நீக்கி, படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம். ஆனாலும் படத்தில் இடம் பெற்றிருக்கும் கிராபிக்ஸ் காட்சிகள்  அந்தக் குறையை போக்கிவிட்டன.

இந்த அரண்மனையில் பேய் இருப்பதை படத்தின் ஆரம்பத்திலேயே உடைத்துவிட்டார் இயக்குநர். ஆனாலும், அந்த பேய் எப்படி பேயானது என்பதற்கான சஸ்பென்ஸ் கதைக்காக நம்மை ஏங்க வைத்து, காக்க வைத்து அடுத்தது என்ன என்றும் நம்முடைய எதிர்பார்ப்பையும் கூட்டியிருக்கிறார் இயக்குநர்.

ஏற்கெனவே வந்த அரண்மனை’ பாகங்களில் இருந்து இந்தப் பாகத்தை வேறுபடுத்திக் காட்ட கடும் முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி. இதனால்தான் வழக்கமான ஒரு பேய்க்கு பதிலாக இரண்டு பேய்களை உலாவவிட்டிருக்கிறார்.

எப்படியிருந்தாலும் முதல் இரண்டு பாகங்களைவிடவும் நேர்த்தியாகவும், கச்சிதமாகவும் அமைந்திருக்கிறது இந்த மூன்றாம் பாகம்.

இன்னும் எத்தனை பாகம் எடுத்தாலும் அரண்மனை’க்கென்றே தனி ரசிகர் பட்டாளத்தை இந்தப் படத்திலும் இயக்குநர் சுந்தர்.சி திரட்டிவிட்டார் என்றே சொல்லலாம்.

RATINGS : 4 / 5

Our Score